மின்னம்பலம் மின்னம்பலம்
பகல் 1, வெள்ளி, 24 ஜன 2020

நகர்ப்புற உள்ளாட்சிகளுக்கு தேர்தல் இல்லை!

நகர்ப்புற உள்ளாட்சிகளுக்கு தேர்தல் இல்லை!

நகர்புற உள்ளாட்சிப் பதவிகளுக்கான தேர்தல் தேதி விரைவில் அறிவிக்கப்படும் என மாநிலத் தேர்தல் ஆணையர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.

சென்னை கோயம்பேட்டிலுள்ள மாநில தேர்தல் ஆணையத்தில் இன்று (டிசம்பர் 2) செய்தியாளர்களிடம் பேசிய மாநிலத் தேர்தல் ஆணையர் பழனிசாமி, உள்ளாட்சித் தேர்தலுக்கான அட்டவணையை வெளியிட்டார். அதன்படி, டிசம்பர் 27 மற்றும் 30 ஆகிய தேதிகளில் இரு கட்டங்களாக உள்ளாட்சி தேர்தல் நடைபெறுகிறது.

இதனைத் தொடர்ந்து பேசிய தேர்தல் ஆணையர் பழனிசாமி, “தமிழக ஊரக அமைப்புகளுக்கான உள்ளாட்சித் தேர்தல் 27, 30ஆகிய தேதிகளில் நடைபெறுகிறது. வாக்கு எண்ணிக்கை 2020 ஜனவரி 2ஆம் நடைபெறும். 1, 18,974 பதவியிடங்களுக்கு நேரடித் தேர்தல் நடைபெறும். இதில் 31 மாவட்ட ஊராட்சிகளுக்கு உட்பட்ட 655 வார்டு உறுப்பினர் பதவியிடங்களும், 388 ஊராட்சி ஒன்றியங்களுக்கு உட்பட்ட 6471 வார்டு உறுப்பினர் பதவியிடங்களும், 12, 524 கிராம ஊராட்சித் தலைவர் பதவியிடங்களும், 99,324 கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவியிடங்களும் அடங்கும். தேர்தல் வாக்குச் சீட்டு முறையிலேயே நடைபெறும்” என்று தெரிவித்தார்.

பதிவு செய்யப்பட்டு அங்கீகரிக்கப்படாத கட்சிகளுக்கு சின்னங்கள் ஒதுக்கீட்டில் முன்னுரிமை வழங்கப்படும் என்று கூறியவர், “கிராம வார்டு உறுப்பினர் தேர்தலுக்கு வெள்ளை நிறத்திலும், கிராம ஊராட்சி தலைவர் தேர்தலுக்கு இளஞ்சிவப்பு நிறத்திலும் வாக்குச்சீட்டுகள் பயன்படுத்தப்படும். ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர்கள் தேர்தலில் பச்சை நிறத்திலும், மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர்களுக்கு மஞ்சள் நிறத்திலும் வாக்கு சீட்டுகள் பயன்படுத்தப்படும். முதற்கட்ட தேர்தலில் 1 கோடியே 64 லட்சம் பேர் வாக்களிக்கின்றனர். 2ம் கட்ட தேர்தலில் 1 கோடியே 67 லட்சம் பேரும் வாக்களிக்க உள்ளனர்” என்று தகவல் தெரிவித்தார்.

ஊரகப் பகுதிகளுக்கு மட்டும் ஏன் தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது என்ற கேள்விக்கு, “நிர்வாகக் காரணங்களுக்காக ஊரகப் பகுதிகளுக்கு மட்டும் தற்போது தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி வார்டு உறுப்பினர்கள் பதவிக்கான தேர்தல், கட்டாயமாக பின்னர் அறிவிக்கப்படும்” என்று பதிலளித்துள்ளார்.

ஏற்கனவே 3 வருடங்களாக உள்ளாட்சித் தேர்தல் நடத்தப்படாத சூழலில், தற்போது ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கு மட்டும் தேர்தல் அறிவிக்கபட்டுள்ளதால், நகர்ப்புற ஊராட்சிகளுக்கு எப்போது தேர்தல் அறிவிக்கப்படும் என்ற கேள்வி பலமாக எழுந்துள்ளது.

திங்கள், 2 டிச 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon