மின்னம்பலம் மின்னம்பலம்
பகல் 1, வெள்ளி, 14 ஆக 2020

கனமழை: பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை, தேர்வுகள் ரத்து!

கனமழை: பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை, தேர்வுகள் ரத்து!

கனமழை எச்சரிக்கை காரணமாகப் புதுச்சேரி மற்றும் தமிழகத்தில் சில மாவட்டங்களில் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இன்று நடைபெறவிருந்த தேர்வுகள் ரத்து செய்யப்பட்டுள்ளன.

கடந்த இரு தினங்களாகச் சென்னை உட்பட தமிழகம் முழுவதும் பல்வேறு இடங்களில் மழைக் கொட்டித் தீர்த்து வருகிறது. இந்த மழையின் காரணமாக ஏரி, குளம் மற்றும் அணைகள் வேகமாக நிரம்பி வருகின்றன. சென்னையில் பெய்துவரும் மழையால் சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்துள்ளது.

செம்பரம்பாக்கம் ஏரியில் ஒரே நாளில் 100 மில்லியன் கனஅடிக்கும் அதிகமாக நீர் உயர்ந்துள்ளது. செம்பரம்பாக்கம் ஏரியில் நீரிருப்பு 649 மில்லியன் கனஅடியிலிருந்து அதிகரித்து தற்போது 843 மில்லியன் கனஅடியாக உள்ளது. மழை காரணமாக செம்பரம்பாக்கம் ஏரிக்கு 1,182 கனஅடி நீர் வந்து கொண்டிருக்கிறது. இதையடுத்து, முன் எச்சரிக்கை நடவடிக்கையில் அதிகாரிகள், மீட்புப் படையினர் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். பாதுகாப்பு நடவடிக்கைக்காக மணல் மூட்டைகள் அங்கு தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது.

விடுமுறை

மழையின் காரணமாக சென்னை, திருவள்ளூர், கடலூர், தூத்துக்குடி மாவட்டத்தில் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது. இதுபோல, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், ராமநாதபுரம் மாவட்டங்களில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை விடப்பட்டுள்ளது. புதுச்சேரி மாநிலத்திலும் இன்று அனைத்து பள்ளிகளுக்கும், கல்லூரிகளுக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

தேர்வுகள் ரத்து

மழையின் காரணமாக இன்று நடைபெறவிருந்த அண்ணா பல்கலைக்கழகத் தேர்வுகள் அனைத்தும் ஒத்திவைக்கப்பட்டுள்ளன. தேர்வு நடைபெறும் தேதி பின்னர் அறிவிக்கப்படும் என்று பதிவாளர் கருணாமூர்த்தி தெரிவித்துள்ளார்.

இன்றும் நாளையும் (டிசம்பர் 2, 3) நடைபெறவிருந்த தமிழ்நாடு மின்சார வாரியத்துக்கான கேங்மேன் நேர்முகத் தேர்வும் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்படுவதாக மின்சார வாரியம் அறிவித்துள்ளது.

வடசென்னை, தென்சென்னை 1 மற்றும் 2, மத்திய சென்னை, மேற்கு சென்னை, காஞ்சிபுரம், திண்டுக்கல், மதுரை, மதுரை மாநகரம், ராமநாதபுரம், சிவகங்கை, தேனி, கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, விருதுநகா், கரூா், நாகப்பட்டினம், பெரம்பலூா், புதுக்கோட்டை, தஞ்சாவூா், திருவாரூா், திருச்சி, கடலூா், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, விழுப்புரம், உடுமலைப்பேட்டை என 29 இடங்களில் நடைபெறவிருந்த தேர்வுகள் ஒத்தி வைக்கப்பட்டுள்ளன.

சென்னை பல்கலைக்கழகத்தின் கீழ் செயல்படும் கல்லூரிகளில் நடைபெறவிருந்த பருவத் தேர்வும் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

இந்தச் சூழலில் அடுத்த இரு நாட்களுக்குக் கன மழை அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னை, காஞ்சிபுரம், விழுப்புரம், கடலூர், ஈரோடு, கோவை, நீலகிரி, தேனி திண்டுக்கல், கன்னியாகுமரி, மதுரை, பெரம்பலூர், அரியலூர், திருச்சி, தஞ்சாவூர், புதுக்கோட்டை, சிவகங்கை என 23 மாவட்டங்களில் கன மழைக்கான வாய்ப்புள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

தயார் நிலையில் மீட்புக் குழு

தமிழகத்தில் பெய்து வரும் மழை நிலவரத்தைத் தீவிரமாகக் கண்காணித்து வருவதாக வருவாய்த் துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தெரிவித்துள்ளார். மாவட்டம் தோறும் பேரிடர் மீட்புப் படையினர் தயார் நிலையில் உள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

மேலும் கனமழையால் வெள்ளம் ஏற்பட்டால் மீட்புப் பணிகளை மேற்கொள்ள மாவட்டம்தோறும் 21 பேர் கொண்ட மீட்புக் குழுவினர் தயார் நிலையில் இருப்பதாகத் தீயணைப்புத் துறை தெரிவித்துள்ளது.

திங்கள், 2 டிச 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon