மின்னம்பலம் மின்னம்பலம்
மாலை 7, வெள்ளி, 14 ஆக 2020

வெள்ளத்தில் மிதக்கும் கடலூர்: அரசைக் குற்றம்சாட்டும் பொதுமக்கள்!

வெள்ளத்தில் மிதக்கும் கடலூர்: அரசைக் குற்றம்சாட்டும் பொதுமக்கள்!

மழைக்காலம் என்றாலே கடலூர் மாவட்ட மக்கள் மத்தியில் ஒருவித அச்சம் தொற்றிக் கொள்கிறது. மழைக்காலத்தில் ஒவ்வொரு நாட்களும் செத்துப் பிழைப்பதாக அப்பகுதி மக்கள் வேதனை தெரிவிக்கின்றனர். கடந்த இரு தினங்களாக தமிழகம் முழுவதும் பல இடங்களில் கன மழை பெய்து வருகிறது. இதில் மற்ற மாவட்டங்களைவிட கடலூர் மாவட்டம் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.

கடலூர் நகரிலுள்ள உள்ள வில்வநகர், கூத்தப்பாக்கம், வன்னியர்பாளையம், வண்ணாரப்பாளையம், பாதிரிக்குப்பம், சுனாமி நகர், சங்கர் நகர், கூட்டுறவு நகர், விஜயலட்சுமி நகர், தங்கராஜ் நகர், கம்மியம்பேட்டை ஆகிய பகுதிகளில் மழை நீர் புகுந்துள்ளது. இப்பகுதியைச் சேர்ந்த ஆயிரக்கணக்கானோர் திருமண மண்டபங்களுக்கும், பள்ளிகளுக்கும் என பாதுகாப்பான இடங்களுக்கு அனுப்பப்பட்டு வருகின்றனர்.

கெடிலம் ஆறு, தென்பெண்ணையாறு, மணிமுத்தாறு ஆகியவற்றில் வெள்ளம் கரை புரண்டு ஓடுகிறது. மாவட்டத்தின் மிகப் பெரிய ஏரியான வீராணம், வாலாஜா உட்பட அனைத்து ஏரிகளும் முழுக் கொள்ளளவை எட்டியிருக்கின்றன. பல்லாயிரக்கணக்கான விவசாய நிலங்கள் நீரில் மூழ்கியுள்ளன. மக்கள் வெளியே வரமுடியாத அளவுக்கு வெள்ளக் காடாகக் காட்சியளிக்கிறது கடலூர் மாவட்டம்.

இந்த நிலையில் மழைக்காலம் தொடங்குவதற்கு முன்பே தமிழக முதல்வர், அதிகாரிகள் மற்றும் அமைச்சர்களுடன் ஆலோசனை நடத்தி மாவட்டம் தோறும் குடிமராமத்துப் பணிக்கு என்று கோடிக்கணக்கில் ஒதுக்கிய நிதியை அந்தத் திட்டங்களுக்குச் செலவு செய்திருந்தால் இப்படி ஒரு பெரிய பாதிப்பு ஏற்பட்டிருக்காது என்று வேதனை தெரிவிக்கின்றனர் பொதுமக்கள்.

கடந்த நவம்பர் 23ஆம் தேதி கடலூர் மஞ்சை நகர் மைதானத்தில் சுதந்திரப் போராட்ட வீரர் ராமசாமி படையாச்சியார் மணிமண்டபத் திறப்பு விழாவுக்காக வருகை தந்த முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு கங்கணாங்குப்பம் பள்ளத்தெரு மக்கள் உடம்பில் சேற்றைப் பூசிக்கொண்டு எதிர்ப்பு தெரிவித்தனர். தங்கள் பகுதியில் மழைக்காலத்தில் தண்ணீர் புகுவதைத் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதற்காக இவ்வாறான போராட்டத்தை முன்னெடுத்திருந்தனர்.

இதுகுறித்து தகவலறிந்த உயரதிகாரிகள், மாவட்ட ஆட்சியர் அன்புச்செல்வன் மற்றும் ஏடிஎஸ்பி பாண்டியன் ஆகியோர் மூலம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். மக்களின் கோரிக்கை நிறைவேற்றித் தரப்படும் என்று உறுதி அளிக்கப்பட்டதைத் தொடர்ந்து போராட்டம் கைவிடப்பட்டது. ஆனால், விழா முடிந்த பிறகு எங்களை யாரும் திரும்பிக்கூடப் பார்க்கவில்லை என்கின்றனர் அப்பகுதி மக்கள். தற்போது பெய்துவரும் மழையால் கங்கணாங்குப்பம் பள்ளத்தெரு குடியிருப்புகளுக்குள் தண்ணீர் புகுந்ததால், அந்தப் பகுதி மக்கள் அகதிகளாக வெளியேறி ஒரு மண்டபத்தில் தங்கியிருக்கிறார்கள்.

குடிமராமத்துப் பணிக்கு நிதி ஒதுக்கப்பட்டுப் பல மாதங்கள் கடந்தும் கட்சிகாரர்களும் அதிகாரிகளும் நிதியைப் பங்குபோட்டுக் கொண்டதன் விளைவு, இன்று கடலூர் மாவட்டம் தண்ணீரில் மிதக்கும் நிலைக்குக் காரணம் என்று பொதுமக்கள் குற்றம்சாட்டுகின்றனர்.

இதைத் தவிர கடலூர் மாவட்டம் மந்தாரக்குப்பம் அருகில் ரோமாபுரி பகுதியில் உள்ள மூப்பேரி பகுதிகளில் வெள்ள நீர் பெருக்கெடுத்ததால் கடலூர் - விருத்தாசலம் தேசிய நெடுஞ்சாலையில் வெள்ளம் பெருக்கெடுத்துள்ளது. நான்கு அடி உயரத்துக்குத் தண்ணீர் சென்றதால் கடலூர் - விருத்தாசலம் போக்குவரத்து தடைப்பட்டுள்ளது. விருத்தாசலம், திருச்சி, திட்டக்குடி பகுதிகளுக்குச் செல்லும் பேருந்துகளும் தடைப்பட்டுப் போனது, அதன்பிறகு அதிகாரிகள் வழக்கமாக ஜெசிபி, தீ அணைப்பு வாகனங்களுடன் சென்று ஆமை வேகத்தில் சரிசெய்துள்ளனர். இதனையடுத்து 11.30 மணிக்கு மேல் ஒரு சில வாகனங்கள் மட்டுமே அனுமதிக்கப்பட்டுள்ளது.

விருத்தாசலம் கம்மாபுரம் ஒன்றியம் குமாரமங்கலம் கிராமத்தில் தண்ணீர் புகுந்துவிட்டதால் மக்கள் வெளியேறினார்கள். கடலூர் ஓடி பீமா ராவ் நகர், கே.என்.பேட்டை பகுதியில் மழை நீர் புகுந்த பிறகே அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர். வில்வநகர் குடியிருப்பு பகுதிகளில் ஆறாக ஓடிய தண்ணீரை அந்தப் பகுதி மக்களும் இளைஞர்களும் அப்புறப்படுத்தும் வேலையில் ஈடுபட்டு வருவதையும் காணமுடிகிறது.

கடலூர் வில்வநகரைச் சேர்ந்த பாரத் கூறுகையில், “கடலூர் நகராட்சியில் பாதாளச் சாக்கடை திட்டம் கடந்த திமுக ஆட்சியில் கொண்டுவரப்பட்டது. பின்னர் ஆட்சி மாறியது. இந்தத் திட்டத்தை முழுமையாக விரைவில் முடிப்போம் என்று வாக்குறுதி கொடுத்துதான் அதிமுக அமைச்சர் எம்.சி.சம்பத் வெற்றி பெற்றார். ஆனால், கடந்த எட்டு வருடமாகப் பாதாளச் சாக்கடை திட்டத்தை முழுமையாக முடிக்காமல் இன்று வரையில் இழுத்து வருகிறார்கள்.

அதனால் நகரம் முழுவதும் சாலைகள் போடமுடியாமல் குண்டும் குழியுமாக உள்ளது. ஒவ்வொரு வருடமும் மழைக்காலம் வரும்போது வடிகால் வாய்க்கால் சீரமைக்க, ஏரி குளங்கள் வாய்க்கால் சீர்செய்வதற்கு நிதி ஒதுக்கீடு செய்வார்கள், மழைக்காலம் முடிந்ததும் அதிகாரிகளும் அரசியல்வாதிகளும் வேலையையும் நிதியையும் பங்குபோட்டுக்கொண்டு 30 சதவிகித அளவுக்குத் தரமில்லாத வேலைகள் செய்து விடுவார்கள்” என்று குற்றம்சாட்டுகிறார்.

2015ஆம் ஆண்டு சென்னை போன்று கடலூர் மாவட்டமும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டது. அதன் பிறகு வடிகால் வாய்க்கால்களைச் சரிசெய்யவும் ஆக்கிரமிப்புகளை அகற்றவும் நீதிமன்றம் உத்தரவிட்டது.

அப்போது கடலூர் மாவட்ட ஆட்சியராக பிரசாந்த் வடநேரே ஐஏஎஸ், சப் கலெக்டராக ஜானி டாம் வர்க்கிஸ் ஐஏஎஸ் இருவரும் இருந்தனர். கடலூர் நகரப் பகுதியில் பெரும் முதலாளிகள் ஆக்கிரமிப்புச் செய்துள்ள கால்வாய்களைக் கண்டுபிடித்து ஆக்கிரமிப்புகளை அகற்றி மாவட்டத்துக்காகச் சில முக்கிய நடவடிக்கைகளை எடுத்தார்கள். ஆனால், அவர்கள் மாற்றப்பட்ட பிறகு வந்த ஆட்சியர்கள், ஆக்கிரமிப்பு கட்டடங்களை இடிக்காமல் அரசியல்வாதிகளுடன் சமரசம் செய்துகொண்டனர். அதன் விளைவுதான் இன்று வடிகால் இல்லாமல் கடலூரில் பல பகுதிகள் மிதக்கிறது என்கிறார் பாரத்.

இதனிடையே கடலூர் மாவட்ட ஆட்சியரான அன்புச்செல்வன் விடுப்பு எடுத்துச் சென்றுள்ளார். மழை வெள்ளம் கடலூரை பாதித்த நிலையில், ஆட்சியர் இல்லையென்றால் விமர்சனங்கள் எழும் என்பதால் விடுப்பை ரத்து செய்துவிட்டு பணிக்குத் திரும்பியுள்ளார்.

திங்கள், 2 டிச 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon