மின்னம்பலம் மின்னம்பலம்
காலை 7, புதன், 27 மே 2020

பிரம்மாண்ட மைதானத்தின் முதல் போட்டி!

பிரம்மாண்ட மைதானத்தின் முதல் போட்டி!

அகமதாபாத்தில் அமைய இருக்கும் உலகின் மிகப் பெரிய கிரிக்கெட் மைதானத்தில் மார்ச் மாதத்தில் முதல் போட்டி நடக்க இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அகமதாபாத்தின் மொட்டேராவில் அமைந்துள்ள இந்த கிரிக்கெட் மைதானத்தில் ஒரே நேரத்தில் 1,10,000 பார்வையாளர்கள் அமர்ந்து போட்டிகளைக் கண்டு களிக்கலாம். 63 ஏக்கர் பரப்பளவில் விரிந்திருக்கும் இந்த ஸ்டேடியம் 700 கோடி ரூபாய் செலவில் அமைக்கப்பட்டுள்ளது. 2015 ஆம் ஆண்டு 53000 பேர் அமரக்கூடிய சர்தார் படேல் அரங்கம் இடிக்கப்பட்டு, 2017 ஆம் ஆண்டு அதே இடத்தில் இந்த பிரம்மாண்ட மைதானத்திற்கான அடிக்கல் நாட்டப்பட்டது.

2020 ஆம் ஆண்டு மார்ச் மாதம் இந்த மைதானத்தில் ஆசியா XI மற்றும் வேல்ட் XI போட்டிகளை நடத்த இருப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த மைதானத்திற்கான கட்டுமானப்பணிகளை ‘லார்சன் அண்ட் டூப்ரோ’(எல் அண்ட் டி) நிறுவனம் மேற்கொண்டது. உலகின் மிகப்பெரிய கிரிக்கெட் மைதானமாக உருவாகியிருக்கும் இங்கு சிவப்பு, கறுப்பு மற்றும் இரண்டும் இணைந்த விதமான 11 பிட்ச்கள் அமைக்கப்பட்டுள்ளது. மேலும் மழை பெய்தாலும் அரை மணி நேரத்திற்கு உள்ளாக ஈரம் வழிந்து நிலம் சமனாகும் வண்ணம் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

இந்த மைதானத்தின் பார்க்கிங் ஒரே நேரத்தில் 3,000 கார்களையும், 10,000 இருசக்கர வாகனங்களையும் நிறுத்தக்கூடிய சக்தி கொண்டது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

செவ்வாய், 3 டிச 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon