மின்னம்பலம் மின்னம்பலம்
மாலை 7, செவ்வாய், 7 ஏப் 2020

பினராயி விஜயன் பாணியில் ரஜினி

பினராயி விஜயன் பாணியில் ரஜினி

கேரள மாநிலம் ஆலத்தூர் பகுதியைச் சேர்ந்தவர் ப்ரணவ். மாற்றுத்திறனாளியான இவர், சிறந்த ஓவியர் ஆவார். ப்ரணவ் தனது கால்களையே கைகளாகப் பயன்படுத்தி வருகிறார். கால்கள் மூலம் படங்கள் வரைந்து சமூகத்தில் தனக்கென ஒரு முக்கிய இடத்தைப் பிடித்துள்ளார்.

கடந்த நவம்பர் 12ஆம் தேதி, தனது 21ஆவது பிறந்தநாளை முன்னிட்டு, முதல்வர் பினராயி விஜயனைச் சந்தித்து தன்னால் இயன்ற 5,000 ரூபாய் நிதியுதவியை மகா புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்காக வழங்கினார். அப்போது, ப்ரணவ் தனக்கே உரிய பாணியில், தன் கால்களை கைபோல் பயன்படுத்தி, முதல்வருடன் கைகுலுக்கினார். மேலும், அவருடன் சேர்ந்து தனது ஸ்மார்ட்போனில், காலால் செல்ஃபியும் எடுத்துக்கொண்டார்.

இந்தப் புகைப்படம் அப்போது சமூக வலைதளங்களில் அதிகளவு பகிரப்பட்டது. உலகிலேயே பெஸ்ட் செல்ஃபி என்று பலரும் பாராட்டித் தள்ளினர். ப்ரணவின் கால்களைப் பிடித்து முதல்வர் கை குலுக்கியது வரவேற்பைப் பெற்றது. ப்ரணவை பினராயி விஜயன் நடத்தியவிதம் கேரள மக்களை நெகிழ வைத்தது. சிறந்த மனித நேயம் என்று நெட்டிசன்கள் பாராட்டினர்.

தற்போது பினராயி பாணியில் ப்ரணவை நடிகர் ரஜினிகாந்த் வரவேற்றுள்ளார். நடிகர் ரஜினிகாந்தைச் சந்திக்க ப்ரணவ் விருப்பம் தெரிவித்ததைத் தொடர்ந்து நேற்று சென்னை போயஸ் இல்லத்தில், ரஜினி – ப்ரணவ் சந்திப்பு நடந்தது.

அப்போது, ப்ரணவின் காலை, தனது கைகளால் குலுக்கி வாழ்த்து தெரிவித்து, அவரை நெகிழ வைத்தார் ரஜினி. இதையடுத்து தனது காலால் வரைந்த ரஜினியின் புகைப்படத்தை, அன்பளிப்பாக வழங்கினார் ப்ரணவ். பின்னர் ரஜினியுடன் செல்ஃபி எடுத்து மகிழ்ந்தார். இந்தச் சந்திப்பு 20 நிமிடங்கள் நடைபெற்றன

முன்னதாக ஓணம் பண்டிகையின்போதும் கேரள படகுப் போட்டியைக் காண வந்த முன்னாள் கிரிக்கெட் வீரர் சச்சினுடன் ப்ரணவ் செல்ஃபி எடுத்துக்கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

செவ்வாய், 3 டிச 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon