மின்னம்பலம் மின்னம்பலம்
ஞாயிறு, 31 மே 2020

சம்பவம்: விஜய் படத்துக்குக் கிடைக்குமா?

சம்பவம்: விஜய் படத்துக்குக் கிடைக்குமா?

நடிகர் விஜய்- இயக்குநர் லோகேஷ் கனகராஜ் ஆகியோர் இணைந்திருக்கும் திரைப்படத்திற்கு சம்பவம் எனப் பெயரிடப்பட்டிருப்பதாக வெளியான தகவலால் தமிழ்த் துறையில் மீண்டும் ஒரு வைப்ரேஷன் பரவியிருக்கிறது.

மைனா, சாட்டை, மொசக்குட்டி, சவுகார்பேட்டை, பொட்டு ஆகிய படங்களை தயாரித்த ஷாலோம் ஸ்டூடியோஸின் அடுத்த படம், புதுமுக இயக்குநர் ரஞ்சித் பாரிஜாதம் இயக்கும் சம்பவம். இப்படத்தில் ஸ்ரீகாந்த் மற்றும் நடன இயக்குனர் தினேஷ் இருவரும் இணைந்து நடிக்கிறார்கள். நாயகிகளாக பூர்ணா மற்றும் சிருஷ்டி டாங்கே நடிக்கின்றனர்.

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகி வரும் தளபதி 64 படத்திற்கு சம்பவம் என்று தலைப்பு வைக்க இருப்பதாக சமூக வலைதளங்களில் வெளியான செய்தியறிந்து இயக்குநர் ரஞ்சித் பாரிஜாதம் “நான் சம்பவம் என்ற படத்தை இயக்கி வருகிறேன். சம்பவம் என்ற தலைப்பை முறையாக பதிவு செய்து இப்படத்தின் படப்பிடிப்புகளை நடத்தி வருகிறோம். ஆனால், விஜய் நடிப்பில் உருவாகி வரும் படத்திற்கு சம்பவம் என்று பெயர் வைத்திருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன. இது எங்கள் படக்குழுவிற்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சம்பவம் என்ற தலைப்பு எங்களுக்கு சொந்தமானது. அதனால் விஜய் படம் பற்றி வரும் வதந்திகளை நம்பாதீர்கள்' என்றார்.

அட்லீ இயக்கத்தில் விஜய் நடித்த பிகில் திரைப்படத்தில், ‘வெறித்தனம்’ என்ற பாடல் உருவாவதாக தகவல்கள் வெளியானபோது, அதுவே படத்தின் டைட்டிலாக இருக்கும் என ரசிகர்கள் சில போஸ்டர்களை உருவாக்கினார்கள். அதுபோலவே, இந்தப் படத்திலும் முதலில் வெளியாகும் பாடல் ‘சம்பவம்’ என்ற தகவல் உலவி வருகிறது. எனவே, இதனை அடிப்படையாக வைத்தே சம்பவம் என்ற டைட்டிலுக்கான சண்டை தொடங்கியிருக்கிறது என்கின்றனர் திரையுலகினர். மேலும், படக்குழுவில் பணியாற்றுபவர்கள் இந்தத் தகவலை அடியோடு மறுக்கின்றனர்.

என்ன தான் விஜய் படமாக இருந்தாலும், அந்தத் திரைப்படமும் திரையுலக விதிகளுக்கு உட்பட்டது. ஒரு தயாரிப்பு நிறுவனம் பதிவு செய்த டைட்டிலின் காலக்கெடு முடிவதற்கு முன்பு அதை வேறு யாராலும் வாங்கிவிடவோ, பயன்படுத்தவோ முடியாது. காலக்கெடு முடிந்தபின்பும் கூட அதனைப் புதுப்பித்துக்கொள்ள காலக்கெடு கொடுக்கப்படும்.

செவ்வாய், 3 டிச 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon