மின்னம்பலம் மின்னம்பலம்
மாலை 7, வெள்ளி, 14 ஆக 2020

ஸ்டாலினுக்கு புகழாரம்: பாஜக துணைத் தலைவருக்கு தடை!

ஸ்டாலினுக்கு புகழாரம்: பாஜக துணைத் தலைவருக்கு தடை!

திமுக தலைவர் ஸ்டாலின் முதல்வராவார் என்று குறிப்பிட்ட பாஜக துணைத் தலைவர் மீது அக்கட்சி நடவடிக்கை எடுத்துள்ளது.

திமுக சட்டமன்ற உறுப்பினர் பெரியண்ணன் அரசு இல்லத் திருமண விழாவில் பேசிய பாஜக மாநிலத் துணைத் தலைவர் பி.டி.அரசகுமார், “எம்.ஜி.ஆருக்குப் பிறகு நான் ரசித்த தலைவர் தளபதி ஸ்டாலின் தான். அவர் விரைவில் முதல்வர் அரியணையில் ஏறுவார்” என்பது உள்பட ஸ்டாலினை வெகுவாகப் புகழ்ந்திருந்தார். இதனை அங்கு கூடியிருந்த திமுகவினர் பலமாக கைதட்டியும், ஆராவாரத்தில் ஈடுபட்டும் வரவேற்றனர்.

திமுகவும் பாஜகவும் எதிரெதிர் துருவங்களாக இருந்துவரும் நிலையில் ஸ்டாலின் விரைவில் முதல்வராவார் என்று பாஜகவின் மாநிலத் துணைத் தலைவரே பேசியது அக்கட்சியினரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது.அரசகுமாரின் பேச்சை எந்தவொரு பாஜக தொண்டனும் ஏற்க மாட்டான் என்று தெரிவித்த பாஜக மாநிலப் பொருளாளர் எஸ்.ஆர்.சேகர், மாநிலத் தலைமை அவரிடம் விளக்கம் கேட்டு ஒழுங்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தியிருந்தார்.

ஆனால் தான் ஸ்டாலின் விரைவில் முதல்வராவார் எனக் கூறவில்லை என்ற அரசகுமார், தன்னுடைய தனிப்பட்ட உணர்வைத்தான் வெளிப்படுத்தியதாகவும்,எந்த நடவடிக்கை எடுத்தாலும் எதிர்கொள்ளத் தயார் என்றும் பதிலளித்தார்.

இந்த நிலையில் ஸ்டாலினை புகழ்ந்து பேசிய காரணத்திற்காக அரசகுமார் மீது பாஜக நடவடிக்கை எடுத்துள்ளது. இதுதொடர்பாக பாஜக மாநில பொதுச் செயலாளர் நரேந்திரன் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், “அரசகுமாரின் பேச்சு கட்சியின் கட்டுப்பாட்டையும், கண்ணியத்தையும் மீறிய செயலாக கருதப்படுவதால் அவர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி தலைமைக்கு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. தேசிய தலைமையில் இருந்து பதில் வரும் வரை பி.டி.அரசகுமார் கட்சி சார்பில் எந்த நிகழ்ச்சிகளிலும், கட்சி கூட்டங்கள், ஊடக விவாதங்களிலும் கலந்து கொள்ளக்கூடாது என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது” என்று தெரிவித்துள்ளார்.

திங்கள், 2 டிச 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon