மின்னம்பலம் மின்னம்பலம்
பகல் 1, வெள்ளி, 14 ஆக 2020

நயன்-சிவகார்த்தி: மூன்றாவது முறை இணைவார்களா?

நயன்-சிவகார்த்தி: மூன்றாவது முறை இணைவார்களா?

நயன்தாரா நடிப்பில் வெளியான கோலமாவு கோகிலா படத்தை இயக்கிய நெல்சன் இயக்கத்தில், சிவகார்த்திகேயன் நடிப்பதாக கே.ஜே.ஆர் ஸ்டூடியோஸ் நிறுவனம் அறிவித்திருக்கிறது. இந்த அறிவிப்பில் முக்கியத்துவம் வாய்ந்த ஒன்று இந்தப் படத்தின் டைட்டில்.

சிவகார்த்திகேயன் கமர்ஷியல் படங்களின் மீது ஆர்வம் காட்டினாலும், அதில் கொஞ்சம் சமூகத்துக்குத் தேவையான அம்சங்களையும் வைக்கத் தவறுவதில்லை. அவருக்கு படத்தின் கதை சொல்லச் செல்லும் இயக்குநர்களிடம், முதலில் கேட்கும் சில கேள்விகளில் ஒன்று ‘சோஷியல் பிரச்சினை இருக்கா இல்லையா’ என்பதே என்கின்றனர் திரையுலகினர். சிவகார்த்தி நடிப்பில் இப்போது உருவாகிவரும் ஹீரோ படத்திலும் கூட மாணவர்களின் பிரச்சினை குறித்து சில விஷயங்கள் இடம்பெற்றிருப்பதாக படத்தைப் பற்றி வெளியாகும் தகவல்கள் தெரிவிக்கின்றன. அந்த வகையில் சிவகார்த்திகேயன் அடுத்ததாக நடிக்கும், நெல்சன் திரைப்படத்தில் கையாளப்போவது ‘மருத்துவம்’.

இந்தப்படத்துக்கு டாக்டர் எனப் பெயர் வைத்து அனைத்து வேலைகளையும் தொடங்கிவிட்டது தயாரிப்பு தரப்பு. கே.ஜே.ஆர். ஸ்டூடியோஸின் அறிவிப்பின் படி, நெல்சன் இயக்கும் இந்தப் படத்தில் சிவகார்த்திகேயன் நடிக்க அனிருத் இசையமைக்கிறார். முதல் படத்திலேயே நயன்தாராவிடம் கதை சொல்லி ஓகே செய்தவர் நெல்சன் என்பதால், இந்தத் திரைப்படத்திலும் அவர் நடிப்பதற்கான வாய்ப்பு இருக்கிறது என்று ஏற்கனவே பேசத் தொடங்கிவிட்டனர் ரசிகர்கள். ஆனால், சினிமா துறையினர் அதற்கு வாய்ப்பில்லை என்கின்றனர். என்ன தான் மற்ற ஹீரோக்களுடன் நயன்தாரா நடித்தாலும், ‘லேடி சூப்பர்ஸ்டார்’ என்ற தனது மார்க்கெட்டை விட்டுத்தர அவர் எப்போதும் தயாராக இருந்ததில்லை. நயன்தாராவின் அந்த மார்க்கெட்டை வேலைக்காரன், மிஸ்டர் லோக்கல் ஆகிய படங்களின் மூலம் ஆட்டம் காண வைத்தவர் சிவகார்த்திகேயன். எனவே, இவர்கள் இருவரும் இந்தப் படத்தில் இணைந்தால் இதற்கு வியாபார முக்கியத்துவம் குறைந்துவிடும் என்பதே சினிமா பிசினஸில் ஈடுபட்டுள்ளவர்களின் மனநிலை.

திங்கள், 2 டிச 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon