மின்னம்பலம் மின்னம்பலம்
பகல் 1, திங்கள், 10 ஆக 2020

ஏர்டெல், வோடஃபோன், ஜியோ: 40% கட்டண உயர்வு!

ஏர்டெல், வோடஃபோன், ஜியோ: 40% கட்டண உயர்வு!

ஜியோ நிறுவனத்தின் அறிமுகத்தைத் தொடர்ந்து இந்தியத் தொலைத்தொடர்பு சந்தையில் பல அதிரடி மாற்றங்கள் ஏற்பட்டு வருகின்றன. ஜியோ நிறுவனத்தின் இலவச டேட்டா , வாய்ஸ்கால் மற்றும் குறைந்தக் கட்டண சேவை ஆகியவற்றால் ஏர்டெல், வோடஃபோன் உள்ளிட்ட முன்னணி நிறுவனங்கள் வருவாய் இழப்பைச் சந்தித்து வருகின்றன. இதையடுத்து அண்மையில் ஜியோ நிறுவனம் இலவச வாய்ஸ்கால் சேவையை நிறுத்தியது. நிமிடத்துக்கு 6 பைசா என்ற வகையில் கட்டணத்தை அறிமுகப்படுத்தியது.

தற்போது முன்னணி தொலைத்தொடர்பு நிறுவனங்களான வோடஃபோன் மற்றும் ஏர்டெல் ஆகிய இரு நிறுவனங்கள் டிசம்பர் 3ஆம் தேதியிலும், ஜியோ நிறுவனம் டிசம்பர் 6ஆம் தேதியிலும் கட்டண உயர்வை அமல்படுத்தவுள்ளன. 10 முதல் 40 சதவிகிதம் வரை கட்டண உயர்வு இருக்கும் என்று அந்தந்த நிறுவனங்கள் சார்பில் தெரிவிக்கப்படுகிறது.

மேற்குறிப்பிட்ட மூன்று நிறுவனங்களும் இந்தியத் தொலைத்தொடர்பு சந்தையில் 90 சதவிகிதப் பங்கைக் கொண்டுள்ளன. இந்த நிறுவனங்களுக்கு சுமார் 118 கோடி வாடிக்கையாளர்கள் இருக்கின்றனர். 2 நாட்கள், 28 நாட்கள், 84 நாட்கள் மற்றும் 365 நாட்களுக்கான புதிய திட்டங்களை அறிமுகப்படுத்தவுள்ளதாக ஏர்டெல் மற்றும் வோடஃபோன் நிறுவனங்கள் தெரிவித்துள்ளன. 19 ரூபாய் முதல் 2,399 ரூபாய் வரையிலான கட்டணம் நிர்ணயிக்கப்படும் எனவும் அறிவித்துள்ளன.

எனினும் ஜியோ நிறுவனம் புதிய கட்டணப் பட்டியல் அறிவிப்பை இன்னும் வெளியிடவில்லை. ஆனால் 40 சதவிகிதக் கட்டண உயர்வு இருக்கும் என்று அறிவித்துள்ளது. அதே நேரத்தில் வாடிக்கையாளர்களுக்கு 300 சதவிகிதக் கூடுதல் பயன்கள் இருக்கும் என்றும் உறுதியளித்துள்ளது.

வோடஃபோன் மற்றும் ஏர்டெல் நிறுவனங்களின் நிலுவைக்கடன் 1 லட்சம் கோடி ரூபாய்க்கும் மேல் உள்ளதால் கட்டண உயர்வு 2020ஆம் ஆண்டிலும் தொடரும் என்று கூறப்படுகிறது. இதுகுறித்து ஏஞ்செல் ஸ்டாக் புரோக்கிங் நிறுவனத்தின் தலைவர் பராஸ் போத்ரா தி இந்து பத்திரிகைக்குக் கூறுகையில், "தொலைத்தொடர்புத் துறையில் மும்முனைப்போட்டியால் இந்தக் கட்டண உயர்வு தொடக்கம்தான். அடுத்த ஆண்டுக்குள் கட்டண உயர்வு இருமடங்காக அதிகரிக்கும்" என்றார்.

உயர்த்தப்பட்ட கட்டண விவரங்கள்

வோடஃபோனில் ஓராண்டுக்கான ரூ.1,699 என இருந்த கட்டணம் உயர்த்தப்பட்டுரூ. 2,399 ஆகியுள்ளது. 84 நாட்களுக்கான கட்டணம்ரூ. 569 என இருந்தது ரூ.699 என உயர்த்தப்பட்டுள்ளது. இதுபோல் ரூ.179 பிளான் இனி ரூ. 299 என இருக்கும் என இந்த நிறுவனம் அறிவித்துள்ளது.

ஏர்டெல் நிறுவனத்தைப் பொறுத்தவரை ஓராண்டுக்கான ரூ.1,699 என இருந்த கட்டணம் உயர்த்தப்பட்டு ரூ.2,398 ஆகியுள்ளது. 84 நாட்களுக்கான கட்டணம் ரூ.448 என இருந்தது ரூ.598 என உயர்த்தப்பட்டுள்ளது. இதுபோல் ரூ.129 பிளான் இனி ரூ.148 என இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இவ்விரு நிறுவனங்களின் புதிய கட்டண முறை நாளை முதல் அமலுக்கு வருகிறது.

திங்கள், 2 டிச 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon