மின்னம்பலம் மின்னம்பலம்
மாலை 7, வெள்ளி, 14 ஆக 2020

திமுகவாக மாறிய பி.டி.அரசகுமார்: பாஜகவில் எதிர்ப்பு! 

திமுகவாக மாறிய பி.டி.அரசகுமார்: பாஜகவில் எதிர்ப்பு! 

திமுக தலைவர் ஸ்டாலினைப் புகழ்ந்து பேசிய பாஜக துணைத் தலைவர் அரசகுமாருக்குக் கட்சிக்குள் எதிர்ப்பு எழுந்துள்ளது.

திமுக சட்டமன்ற உறுப்பினர் பெரியண்ணன் அரசு இல்லத் திருமண விழா நேற்று புதுக்கோட்டையில் நடைபெற்றது. விழாவில் திமுக தலைவர் ஸ்டாலின் கலந்துகொண்டு திருமணத்தை நடத்திவைத்தார்.

நிகழ்ச்சியில் ஸ்டாலின் முன்னிலையில் பேசிய பாஜக மாநிலத் துணைத் தலைவர் பி.டி.அரசகுமார், “எம்.ஜி.ஆருக்குப் பிறகு நான் ரசித்த தலைவர் தளபதி ஸ்டாலின்தான். முதல்வர் இருக்கையைத் தட்டிப் பறிக்க வேண்டும் என்று நினைத்திருந்தால் ஒரே இரவுக்குள் கூவத்தூர் சென்று அதை முடித்து முதல்வர் ஆகியிருப்பார். ஆனால், ஜனநாயக ரீதியாக ஆட்சியதிகாரம் கிடைக்க வேண்டும் என்பதற்காகக் காத்துக்கொண்டிருக்கிறார்” என்று புகழ்ந்தார். மேலும், காலம் கனியும், காரியங்கள் நடக்கும், தளபதி அரியணை ஏறுவார் என்று குறிப்பிட்ட பி.டி.அரசகுமார், திமுக கரை வேட்டியும் கட்டுவேன் எனத் தெரிவித்திருந்தார்.

பாஜகவும் திமுகவும் ஒன்றுக்கொன்று கடுமையான விமர்சனங்களை முன்வைத்து வரும் நிலையில், பாஜகவின் மாநில நிர்வாகியாக இருக்கும் ஒருவர் இவ்வாறு ஸ்டாலினைப் புகழ்ந்தது, பாஜகவினரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது. இதற்கு பாஜகவிலிருந்தும் எதிர்வினை எழத் தொடங்கியுள்ளது.

இதுதொடர்பாக பாஜக மாநிலப் பொருளாளர் எஸ்.ஆர்.சேகர் தனது முகநூல் பக்கத்தில், “திமுக திருமண விழாவில் பாஜக மாநிலத் துணைத் தலைவர் அரசகுமார் திமுககாரனாகவே மாறி பேசியது கண்டிக்கத்தக்கது. இந்துத்துவா மீது தினசரி சகதிவாரி வீசும் மு.க.ஸ்டாலினுக்கு இவர் சந்தன அபிஷேகம் செய்தது அவரின் பழைய திமுக விசுவாசமா?” என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

அவரின் பேச்சை எந்தவொரு பாஜக தொண்டனும் ஏற்க மாட்டான். மாநிலத் தலைமை அவரிடம் விளக்கம் கேட்டு ஒழுங்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் எஸ்.ஆர்.சேகர் வலியுறுத்தியுள்ளார்.

திங்கள், 2 டிச 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon