மின்னம்பலம் மின்னம்பலம்
ஞாயிறு, 31 மே 2020

ராதிகா ஆப்தே: ‘இதுதான் சினிமா மைண்ட்செட்’!

ராதிகா ஆப்தே: ‘இதுதான் சினிமா மைண்ட்செட்’!

ராதிகா ஆப்தே இந்தியத் திரையுலகில் முக்கியமான நடிகைகளில் ஒருவர். இந்தப் புகழுக்கு நடிப்புத் திறமைக்காக 50% பொருத்தமானவர் என்றால், அதேசமயம் மனதில் தோன்றுவதை வெளிப்படையாகப் பேசுவதற்காக 50% அவர் இந்தியத் திரையுலகில் தேவைப்படுகிறார். தைரியமாக சில ரோல்களை எடுத்து நடிக்கும்போது, மற்ற நடிகைகளைப் போல சினிமாவை சினிமாவாக பாருங்கள் என்று சொல்லி நகர்ந்து சென்றுவிடாமல், இந்த சமூகம் இப்படித்தான் இருக்கிறது. அதைத்தான் நான் நடித்த கேரக்டர் சொல்லியிருக்கிறது என்று பட்டவர்த்தனமாக பேசுபவர். அதுபோலவே, இப்போது நம் சினிமாவின் ‘மைண்ட்செட்’ எப்படியிருக்கிறது என்பதை விளக்கியிருக்கிறார் ராதிகா ஆப்தே.

ராதிகா என்ன சொன்னார் என்பதை அறியும் முன்பு, பத்லபூர் என்ற திரைப்படத்தைப் பற்றித் தெரிந்துகொள்ள வேண்டும். ஒரு கொள்ளை சம்பவத்தின்போது நடைபெறும் துப்பாக்கிச் சூட்டில் தனது மனைவியையும், விபத்தில் தனது மகனையும் இழந்துவிடுகிறார் ஹீரோ. இரண்டு கொள்ளையர்களில் ஒருவர் சிக்கிக்கொள்ள இன்னொருவரை போலீஸ் கைது செய்கிறது. எவ்வளவு முயன்றும் தன்னை அனாதையாக்கிய இன்னொரு குற்றவாளியை அவரால் கண்டுபிடிக்க முடியவில்லை. எனவே, அவரது மனைவி மற்றும் மகனின் இன்சூரன்ஸ் பணத்தை வைத்துக்கொண்டு இன்னொரு குற்றவாளியைத் தேடுகிறார். பாலியல் தொழிலாளியான சிறையிலிருக்கும் குற்றவாளியின் காதலியை சந்தித்து இன்னொரு குற்றவாளியைப் பற்றி கேட்கிறார். அந்தப் பெண்ணிடமிருந்து எந்த பதிலும் கிடைக்காததால், அவரை வற்புறுத்தி நடனமாட வைத்து பாலியல் வன்புணர்வு செய்துவிடுகிறார். அந்தப் பெண்ணுக்குக் கிடைத்த தண்டனையையே தனக்கான நீதியாக எடுத்துக்கொண்டு ஊரைவிட்டு வெளியேறிவிடுகிறார்.

15 வருடங்கள் கழித்து சிறையிலிருக்கும் குற்றவாளியை மனிதாபிமான அடிப்படையில் வெளியேவிடவேண்டும் என்று சமூக செயற்பாட்டாளர் ஒருவர் ரகுவிடம் கோரிக்கை வைக்கிறார். ஹீரோ அதனை மறுத்துவிட, தனது மகனைக் காப்பாற்றும் நோக்கில் இன்னொரு குற்றவாளியின் பெயரைச் சொல்லிவிடுகிறார் சிறையிலிருக்கும் குற்றவாளியின் தாய். தான் தேடிக்கொண்டிருந்தவனின் பெயரை வைத்து அவனைக் கண்டுபிடிக்கிறார். சுகபோகமான வாழ்க்கை வாழ்ந்துகொண்டிருக்கும் அந்த குற்றவாளியை வீடு புகுந்து அடிக்கும் ஹீரோ ஒரு கட்டத்தில் அவனையும் தண்டிக்க நினைக்கிறார். அவனை வெளியே தள்ளிவிட்டு, அவரது மனைவியிடம் உடலுறவில் ஈடுபடுவது போல நடிக்கச் சொல்கிறார். இதனை வெளியிலிருந்து கேட்கும் அந்த குற்றவாளி மனமொடிந்து அழ தனக்கு ஏற்பட்ட இழப்புக்கு நீதி கிடைத்துவிட்டதாக நகர்கிறார் ஹீரோ.

சிறையிலிருந்து வெளிவரும் முதல் குற்றவாளி, தன் பங்கு கொள்ளை பணத்துக்காக தனது கூட்டாளியையும், அவர் மனைவியையும் கொன்றுவிட்டு ஹீரோவை பழிவாங்க வருகிறார். அப்போது, கொள்ளையர்கள் செய்த தவறால் தான் எவ்வளவு துன்பப்பட்டு, துயரப்பட்டு வாழ்க்கையை இழந்து நிற்கிறேன் என்பதை ஹீரோ விளக்க, தனது குற்றங்களை உணர்ந்து குற்றவாளி சிறைக்குச் சென்றுவிடுகிறார். ஆனால், நீதி கேட்டு போராடுவதாக நினைத்து ஹீரோ என்னவெல்லாம் செய்தார் என்பதை சிறைக்குச் சென்ற குற்றவாளியின் காதலி வந்து விளக்கும்போது ‘பழிவாங்கல்’ எத்தனை கொடூரமானது என்பதை ஹீரோ உணர்வதாக பதல்பூர் கதை முடிகிறது.

இந்த சமூகத்தை பாதிக்கும் கொலை, கொள்ளை என எத்தனையோ சம்பவங்கள் இந்தப் படத்தில் பேசப்பட்டன. அந்த கேரக்டர்களை செய்த நடிகர்கள் அடுத்தடுத்த கட்டத்துக்கு சென்றுவிட்டார்கள். ஆனால், தன் கணவனை காப்பாற்ற இன்னொருவரின் ஆசைக்கு இணங்க சம்மதிக்கும் ஒரு பெண்ணாக நடித்துவிட்ட காரணத்தாலும், ‘A’ வசனங்கள் நிறைய பேசியதாலும் அதேபோன்ற கதைகளை மட்டுமே எடுத்துக்கொண்டு ராதிகா ஆப்தே-விடம் சென்றிருக்கிறது இந்தியத் திரையுலகம். இதைத்தான் குற்றம் சொல்லியிருக்கிறார் ராதிகா ஆப்தே.

“பதல்பூர் படத்தில் நடித்ததற்காக அதேபோன்ற கதைகளை எடுத்துக்கொண்டு வருகின்றனர். அந்த கேரக்டருக்கு அந்த வசனமும், அதுபோன்ற காட்சிகளும் தேவைப்பட்டதால் நடித்தேன். ஆனால், அதை அப்படி எடுத்துக்கொள்ளாமல். நான் இந்த மாதிரி கேரக்டர் என்றால் விருப்பப்பட்டு நடிப்பேன் என நினைத்து, ‘உங்களுக்காகவே ஸ்பெஷலாக எழுதிய கதை’ என்று ஆபாச வசனங்களும், காட்சிகளும் நிறைந்த கதைகளைக் கொண்டுவருகின்றனர்” என்று கூறியிருக்கிறார் ராதிகா ஆப்தே.

செவ்வாய், 3 டிச 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon