மின்னம்பலம் மின்னம்பலம்
ஞாயிறு, 31 மே 2020

மேட்டுப் பாளையத்தில் தீண்டாமைச் சுவரா? முதல்வர் பதில்!

மேட்டுப் பாளையத்தில் தீண்டாமைச் சுவரா? முதல்வர் பதில்!

மதில் சுவர் இடிந்து உயிரிழந்த 17 பேரின் குடும்பத்தினரை முதல்வர், துணை முதல்வர் நேரில் சந்தித்து ஆறுதல் கூறினர்.

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அடுத்த நடூரில் ஒரு வீட்டின் மதில் சுவர் இடிந்து அருகிலிருந்த 3 வீடுகளின் மீது விழுந்ததில் அவை தரைமட்டமாகின. வீட்டிற்குள் உறங்கிக்கொண்டிருந்த 17 பேர் இடிபாடுகளுக்குள் சிக்கி பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த சம்பவம் தமிழகம் முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. 17 பேரின் உடல்களும் மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனை செய்யப்பட்டு, உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.உடனடியாக அனைவரின் உடல்களும் ஒரே இடத்தில் வைத்து எரியூட்டப்பட்டது.

உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரை திமுக தலைவர் ஸ்டாலின், மார்க்சிஸ்ட் மாநிலச் செயலாளர் பாலகிருஷ்ணன் உள்ளிட்ட தலைவர்கள் நேரில் சந்தித்து ஆறுதல் கூறினர். இந்த நிலையில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் பன்னீர்செல்வம், அமைச்சர் வேலுமணி, சட்டமன்ற துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன் ஆகியோர் இன்று (டிசம்பர் 3) பிற்பகல் நடூர் கிராமத்திற்கு வருகை தந்தனர். சம்பவ இடத்தை பார்வையிட்டு ஆய்வு செய்த அவர்கள், உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் தெரிவித்தனர்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த முதல்வர் எடப்பாடி பழனிசாமி, “மதில் சுவர் இடிந்து விழுந்து 17 பேர் உயிரிழந்த சம்பவம் மிகுந்த வேதனையளிக்கிறது. அவர்களின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த அனுதாபங்களையும் இரங்கலையும் தெரிவிக்கிறேன். 17 பேரின் குடும்பத்தினருக்கும் பேரிடர் நிவாரண நிதியிலிருந்து தலா ரூ.4 லட்சமும், முதல்வர் நிவாரண நிதியிலிருந்து தலா ரூ.6 லட்சமும் வழங்கப்படும். விபத்தில் வீடுகளை இழந்தவர்களுக்கு புதிதாக வீடுகள் கட்டித் தரப்படும். குடும்பத்தில் ஒருவருக்கு தகுதிக்கேற்ப அரசு வேலை வழங்கப்படும். அந்த பகுதியில் பாதுகாப்பற்ற முறையில் உள்ள வீடுகளில் வசிப்போருக்கும் புதிய வீடுகள் கட்டித்தரப்படும்” என்று தெரிவித்தார்.

மேலும், “இதுதொடர்பாக காவல் துறையினர் நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர். சம்பந்தப்பட்ட மதில்சுவர் இருந்த வீட்டின் உரிமையாளரை கைது செய்து அவர் மீது உரிய பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிந்து நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தியுள்ளனர்” என்று தெரிவித்த முதல்வரிடம், இது தீண்டாமை சுவர் என்று குற்றம்சாட்டப்படுகிறதே என்ற கேள்வியை செய்தியாளர்கள் முன்வைத்தனர்.

“இதனை சட்ட ரீதியாகவே அணுக முடியும். சட்டத்தில் என்னென்ன பிரிவுகள் உள்ளதோ அதுபடிதான் வழக்குப் பதிவு செய்வார்கள். விசாரணையின்போதுதான் என்ன நிலவரம் என்பது தெரியும்” என்று அதற்கு பதில் தெரிவித்தார்.

அரசுதான் இந்த சம்பவத்திற்கு பொறுப்பு என்று திமுக தலைவர் ஸ்டாலின் கூறியுள்ளாரே என்ற கேள்விக்கு, “அவர் ஒவ்வொரு முறையும் இப்படித்தானே குற்றம்சாட்டுகிறார். மதில்சுவர் இடிந்து மூன்று வீடுகளின் மீது விழுந்ததால் 17 பேர் இறந்திருக்கிறார்கள். இதற்கும் அரசுக்கும் என்ன சம்பந்தம். இதிலும் ஸ்டாலின் அரசியல் செய்கிறார். எதிலெல்லாம் அரசியல் செய்ய வேண்டும் என்ற நியதி இருக்கிறது. இதனை மனசாட்சியோடு அணுக வேண்டுமே தவிர அரசியலை நுழைக்கக் கூடாது” என்று குறிப்பிட்டார்.

செவ்வாய், 3 டிச 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon