மின்னம்பலம் மின்னம்பலம்

திங்கள் 2 டிச 2019

ஹைதராபாத் கொடூரம்: நாடாளுமன்றத்தில் எதிரொலி!

ஹைதராபாத் கொடூரம்: நாடாளுமன்றத்தில் எதிரொலி!

ஹைதராபாத்தைச் சேர்ந்த கால்நடை பெண் மருத்துவர் பாலியல் வன்கொடுமை செய்து எரித்துக் கொல்லப்பட்ட விவகாரம் மக்களவையில் இன்று எதிரொளித்தது

கடந்த 27ஆம் தேதி, ஹைதராபாத்தைச் சேர்ந்த கால்நடை பெண் மருத்துவர் திவ்யா (பெயர் மாற்றப்பட்டுள்ளது) பாலியல் வன்கொடுமை செய்து எரித்துக் கொல்லப்பட்ட சம்பவம், நாடெங்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதனைத் தொடர்ந்து, நாடு முழுவதும் நடைபெறும் பெண்களுக்கு எதிரான வன்கொடுமைகளைக் கண்டித்தும், ஹைதராபாத் பெண் மருத்துவரின் கொலைக்கு நியாயம் கேட்டும் அனு துபே என்ற பெண் கடந்த 30ஆம் தேதி, நாடாளுமன்றம் முன்பு நடைபாதையில் தனி ஒருவராகப் போராட்டத்தில் ஈடுபட்டார்.

இந்நிலையில், குளிர்கால கூட்டத்தொடரின் 11 ஆவது நாளான இன்று காலை நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் இவ்விவகாரம் எழுப்பப்பட்டது. ஆம் ஆத்மி எம்.பி சஞ்சய் சிங், பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்து வருவது மற்றும் ஹைதராபாத் சம்பவம் தொடர்பாக மாநிலங்களவையில் ஒத்திவைப்பு நோட்டீஸ்.கோரினார் . அதனைத் தொடர்ந்து திரிணாமூல் காங்கிரஸ், சிவசேனா, காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளும் இவ்விவகாரம் தொடர்பாக மக்களவையில் ஒத்திவைப்பு நோட்டீஸ் அளித்தது.

சபாநாயகர் ஓம் பிர்லா, “கேள்வி நேரத்திற்குப் பிறகு இது குறித்து விவாதிக்க அனுமதி வழங்கியுள்ளேன் " எனக் கூறினார். அதன் பின்னர், இவ்விவகாரம் இரு அவைகளிலும் எழுப்பப்பட்டது.

காங்கிரஸ் மூத்த தலைவர் குலாம் நபி ஆசாத், இதுபோன்ற சம்பவம் தங்கள் தேசத்தில் நிகழ்வது என்பதை எந்த அரசாங்கமோ தலைவரோ விரும்ப மாட்டார்கள் என்று கூறினார். "செய்திகளை உருவாக்குவதன் மூலம் இந்த சிக்கலை தீர்க்க முடியாது. இதுபோன்ற செயல்களை ஒழிக்க, இதுபோன்ற குற்றங்களுக்கு எதிராக நாம் ஒன்றிணைந்து நிற்க வேண்டிய அவசியம் உள்ளது" என்றார் குலாம் நபி ஆசாத்.

காங்கிரஸின் அமீ யஜ்னிக், "ஒரு சமூக சீர்திருத்தம் நடைபெறுவதைக் காண அனைத்து அமைப்புகள், நீதித்துறை, சட்டமன்றம், நிர்வாக மற்றும் பிற அமைப்புகள் ஒன்றிணையுமாறு கேட்டுக்கொள்கிறேன். இது அவசர அடிப்படையில் இருக்க வேண்டும்" என்றார்.

குழந்தைகள் மற்றும் பெண்களுக்கு நம் நாடு பாதுகாப்பாக இல்லை என்று அதிமுக எம்.பி. விஜிலா சத்தியானந் தெரிவித்தார். "இந்த குற்றத்தைச் செய்த நான்கு பேரை டிசம்பர் 31 ஆம் தேதிக்கு முன் தூக்கிலிட வேண்டும்” எனக் கூறினார்.

பெண்களுக்கு எதிரான குற்றங்கள் குறித்து மாநிலங்களவை தலைவர் எம்.வெங்கையா நாயுடு பேசும் போது, “தேவைப்படுவது புதிய மசோதா அல்ல. தேவைப்படுவது புதிய அரசியல் சாசனம், நிர்வாக திறன், மனநிலை மாற்றம், சமூக தீமையை அழிப்பதுவே” என்றார்.

மாநிலங்களவை எம்.பி. ஜெயா பச்சன் பேசும் போது, “இந்த பாலியல் பலாத்காரத்தில் குற்றம் சாட்டப்பட்டவர்களை, பகிரங்கமாக வெளியே கொண்டு வந்து கொலை செய்ய வேண்டும். அரசாங்கம் சரியான மற்றும் திட்டவட்டமான பதிலைக் கொடுக்க வேண்டும் என்று மக்கள் இப்போது எதிர்பார்க்கும் நேரமிது என்று நான் நினைக்கிறேன்” என்றார்.

தெலங்கானாவின் நல்கொண்டாவைச் சேர்ந்த காங்கிரஸ் எம்.பி யுகேஎன் ரெட்டி,“அதிக பாதுகாப்புள்ள பகுதியில் ஒரு பெண் மருத்துவர் கடத்தப்பட்டு, பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டு, கொலை செய்யப்பட்டு எரித்துள்ளார்கள். கண்மூடித்தனமாக மதுபானம் விற்பனை செய்வதும் இந்த சம்பவத்திற்கு ஒரு காரணம். ஒரு விரைவான நீதிமன்றத்தை அமைக்கவும், குற்றம் சாட்டப்பட்டவர்கள் இறக்கும் வரை தூக்கிலிடப்படவும் கோருகிறோம்” என காட்டமாக குரல் எழுப்பினார்.

கிச்சன் கீர்த்தனா: வீட்டிலேயே ஹோட்டல் சுவை: வத்தக்குழம்பு

3 நிமிட வாசிப்பு

கிச்சன் கீர்த்தனா: வீட்டிலேயே ஹோட்டல் சுவை: வத்தக்குழம்பு

கிச்சன் கீர்த்தனா: வீட்டிலேயே ஹோட்டல் சுவை: வடகறி

4 நிமிட வாசிப்பு

கிச்சன் கீர்த்தனா: வீட்டிலேயே ஹோட்டல் சுவை: வடகறி

காவலருடன் வாக்குவாதம்: வழக்கறிஞர் விரைவில் கைது!

4 நிமிட வாசிப்பு

காவலருடன் வாக்குவாதம்: வழக்கறிஞர் விரைவில் கைது!

திங்கள் 2 டிச 2019