மின்னம்பலம் மின்னம்பலம்
மாலை 7, வெள்ளி, 14 ஆக 2020

பணமதிப்பழிப்பு: மூதாட்டிகளுக்கு ரூ.46,000 வழங்கிய அறக்கட்டளை!

பணமதிப்பழிப்பு: மூதாட்டிகளுக்கு ரூ.46,000 வழங்கிய அறக்கட்டளை!

பணமதிப்பழிப்பு குறித்துத் தெரியாமல் பழைய 500 மற்றும் 1,000 ரூபாய் நோட்டுகளைச் சேமித்து வைத்திருந்த திருப்பூரைச் சேர்ந்த மூதாட்டிகளுக்குச் சென்னையைச் சேர்ந்த அறக்கட்டளை ஒன்று, ரூ.46,000 வழங்கி உதவியுள்ளது.

திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே பூமலூர் பகுதியைச் சேர்ந்த மூதாட்டிகள் தங்கம்மாள் (82), ரங்கம்மாள் (75). சகோதரிகளான இவர்களின் கணவர்கள் இறந்துவிட்ட நிலையில், மகன்கள் வீட்டில் வசித்து வந்துள்ளனர். இருவருக்கும் உடல்நிலை சரியில்லாத காரணத்தால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

அப்போது சிகிச்சைக்காகத் தாங்கள் சேமித்து வைத்திருந்த ரூ.46,000 பணத்தை வெளியில் எடுக்கும்போதுதான், அவர்கள் வைத்திருந்த பணம் செல்லாது என்பது தெரியவந்தது. இதுகுறித்த செய்திகள் வெளியான நிலையில் அவர்களுக்கு அம்மாவட்ட ஆட்சியர் விஜய கார்த்திகேயன் உதவினார். இருவருக்கும் முதியோர் உதவித்தொகை பெறுவதற்கான உத்தரவை வழங்கியதோடு, பெருந்துறையில் உள்ள மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில், மூதாட்டிகளுக்குச் சிகிச்சை அளிக்கவும் உத்தரவிட்டார். இந்த நிலையில் சென்னையைச் சேர்ந்த அறக்கட்டளையும் மூதாட்டிகளுக்கு உதவியுள்ளது.

சென்னையைச் சேர்ந்த எவர்வின் பள்ளி அறக்கட்டளையின் தாளாளர் புருஷோத்தமன் நேற்று (டிசம்பர் 1) பாதிக்கப்பட்ட இரு மூதாட்டிகளையும் நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்துள்ளார். அப்போது, அவர்கள் வைத்திருந்த பழைய 500 மற்றும் 1,000 ரூபாய் நோட்டுகளின் மதிப்புக்கு ஏற்றவாறு ரூ.46,000 தொகைக்கான காசோலையை வழங்கி உதவியுள்ளார்.

இதுகுறித்து அவர், சிறுக சிறுக சேமித்து வைத்த பணம் இனி மாற்ற முடியாது என்ற வேதனை அவர்களுக்கு மன உளைச்சலை ஏற்படுத்திவிடும் என்பதால் இந்த உதவியைச் செய்ததாகத் தெரிவித்துள்ளார்.

திங்கள், 2 டிச 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon