மின்னம்பலம் மின்னம்பலம்
மாலை 7, வெள்ளி, 14 ஆக 2020

வீடுகள் இடிந்து 17 பேர் பலி: மேட்டுப்பாளையத்தில் சோகம்!

வீடுகள் இடிந்து 17 பேர் பலி: மேட்டுப்பாளையத்தில் சோகம்!

மேட்டுப்பாளையத்தில் வீடுகளின் சுவர் இடிந்து விழுந்ததில், தூங்கிக் கொண்டிருந்த 17 பேர் உயிரிழந்தது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தமிழகத்தில் பெரும்பாலான இடங்களில் கடந்த மூன்று தினங்களாக மழை பெய்து வருகிறது. கனமழையின் காரணமாக பெரும்பாலான இடங்களில் வீடுகள் இடிந்து சேதமடைந்துள்ளன. கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே உள்ள நடூர் கண்ணப்பன் பகுதியில் இன்று அதிகாலை 3 வீடுகள் இடிந்து விழுந்துள்ளன. இதில் இடிபாடுகளில் சிக்கியும், மண்ணில் புதைந்தும் இதுவரை 17 பேர் வரை உயிரிழந்துள்ளனர்.

இதுகுறித்து மீட்புப்படையினருக்கும் காவல்துறையினருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து அவர்கள் சம்பவ இடத்துக்கு வந்து மீட்பு பணியில் ஈடுபட்டனர். முதல்கட்டமாக கட்டிட இடிபாடுகளில் சிக்கி உயிரிழந்த குரு ராம்நாத், ஆனந்தகுமார், ஹரிசுதா, சிவகாமி, ஓவியம்மாள், நதியா, வைதேகி, திலகவதி, அருக்காணி, ருக்மணி, நிவேதா, சின்னம்மாள் மற்றும் சிறுமி அக்‌ஷயா சிறுவன் லோகுராம் ஆகிய 15 பேரின் உடல்கள் மீட்கப்பட்ட நிலையில் தற்போது மேலும் இரு உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. இதனால் பலி எண்ணிக்கை 17ஆக அதிகரித்துள்ளது. இவர்களது உடல்கள் அருகில் உள்ள அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

சம்பவ இடத்தில் மீட்பு பணிகள் தொடர்ந்து நடந்து வரும் நிலையில், உயிரிழப்புகள் அதிகரிக்கலாம் என்று அஞ்சப்படுகிறது. சம்பவ இடத்துக்கு மேட்டுப்பாளையம் தொகுதி எம்.எல்.ஏ சின்ராஜ், கோவை ஆட்சியர் ராசாமணியும் வந்து மீட்பு பணிகளை பார்வையிட்டு வருகின்றனர். அவர்களை முற்றுகையிட்ட மக்கள் மழைக்காலத்தில் இப்பகுதி மக்களுக்கு உரிய பாதுகாப்பு அளிக்க வேண்டும் என்று வலியுறுத்தினர்.

மழையால், நடூர் கண்ணப்பன் பகுதியில் தூங்கிக் கொண்டிருந்த 17 பேர் உயிரிழந்தது உறவினர்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில், பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்துக்கு தலா ரூ.4 லட்சம் நிவாரணம் அறிவித்துள்ளார் முதல்வர் எடப்பாடி பழனிசாமி.

இந்த வீடுகளின் மேல் பகுதியில், தனியார் நிறுவனம் ஒன்றின் சார்பில் கருங்கல்லால் சுற்றுச் சுவர் அமைக்கப்பட்டிருந்ததாகவும், அதிலிருந்து கருங்கல் உருண்டு விழுந்ததால் வீடுகள் முற்றிலும் மண்ணில் புதைந்ததாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

திங்கள், 2 டிச 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon