மின்னம்பலம் மின்னம்பலம்
மாலை 7, வெள்ளி, 14 ஆக 2020

மேட்டுப்பாளையத்தில் 17பேர் பலி: போராடியவர்கள் மீது போலீசார் தடியடி!

மேட்டுப்பாளையத்தில் 17பேர் பலி: போராடியவர்கள் மீது போலீசார் தடியடி!

மேட்டுப்பாளையத்தில் 17 பேர் உயிரிழந்த விவகாரத்தில், சம்பந்தப்பட்டவரைக் கைது செய்ய வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது போலீசார் தடியடி நடத்தியுள்ளனர்.

மேட்டுப்பாளையம் - அன்னூர் சாலை அருகே நடூர் கிராமத்தில் ஆதிதிராவிடர் காலனி உள்ளது. இந்த பகுதியில் சுமார் 50 வீடுகள் உள்ளன. இங்கு வசிப்பவர்களில் பெரும்பாலானோர் கூலித் தொழிலாளர்கள் ஆவர். இந்த பகுதியில் இன்று காலை 3 வீடுகள் இடிந்து விழுந்ததில் 17 பேர் பலியாகினர். இடிந்து விழுந்த அனைத்து வீடுகளும் ஓடு மற்றும் ஆஸ்பெஸ்டாஸ் வீடுகளாகும். இந்த வீடுகளுக்கு அருகே இருக்கும் ஒரு பெரிய வீட்டின் சுற்றுச் சுவர் 25 அடி உயரத்துக்கு, 80 அடி நீளத்துக்குக் கட்டப்பட்டிருந்தது.

இந்த சுவர் கட்டும்போதே அதற்கு அப்பகுதி மக்கள் எதிர்ப்புத் தெரிவித்துள்ளனர். அந்தச் சுவர் எப்போது வேண்டுமானாலும் இடிந்து விழலாம் என்றும் அச்சம் தெரிவித்துள்ளனர். ஆனால் சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் புகார் கொடுத்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று அப்பகுதி மக்கள் குற்றம்சாட்டுகின்றனர்.

கோவையில் தற்போது கனமழை பெய்து வரும் நிலையில் அப்பகுதி மக்கள் அஞ்சியபடியே அந்த சுற்றுச்சுவர் இடிந்து விழுந்துள்ளது. முற்றிலும் கருங்கல்லால் அமைக்கப்பட்ட சுவர் இடிந்து விழுந்ததில், 3 வீடுகள் நொறுங்கி 17 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.

இவர்களது உடல் இடிபாடுகளிலிருந்து மீட்கப்பட்டு பிரேதப் பரிசோதனைக்காக மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டது. இதற்கிடையே அந்த வீட்டின் உரிமையாளரைக் கைது செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி உயிரிழந்தவர்களின் உடல்களை வாங்க மறுத்து அப்பகுதி மக்கள் மருத்துவமனை முன்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இதுகுறித்து தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளர் சுஜித் குமார் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார். எனினும் அவர்கள் போராட்டத்தைக் கைவிட மறுத்துள்ளனர். அதோடு ஊர்வலமாகச் சென்று, மேட்டுப்பாளையம் நான்கு முக்கு பகுதியில் சாலை மறியலில் ஈடுபட்டுள்ளனர். இதனைத் தடுக்க முயன்ற போது போலீசாருடன் தள்ளுமுள்ளு ஏற்பட்டுள்ளது.

அப்போது போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது போலீசார் தடியடி நடத்தியுள்ளனர் . சிலரை குண்டுகட்டாக தூக்கிச் சென்று போலீசார் வேனில் ஏற்றியுள்ளனர். இதனால் மேட்டுப்பாளையத்தில் பரபரப்பான சூழல் நிலவி வருகிறது.

இதனிடையே, அந்த சுற்றுச்சுவரை அமைத்த, வீட்டின் உரிமையாளர் சிவசுப்பிரமணியம் மீது காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர். கவனக் குறைவால் விபத்து ஏற்படுத்துவது, பொதுச் சொத்திற்குச் சேதம் விளைவித்தல் ஆகிய பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இவர் துணிக்கடை ஒன்றை நடத்தி வருவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

திங்கள், 2 டிச 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon