மின்னம்பலம் மின்னம்பலம்
மாலை 7, வெள்ளி, 14 ஆக 2020

திமுகவுக்கு தேர்தல் ஜுரம்: ஜெயக்குமார்

திமுகவுக்கு தேர்தல் ஜுரம்: ஜெயக்குமார்

உள்ளாட்சித் தேர்தல் அறிவிப்பால் திமுகவுக்கு தேர்தல் ஜுரம் வந்துவிட்டதாக அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

உள்ளாட்சித் தேர்தல் தொடர்பாக இன்று (டிசம்பர் 2) அறிவிப்பு வெளியிட்ட மாநிலத் தேர்தல் ஆணையம், வரும் 27 மற்றும் 30 ஆகிய தேதிகளில் ஊரகப் பகுதிகளுக்கு மட்டும் உள்ளாட்சித் தேர்தல் நடைபெறும் என அறிவித்தது. நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு தேர்தல் தேதி அறிவிக்கப்படவில்லை. இதனை எதிர்க்கட்சிகள் கடுமையாக விமர்சித்து வருகின்றன.

இந்த நிலையில் சென்னையில் செய்தியாளர்களை சந்தித்தபோது இதற்கு பதிலளித்த அமைச்சர் ஜெயக்குமார், “உள்ளாட்சி தேர்தல் விவகாரத்தில் குற்றத்தை எங்கள் மீது சுமத்த மு.க.ஸ்டாலின் முயற்சிக்கிறார். உள்ளாட்சித் தேர்தலில் இடஒதுக்கீடு கோரி 2016ல் நீதிமன்றத்தில் வழக்கு போட்டது திமுகதான். தொகுதி மறுவரையறை தெளிவாக இருக்கிறது என்றும் உச்ச நீதிமன்றம் கூறிய பின்னரும் ஸ்டாலின் கேள்வி எழுப்புவது கேலிக்கூத்தானது. வாய்ச்சவடால் மூலம் தமிழக மக்களை திசை திருப்பலாம், எங்கள் மீது குற்றம் சுமத்தலாம் என்று ஸ்டாலின் நினைக்கிறார். இது ஒருபோதும் எடுபடாது” என்று தெரிவித்தார்.

2006 உள்ளாட்சித் தேர்தலின்போது திமுக அராஜகம் நடத்தியதாக குற்றம்சாட்டிய ஜெயக்குமார், “மாநிலத் தேர்தல் ஆணையமும் அதிமுகவும் கூட்டுவைத்துள்ளது போல ஸ்டாலின் பேசியுள்ளார். சட்டத்தின் ஆட்சி இங்கு நடந்துகொண்டிருக்கிறது. மாநிலத் தேர்தல் ஆணையம் என்பது ஒரு தன்னாட்சி அமைப்பு. விருப்பு, வெறுப்புகளுக்கெல்லாம் இங்கு இடமில்லை. ஆணையம் தனது கடமையை செய்கிறது. உள்ளாட்சித் தேர்தல் அமைதி மற்றும் நியாயமான முறையில் நடைபெறும்” என்று குறிப்பிட்டார்.

மேலும், “மக்களுக்கு தொண்டாற்ற வேண்டும் என உள்ளாட்சித் தேர்தல் அறிவித்தால், திமுகவிற்கு தேர்தல் ஜுரம் வந்துவிட்டது. ஏனெனில் திமுக தற்போது உட்கட்சி பூசல் நிலவிவருகிறது. திமுகவுக்கு மக்கள் ஆதரவு இல்லை. விக்கிரவாண்டி, நாங்குநேரியில் அதிமுக வெற்றிபெற்ற நிலையில் திமுக பயந்துகொண்டு இருக்கிறது. அதனால் தேர்தலை சந்திக்க முட்டுக்கட்டை போட நினைக்கிறார்கள்” என்றும் ஜெயக்குமார் குற்றம்சாட்டினார்.

திங்கள், 2 டிச 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon