மின்னம்பலம் மின்னம்பலம்
மாலை 7, புதன், 23 செப் 2020

நித்திக்கு எதிராக சர்ச் வாரண்ட்!

நித்திக்கு எதிராக சர்ச் வாரண்ட்!

சர்ச்சை சாமியாரான நித்யானந்தா மீது பாலியல் வன்கொடுமை, குழந்தை கடத்தல் எனப் பல்வேறு புகார்கள் அடுக்கப்பட்டுள்ள நிலையில் அவருக்குச் சொந்தமான பிடதி ஆசிரமத்தில் குஜராத் போலீசார் அதிரடியாகச் சோதனையில் ஈடுபட்டனர்.

பெங்களூருவில் நித்யானந்தாவுக்குச் சொந்தமாக பிடதி ஆசிரமம் உள்ளது. இவர் வெளிநாடுகளிலும், வெளிமாநிலங்களிலும் தனது ஆசிரமக் கிளைகளைப் பரப்பியுள்ளார். கடந்த மாதம், பெங்களூருவைச் சேர்ந்த ஜனார்த்தனன் சர்மா என்பவர் தனது இரு மகள்களை நித்யானந்தா ஆசிரமத்தில் கடத்தி வைத்திருப்பதாகவும், அவர்களை நித்தியிடம் இருந்து மீட்டுத் தர வேண்டும் என்று வலியுறுத்தியிருந்தார்.

இதுகுறித்து அகமதாபாத் உயர் நீதிமன்றத்திலும் ஆட்கொணர்வு மனுத் தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கில் நித்யானந்தா கடத்தியதாகக் கூறப்படும் இரு பெண்களையும் டிசம்பர் 10ஆம் தேதி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த வேண்டும் என்று உத்தரவிடப்பட்டது. பெண்கள் நாட்டை விட்டு வெளியேறி இருந்தால் அவர்களை மீட்க இன்டர்போல் உதவியையும் வெளியுறவுத் துறையையும் நாட குஜராத் மாநில காவல் துறைக்கு அறிவுறுத்தப்பட்டது.

டிசம்பர் 10ஆம் தேதி இருவரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த உத்தரவிடப்பட்ட நிலையில், குஜராத் போலீஸ் இவ்வழக்கைத் தீவிரப்படுத்தியுள்ளது. அந்த இரு பெண்களும் நித்தியுடன் இருப்பதாகச் சொல்லப்படும் நிலையில், அவரே எங்கிருக்கிறார் என்பது கேள்விக் குறியாக இருக்கிறது.

எனவே நித்யானந்தா குறித்து எதாவது துப்பு கிடைக்கிறதா என்பதற்காக, ராம்நகர் போலீஸ் உதவியுடன் குஜராத் போலீஸ் நேற்று இரவு வரை பிடதி ஆசிரமத்தில் சோதனை நடத்தியுள்ளது. அப்போது ஆசிரமத்திலிருந்த மேலாளர்களிடம் பல்வேறு கேள்விகள் எழுப்பப்பட்டுள்ளன. இதனையடுத்து நித்யானந்தாவுக்கு எதிராக போலீசார் சர்ச் வாரண்ட் பிறப்பித்துள்ளனர்.

இதுவரை நடத்தப்பட்ட விசாரணையின் அடிப்படையில் நித்யானந்தா டிரினிடாட் மற்றும் ஈக்வடாரில் இருக்கலாம் என்று தெரியவருவதாக குஜராத் போலீசார் தெரிவிக்கின்றனர். போலீஸ் அதிகாரி ஒருவர் கூறுகையில், நித்யானந்தா மற்றும் காணாமல் போன இருவரின் இருப்பிடங்களும் தொடர்ச்சியாக மாறிவருகின்றன. அவர்கள் பிரைவேட் ஜெட் மூலம் டிரினிடாட் மற்றும் ஈக்வடாரில் ஆகிய பகுதிகளுக்கு இடையே பயணித்து வருவதாகத் தெரிவித்துள்ளார்.

டிரினிடாட்டில் நடைபெறவிருக்கும் அடுத்த நிகழ்ச்சியான “சிவரோஹன்” என்ற நிகழ்ச்சிக்காக நித்யானந்தா இவ்விரு பெண்களையும் நன்கொடை வசூலிக்க அழைத்துச் சென்றிருப்பதாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இந்தியாவிலிருந்து, குறிப்பாகப் பெங்களூரிலிருந்து பல நபர்கள் இந்த நிகழ்ச்சிக்குச் செல்வார்கள் என்று நம்புவதாகவும் போலீசார் கூறுகின்றனர்.

ஞாயிறு, 1 டிச 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon