மின்னம்பலம் மின்னம்பலம்
காலை 7, செவ்வாய், 11 ஆக 2020

சட்டமன்றத் தேர்தல்: தயாராகும் ஸ்டாலின்

சட்டமன்றத் தேர்தல்: தயாராகும் ஸ்டாலின்

திமுக தலைவர் ஸ்டாலினை தேர்தல் வியூக வகுப்பாளர் பிரஷாந்த் கிஷோர் நேற்று சென்னையில் சந்தித்துப் பேசினார்.

தமிழகத்தில் 2021 சட்டமன்றத் தேர்தலுக்கு இன்னும் 15 மாதங்கள் இருந்தாலும் கலைஞர், ஜெயலலிதா என இரண்டு முக்கிய தலைவர்களின் மறைவுக்குப் பிறகு நடக்கும் முதல் தேர்தல் என்பதால், வெற்றிபெற வேண்டும் என்ற முனைப்பில் தேர்தலுக்கான ஆயத்தப் பணிகளை இப்போதிலிருந்தே ஆரம்பித்துவிட்டது திமுக.

இதற்காக பிரபல தேர்தல் வியூக வகுப்பாளரும் பிரதமர் மோடி, பிகாரில் நிதிஷ், ஆந்திராவில் ஜெகனுக்கு வியூகம் வகுத்துக்கொடுத்து வெற்றியில் முக்கிய பங்காற்றியவருமான பிரஷாந்த் கிஷோரை திமுக அணுகியிருந்தது. அதுபோலவே, தேர்தலை ஒட்டி பிரசாந்த் கிஷோர் தமிழகத்தில் நடத்திய கள ஆய்வில் திமுகவுக்கு சாதகமான நிலை நிலவுவதாக அறிந்துள்ளார். இதையடுத்தே அவர் திமுகவிற்கு பணியாற்றத் தயாராகியிருந்தார். திமுகவுடன் பிரஷாந்த் கிஷோர் கைகோத்ததும், ஸ்டாலினுடைய உத்தி வகுப்பாளராக 2016ஆம் ஆண்டிலிருந்து செயல்பட்டுவந்த சுனில் தன்னை பொறுப்பிலிருந்து விடுவித்துக்கொண்டார். இதுதொடர்பாக நாம் தொடர்ச்சியாகச் செய்திகள் வெளியிட்டு வருகிறோம்.

இந்த நிலையில்தான் ஸ்டாலின் - பிரஷாந்த் கிஷோர் இடையேயான முதல் சந்திப்பு நேற்று சென்னையில் நடந்திருக்கிறது.

சென்னை தேனாம்பேட்டை சித்தரஞ்சன் சாலையிலுள்ள திமுக தலைவர் ஸ்டாலின் இல்லத்திற்கு நேற்று (டிசம்பர் 2) மாலை தேர்தல் வியூக வகுப்பாளர் பிரஷாந்த் கிஷோர் வந்தார். பிறகு ஸ்டாலினுடன் சட்டமன்றத் தேர்தல் தொடர்பாக அவர் ஆலோசனை நடத்தினார். ஆலோசனையில், திமுக பொருளாளர் துரைமுருகன், முதன்மைச் செயலாளர் டி.ஆர்.பாலு, முன்னாள் அமைச்சர்கள் கே.என்.நேரு, எ.வ.வேலு மற்றும் ஸ்டாலின் மருமகன் சபரீசன் ஆகியோர் பங்குபெற்றனர்.

பிரஷாந்த் கிஷோர் தங்களது வியூகங்கள் தொடர்பாக தலைவர்களிடம் விளக்கியுள்ளார். துரைமுருகன் மட்டும் அதில் சில கேள்விகளை எழுப்பியுள்ளார். அதற்கான விளக்கத்தையும் பிரஷாந்த் கிஷோர் அளித்திருக்கிறார். மாலை 5 மணிக்குத் தொடங்கிய கூட்டம் 6.45 மணி வரை நடைபெற்றுள்ளது. முதல் சந்திப்பு என்பதால் நேற்று விரிவான ஆலோசனைகள் எதுவும் மேற்கொள்ளப்படவில்லை. அடுத்தடுத்த சந்திப்புகளின்போது விரிவான ஆலோசனைகளும், அதற்கான செயல்திட்டங்களும் வகுக்கப்படவுள்ளன.

செவ்வாய், 3 டிச 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon