மின்னம்பலம் மின்னம்பலம்
மாலை 7, வெள்ளி, 14 ஆக 2020

ஐடி ரெய்டு: அலுவலக உதவியாளர் தற்கொலை செய்துகொண்டது ஏன்?

ஐடி ரெய்டு: அலுவலக உதவியாளர் தற்கொலை செய்துகொண்டது ஏன்?

சென்னையில், கடல் உணவு ஏற்றுமதி நிறுவனத்தில் வருமான வரித் துறை சோதனை நடத்திய மூன்று நாட்களுக்குப் பிறகு, நிறுவனத்தின் அலுவலக உதவியாளர் ஒருவர் தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

சென்னை அடையாறில் இறால் உள்ளிட்ட கடல் உணவு ஏற்றுமதி செய்யும் தனியார் நிறுவனம் ஒன்று செயல்பட்டு வருகிறது. பாலவாக்கத்தைச் சேர்ந்த செந்தில்குமார் (38) இங்கு அலுவலக உதவியாளராக பணியாற்றி வந்துள்ளார். இந்நிறுவனத்தில் கடந்த வாரம் மூன்று நாட்கள் ஐடி ரெய்டு நடைபெற்றது.

கடந்த வெள்ளி அன்று ஐடி சோதனையின் போது, அதிகாரிகளுக்கு உதவுவதற்காக செந்தில்குமார் அலுவலகத்தில் இருக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் சனிக்கிழமை இரவு இவரது குடும்பத்தினருக்கு, செந்தில்குமார் தற்கொலை செய்து கொண்டிருப்பதாகவும், உடல் அடையாறில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அவரது குடும்பத்தினர் மருத்துவமனைக்கு வந்த பிறகு உடல் பிரேதப் பரிசோதனைக்காக ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டுள்ளது. இந்தநிலையில் அவரது மனைவி சித்ரா, தனது கணவர் ஐடி அதிகாரிகளால் கொடுமை படுத்தப்பட்டதாக அடையாறு காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

ஐடி ரெய்டின் போது செந்தில் குமாரிடம் இருந்து ஒரு ஹார்ட் டிஸ்க் கைப்பற்றப்பட்டதாவும், அதில் பெண்கள் தொடர்பான ஆபாச வீடியோக்கள் இருந்ததாகவும் பெண்கள் கழிவறையில் ரகசிய கேமராக்கள் வைக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டது.

அவரது லேப்டாப்பில் சில ஆட்சேபகரமான வீடியோக்களும் இருந்ததாகவும், சுமார் 150 வீடியோக்கள் கண்டுபிடிக்கப்பட்டதாகவும். இதுகுறித்து ஐடி அதிகாரிகள் அவரிடம் கேள்வி எழுப்பியதால் பயத்தில் அவர் தற்கொலை செய்துகொண்டிருக்கலாம் என்றும் சொல்லப்பட்டது.

இதுகுறித்து, இயற்கைக்கு மாறான மரணம் என வழக்குப்பதிவு செய்து அடையாறு போலீசார் விசாரித்து வருகின்றனர். செந்தில்குமாரின் உறவினர் சங்கர் கூறுகையில், ”இந்த வீடியோ விவகாரங்கள் அனைத்தும் பொய்யானவை. அவர் வேறு காரணங்களுக்காகச் சித்திரவதை செய்யப்பட்டிருக்கலாம் என்று சந்தேகிக்கிறோம். சனிக்கிழமை இரவு செந்தில் குமார் அவரது மனைவி சித்ராவை தொலைபேசியில் அழைத்து மன அழுத்தத்தில் இருப்பதாகவும், குழந்தைகளை பார்த்துக்கொள்ளும்படியும் கூறிவிட்டு போனை வைத்துள்ளார், பின்னர் சித்ரா செந்தில் குமாரை, தொடர்ந்து தொடர்பு கொண்டும் அவர் எந்த அழைப்பையும் எடுக்கவில்லை. இதையடுத்து இரண்டு மணி நேரத்திற்குள், அவரது மரணம் குறித்த தகவல் கிடைத்தது” என்று தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், ஐடி ரெய்டின் போது, அதிகாரிகள் கொடுத்த அழுத்தத்தினாலேயே அவர் தற்கொலை செய்து கொண்டதாக போலீஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இதுகுறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

திங்கள், 2 டிச 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon