மின்னம்பலம் மின்னம்பலம்
பகல் 1, வெள்ளி, 24 ஜன 2020

ஸ்டாலின் முதல்வராவார் என்று சொன்னேனா? பி.டி.அரசகுமார் விளக்கம்!

ஸ்டாலின் முதல்வராவார் என்று சொன்னேனா? பி.டி.அரசகுமார் விளக்கம்!

ஸ்டாலின் விரைவில் அரியணை ஏறுவார் என்று கூறியது தொடர்பாக அரசகுமார் விளக்கம் அளித்துள்ளார்.

திமுக எம்.எல்.ஏ பெரியண்ணன் அரசு இல்லத் திருமண விழாவில் பேசிய பாஜக மாநிலத் துணைத் தலைவர் பி.டி.அரசகுமார், “ஸ்டாலின் முதல்வர் இருக்கையைத் தட்டிப் பறிக்க வேண்டும் என்று நினைத்திருந்தால் ஒரே இரவுக்குள் கூவத்தூர் சென்று அதை முடித்து முதல்வர் ஆகியிருப்பார். ஆனால், ஜனநாயக ரீதியாக ஆட்சியதிகாரம் கிடைக்க வேண்டும் என்பதற்காகக் காத்துக்கொண்டிருக்கிறார்” என்று புகழ்ந்தார். மேலும், காலம் கனியும், காரியங்கள் நடக்கும், தளபதி அரியணை ஏறுவார் என்றும் தெரிவித்திருந்தார்.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்த பாஜக மாநிலப் பொருளாளர் எஸ்.ஆர்.சேகர் தனது முகநூல் பக்கத்தில், திமுக திருமண விழாவில் அரசகுமார் திமுககாரனாகவே மாறி பேசியது கண்டிக்கத்தக்கது என்று குறிப்பிட்டார். அரசகுமாரின் பேச்சை எந்தவொரு பாஜக தொண்டனும் ஏற்க மாட்டான் என்றும் மாநிலத் தலைமை அவரிடம் விளக்கம் கேட்டு ஒழுங்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் எஸ்.ஆர்.சேகர் வலியுறுத்தியுள்ளார்.

இந்த நிலையில் சென்னை விமான நிலையத்தில் இன்று (டிசம்பர் 2) செய்தியாளர்களிடம் பேசிய பி.டி.அரசகுமார், “நாங்கள் இன்னொரு கட்சி ஆட்சிக்கு வர வேண்டும் என்று சொல்ல வேண்டிய அவசியமில்லை. தளபதி ஸ்டாலின் ஜனநாயக ரீதியாக வெற்றிபெற்று ஆட்சியமைக்க வேண்டும் என்றுதான் காத்திருக்கிறார். காலம் வருகிறபோது காரியம் நடக்கும் என்று சொன்னேன். நான் திட்டமிட்டு எதையும் பேசவில்லை. யதார்த்தமாகவே சொன்னேன். ஜனநாயக ரீதியில் முதலமைச்சர் ஆக வாழ்த்துக்கள் என்று தான் சொன்னேன். மற்றபடி அடுத்த முதலமைச்சர் அவர்தான் என்றெல்லாம் நான் கூறவில்லை” என்று விளக்கம் அளித்தார்.

தன்னுடைய தனிப்பட்ட உணர்வுகளைத்தான் வெளிப்படுத்தியதாகவும், பாஜகவில் குரலாகவோ அல்லது பாஜகவின் வார்த்தைகளிலோ இதனை தெரிவிக்கவில்லை என்றும் குறிப்பிட்ட அரசகுமார், “ஸ்டாலின் எங்கு என்னை பார்த்தாலும் நலம் விசாரிப்பார். நாகரீகமான மரபின் அடிப்படையில் நான் திருமண வீட்டில் பேசியதை திமுகவிற்கு ஆதரவாக பேசியதாகக் கூறி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளனர். என் மீது என்னென்ன நடவடிக்கை எடுத்தாலும் எதிர்கொள்ளத் தயாராக இருக்கிறேன்” என்றும் கூறினார்.

திங்கள், 2 டிச 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon