மின்னம்பலம் மின்னம்பலம்
காலை 7, சனி, 19 செப் 2020

பெண் மருத்துவர் குடும்பத்துக்கு ஆறுதல்: மரபுகளை உடைத்த ஆளுநர் தமிழிசை

பெண் மருத்துவர் குடும்பத்துக்கு ஆறுதல்: மரபுகளை உடைத்த ஆளுநர்  தமிழிசை

ஹைதராபாத் பெண் மருத்துவரின் இல்லத்துக்கு நேரில் சென்று அவரது குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறியிருக்கிறார் ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன்.

தெலங்கானா மாநிலம் ஹைதராபாத் நெடுஞ்சாலையில் பெண் மருத்துவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு எரித்துக் கொல்லப்பட்ட சம்பவம் நாட்டையே உலுக்கியது. இதுதொடர்பாக லாரி ஒட்டுநர் உள்பட நான்கு பேர் கைது செய்யப்பட்டு நீதிமன்றக் காவலில் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். குற்றவாளிகளுக்குக் கடும் தண்டனை வழங்க வேண்டுமெனப் பலரும் கோரிக்கை விடுத்துவருகின்றனர்.

இந்த நிலையில் கொல்லப்பட்ட பெண் மருத்துவரின் இல்லத்துக்கு தெலங்கானா ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் நேற்று (நவம்பர் 30) நேரில் சென்று ஆறுதல் தெரிவித்தார்.

இதுதொடர்பாக ஆளுநர் மாளிகை வெளியிட்ட செய்திக் குறிப்பில், “பெண் மருத்துவரின் வீட்டுக்குச் சென்ற ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன், அவரது குடும்ப உறுப்பினர்களை ஆறுதல்படுத்தினார். கொடூரமான அந்தச் சம்பவம் குறித்து தனது அதிர்ச்சியையும் ஆழ்ந்த வருத்தத்தையும் வெளிப்படுத்தினார். இது ஒரு துரதிருஷ்டமான சம்பவம் என்றும் குறிப்பிட்டார்.

இந்த வழக்கின் விசாரணை விரைவில் நிறைவு பெறும் என்றும், குற்றவாளிகள் கூடிய விரைவில் நீதிமன்றத்தால் தண்டிக்கப்படுவார்கள் என்றும் ஆளுநர் தமிழிசை, மருத்துவரின் குடும்பத்தினரிடம் தெரிவித்தார். மேலும், பெண்கள் மத்தியில் நம்பிக்கையை வளர்ப்பதற்காக நிர்வாக ரீதியாக உள்ள குறைபாடுகள் அடையாளம் காணப்பட்டு சரிசெய்யப்படும் என்று ஆளுநர் உறுதியளித்தார்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக பிரியங்கா ரெட்டியின் இல்லத்துக்குச் செல்வதற்கான ஏற்பாடுகளைச் செய்யும்படி ஆளுநர் மாளிகை அதிகாரிகளுக்கு தமிழிசை அறிவுறுத்தியுள்ளார். ஆனால், அதிகாரிகளோ ‘ஆளுநரே நேரடியாக ஒருவரின் இல்லத்துக்குச் செல்வது மரபு கிடையாது. அவர்களை நேரில் அழைத்து ஆறுதல் தெரிவிக்கலாம்’ என்று கூறியுள்ளனர்.

இதைப் பொருட்படுத்தாத தமிழிசை சவுந்தரராஜன், ஒரு பெண் எரித்துக்கொல்லப்பட்டுள்ளார். இப்போது அவரின் குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவிப்பதுதான் முக்கியம். இதிலெல்லாம் மரபு பார்க்க வேண்டிய தேவையில்லை. உடனே சந்திப்பதற்கான ஏற்பாடுகளைச் செய்யுங்கள் என்று உத்தரவிட்டுள்ளார். இதையடுத்துதான் சந்திப்புக்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

ஏற்கனவே தமிழக பாஜக தலைவராக இருந்தபோதே யாரேனும் பாதிக்கப்பட்டால் அவர்களது இல்லத்துக்குச் சென்று ஆறுதல் கூறுவது தமிழிசையின் வழக்கம். கடந்த 24ஆம் தேதி நடந்த ஆளுநர் மாநாட்டில் உரையாற்றிய குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் ‘ஆளுநர்களுக்கும் மக்களுக்கும் இடையேயான தொடர்பு இன்னும் அதிகரிக்க வேண்டும்’ என்று தெரிவித்திருந்தார். எனினும் இந்த அடிப்படையில் தமிழிசை சென்று ஆறுதல் கூறவில்லை. மனிதாபிமானத்தின் அடிப்படையில்தான் மரபுகளை உடைத்துவிட்டு ஆறுதல் கூறச் சென்றுள்ளார்.

ஞாயிறு, 1 டிச 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon