மின்னம்பலம் மின்னம்பலம்
மாலை 7, வெள்ளி, 14 ஆக 2020

எடப்பாடி பழனிசாமிதான் தேர்தல் ஆணையரா? ஸ்டாலின்

எடப்பாடி பழனிசாமிதான் தேர்தல் ஆணையரா? ஸ்டாலின்

அதிமுகவோடு தேர்தல் ஆணையம் கூட்டுவைத்திருப்பதாக திமுக தலைவர் ஸ்டாலின் குற்றம்சாட்டியுள்ளார்.

தமிழக உள்ளாட்சி தேர்தல் தேதி தொடர்பான அட்டவணையை தமிழக தேர்தல் ஆணையர் பழனிசாமி இன்று (டிசம்பர் 2) வெளியிட்டார். அதன்படி, தமிழகத்தில் ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கு 2 கட்டங்களாக தேர்தல் நடத்தப்பட உள்ளது. டிசம்பர் 27, 30ஆம் தேதிகளில் வாக்குப்பதிவு நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான வேட்புமனு தாக்கல் வரும் 6ஆம் தேதி துவங்கி 13ஆம் தேதி நிறைவுறுகிறது. தேர்தலில் பதிவாகும் வாக்குகள் 2020 ஜனவரி 2ஆம் தேதி எண்ணப்படும். நகர்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல் பிறகு அறிவிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த அறிவிப்பு குறித்து அரசியல் கட்சிகள் தங்களது கருத்துக்களை பதிவு செய்து வருகின்றன. கடலூரில் செய்தியாளர்களிடம் பேசிய திமுக தலைவர் ஸ்டாலின், “ஆளுங்கட்சியான அதிமுகவும், அதனுடன் கூட்டணி வைத்திருக்கும் மாநிலத் தேர்தல் ஆணையமும் ஒன்று சேர்ந்து திட்டமிட்டு இந்தப் பணியை நிறைவேற்றியுள்ளனர். தமிழகத்தில் நாடாளுமன்றத் தேர்தலாக இருந்தாலும் சட்டமன்றத் தேர்தலாக இருந்தாலும் ஒரே கட்டமாகத்தான் நடைபெறும். உள்ளாட்சித் தேர்தலும் ஒரே கட்டமாகத்தான் நடந்திருக்கிறது.

ஆனால், தற்போது ஊரகப் பகுதிகளுக்கு மட்டும் தேர்தலை நடத்திவிட்டு, அதன்பிறகு பல கட்டங்களாக தேர்தலை நடத்தப்போவதாக அறிவித்திருப்பது வேடிக்கையாக இருக்கிறது. தேர்தல் ஆணையத்தில் இருப்பவர் தேர்தல் ஆணையர் பழனிசாமி அல்லது எடப்பாடி பழனிசாமி என்று எனக்கு சந்தேகமாக உள்ளது” என்று கடுமையாக விமர்சித்தார்.

மேலும், “கூட்டணிக் கட்சிகளுடன் உள்ளாட்சித் தேர்தல் தொடர்பாக பேசியிருக்கிறோம். இன்று அல்லது நாளைக்கு அவர்களுடன் மீண்டும் கலந்துபேசுவோம். அத்தோடு எங்களுடைய சட்ட வல்லுநர்களுடன் கலந்துபேசி தேர்தல் அறிவிப்பை எவ்வாறு அணுகுவது என்பது குறித்து முடிவெடுப்போம்” என்று கூறினார்.

ஸ்டாலின் அறிக்கை

இதுதொடர்பாக ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில், “முதலமைச்சர் 'எடப்பாடி' திரு. பழனிசாமிக்குக் குற்றேவல் புரியும் 'எடுபிடி' ஆணையமாக, மற்றொரு பழனிசாமி என்பவரின் தலைமையில் இயங்கும், தமிழ்நாடு மாநிலத் தேர்தல் ஆணையம் பச்சோந்தியாக மாறி - எந்த சட்ட விதிமுறைகளையும் கடைப்பிடிக்காமல், நகர்ப்புற அமைப்புகளைத் தவிர்த்துவிட்டு, டிசம்பர் 27, 30 ஆகிய தேதிகளில் ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கு மட்டுமே - உள்ளாட்சித் தேர்தல் நடக்கும் என்று அறிவித்துள்ளார்” எனக் கண்டனம் தெரிவித்துள்ளார்.

“உள்ளாட்சித் தேர்தலை நடத்துவதற்கு தேர்தல் ஆணையமும், அதிமுக அரசும் மாறி மாறி 'வாய்தா' வாங்கி பெய்யாத மழைக்கு ஒரு முறை 'ரெட் அலெர்ட்' என்று பொய்யாக அறிவிப்பு வெளியிட்டு உள்ளாட்சித் தேர்தலைத் தள்ளி வைத்து, நீதிமன்ற அவமதிப்பு வழக்குகளை எல்லாம் சந்தித்தார்கள். பல்வேறு காலக்கட்டங்களில் உயர்நீதிமன்றம், உச்சநீதிமன்றத்தின் சரமாரியான குட்டுகளையும் கண்டனங்களையும் வாங்கியும், முதலமைச்சரும் திருந்தவில்லை; மாநில தேர்தல் ஆணையரும் தவறுகளைத் திருத்திக் கொள்ளவில்லை” என்று விமர்சித்த ஸ்டாலின்

ஆகவே, இனி மாநில தேர்தல் ஆணையத்திற்கு தனி அலுவலகம் தேவையில்லை. அ.தி.மு.க. தலைமை அலுவலகத்தின் ஒரு மூலையில் தனது அலுவலகத்தையும் நடத்திக் கொள்ளலாம் என்கிற அளவிற்கு தேர்தல் ஆணையம் ஐக்கியப் படுத்திக் கொண்டு, தரம் தாழ்ந்து தகுதி இழந்திருக்கிறது என்றும் கடுமையாக குறிப்பிட்டுள்ளார்.

மேலும், “உள்ளாட்சித் தேர்தலுக்கு யாராவது நீதிமன்றம் சென்று தடை பெற வேண்டும்’ என்பது அ.தி.மு.க. அரசின் உள்நோக்கமாகவும் ஆசையாகவும் இருந்தாலும், திராவிட முன்னேற்றக் கழகம் ஜனநாயகத்தின் மீது உறுதியான நம்பிக்கை வைத்திருக்கிறது. ஆகவே, ‘அதிகாரம்’ - ‘மாநில தேர்தல் ஆணையம்’ - ‘பொங்கலுக்கு ஒன்றரை மாதங்களுக்கு முன்பே 1000 ரூபாய் விநியோகம்’ போன்ற எத்தனை அதிகார துஷ்பிரயோகங்களுடன் - எடப்பாடி திரு. பழனிசாமியும், அவரது அமைச்சரவை சகாக்களும் களத்திற்கு வந்தாலும், திராவிட முன்னேற்றக் கழகம் தலைமையிலான கூட்டணிக் கட்சிகள் சந்திக்கும்” என்று உறுதிபடத் தெரிவித்துள்ளார்.

திங்கள், 2 டிச 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon