மின்னம்பலம் மின்னம்பலம்
மாலை 7, வெள்ளி, 14 ஆக 2020

இலங்கை தமிழர்களுக்கு மாற்றுத் தலைமை தேவை: சுரேஷ் பிரேமச்சந்திரன்

இலங்கை தமிழர்களுக்கு மாற்றுத் தலைமை தேவை: சுரேஷ் பிரேமச்சந்திரன்

இலங்கையில் முன்னாள் முதலமைச்சர் விக்னேஸ்வரன் தலைமையில் புதிய மாற்று அணியை கொண்ட கூட்டு விரைவில் உருவாகும் என தெரிவித்துள்ளார் ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் (ஈ.பி.ஆர்.எல்.எப்) தலைவர் சுரேஷ் பிரேமச்சந்திரன்.

இலங்கையிலுள்ள வவுனியாவில் தனியார் விடுதியொன்றில் ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் மத்தியக்குழு நேற்று (டிசம்பர் 1) கூடியது.

கூட்டத்திற்குப் பிறகு செய்தியாளர்களை சந்தித்த அதன் தலைவர் சுரேஷ் பிரேமச்சந்திரன், “ஜனாதிபதி தேர்தலுக்கு பின்னரான அரசியல் நிலவரங்கள், கள நிலவரங்கள் பற்றி வடக்கு, கிழக்கு மாகாணங்களின் பல மாவட்டங்களில் இருந்து வந்த எங்களது மத்திய குழு உறுப்பினர்கள் தங்களுடைய கருத்துக்களை பரிமாறியிருந்தனர். எதிர்வரும் மாகாணசபை மற்றும் பாராளுமன்ற தேர்தலில் முகம் கொடுப்பதற்கு எவ்வாறான ஏற்பாடுகளை செய்வது என்பது தொடர்பாகவும் நாங்கள் ஆலோசித்தோம்.

இதனூடாக தமிழர்களுக்கு மாற்றுத் தலைமையொன்று தேவை என்பதனை அனைவரும் ஏற்றுக்கொண்டுள்ளார்கள். அந்தவகையில் மாற்று அணிக்கான செயற்பாட்டை நாங்கள் முன்னின்று செயற்படுத்த வேண்டும் எனவும் கூறப்பட்டுள்ளது. இந்நிலையில் தமிழ் தேசியக்கூட்டமைப்பு பலவீனமான நிலையில், அதிலும் இரண்டரைக் கட்சிகளுடன் அங்கம் வகிக்கும் நிலையில் உள்ளது

ஆகவே, அவர்களுடைய தவறுகள் அவர்களுக்கு தமிழ் மக்கள் கொடுத்த ஆணைகளை கைவிட்டு செயற்பட்டமை, அரசாங்கத்தினை பாதுகாப்பதே அவர்களது நோக்கமாக்கியது. இவை எல்லாவற்றையும் நாங்கள் கவனத்தில் எடுத்து மாற்றுத் தலைமை அவசியம் என்பது எங்கள் எல்லோராலும் உணரப்பட்டுள்ளது” என்று குறிப்பிட்டுள்ளார்.

நாங்கள் ஒட்டுமொத்தமான தமிழ் கட்சிகளின் ஐக்கியத்திற்கு எதிரானவர்கள் அல்ல. திம்பு பேச்சுவார்த்தையில் இருந்து தமிழ் மக்கள் தமிழ் கட்சிகள் ஐக்கியப்பட வேண்டும் என்பதில் நாங்கள் மிகவும் உறுதியாக இருந்திருக்கின்றோம். அதற்காக முன்னின்று பணியாற்றியிருக்கின்றோம் என்று குறிப்பிட்ட பிரேமச்சந்திரன்,

“கிழக்கு மாகாணத்தில் மாகாணசபையில் தமிழ் தலைமைத்துவம் தேவை என்பதிலும் கட்சி மிக உறுதியாக உள்ளது. ஆகவே தேர்தல் வருகின்றபோது அதற்கேற்றவகையில் எமது வியூகங்கள் அமையும். தமிழர்களது நலன்கள் பாதிக்கப்படக்கூடாது தமிழர்களின் நலன் பாதுகாக்கப்பட வேண்டும். அந்த அடிப்படையில் இருந்து எமது முடிவுகள் எட்டப்பட வேண்டும் என்ற கருத்தும் சொல்லப்பட்டுள்ளது.ஆகவே எமது முடிவுகள் அனைத்தும் வடக்கிலோ கிழக்கிலோ தமிழ் மக்களின் அரசியல் இருப்பு பொருளாதார அபிவிருத்தி அனைத்தையும் மையமாக வைத்ததாக இருக்கும்” என்று தெரிவித்துள்ளார்.

செய்தியாளர்- ஜனாதிபதி கோத்தபய ராஜபக்ஷேவுடன் கலந்துரையாடுவீர்களா?

கோத்தபய ராஜபக்சே என்பவர்தான் இந்த நாட்டின் ஜனாதிபதி. ஆகவே அந்த ஜனாதிபதியுடன் பேசக்கூடாது என யாரும் சொன்னால் அது சரியான கருத்தாக இருக்க முடியாது. அது அபிவிருத்தியாக இருந்தாலும் சரி, அரசியலாக இருந்தாலும் சரி. அவர் இந்தியாவுக்கு சென்றபோது மோடி இனப்பிரச்சனையை தீர்ப்பதற்கான நடவடிக்கையை மேற்கொள்ளுமாறு அவரிடம்தான் சொல்லியிருக்கின்றார்.

அவர் தீர்ப்பாரா இல்லையா என்பது வேறு பிரச்சனை. ஆகவே அவருடன் பேச வேண்டிய தேவை சகலருக்கும் இருக்கின்றது. நாங்கள் இலங்கை பிரஜை என்ற அடிப்படையில் தமிழ் மக்களை பிரதிநிதித்துவப்படுத்துபவர்கள் என்ற வகையில் அவருடன் பேச வேண்டி ஏற்பட்டால் பேசத்தான் வேண்டும். பேசுவது தவறு என்றும் கருதவில்லை.

முன்னாள் முதலமைச்சர் விக்னேஸ்வரன் தலைமையில் ஒரு கூட்டு உருவாகுமா? அதனை ஏற்பீர்களா?

நிச்சயமாக அவ்வாறான கூட்டு மிக விரைவில் உருவாகும் எனவும் தெரிவித்தார்.

திங்கள், 2 டிச 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon