மின்னம்பலம் மின்னம்பலம்
மாலை 7, புதன், 23 செப் 2020

20,000 பேருக்கு வேலைவாய்ப்பு: ஒன்பது நிறுவனங்களுடன் ஒப்பந்தம்!

20,000 பேருக்கு வேலைவாய்ப்பு: ஒன்பது நிறுவனங்களுடன் ஒப்பந்தம்!

சென்னை கிண்டியில், தொழில் முதலீடுகள் மற்றும் திறன் மேம்பாட்டு மாநாடு நேற்று (நவம்பர் 30) நடைபெற்றது. இதில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி, அமைச்சர்கள் எம்.சி.சம்பத், நிலோஃபர் கபில் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். இந்த நிகழ்ச்சியில் 5,027 கோடி ரூபாய் முதலீட்டில், 20,351 பேருக்கு வேலைவாய்ப்பு வழங்கும் வகையில், ஒன்பது தொழில் நிறுவனங்களுடன் ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது.

ஏற்கனவே ஒப்பந்தங்கள் போடப்பட்ட மூன்று அமெரிக்க நிறுவனங்களின் திட்டங்களையும், தொழில்துறை சார்ந்த குறைகளைக் களைவதற்காக, தொழில் நண்பன் என்ற இணையதளத்தையும் முதல்வர் தொடங்கி வைத்தார். வாகன உதிரிப்பாகங்கள் தொழிற்சாலை, புட்வேர் தொழிற்சாலை விரிவாக்கம், மின்சார கார் உற்பத்தி நிறுவனம், உட்பட ஒன்பது நிறுவனங்கள் தமிழகத்தில் தொழில் தொடங்குவதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின. அதன்படி, பேப்பர் போர்டு உற்பத்தியில் ரூ.515 கோடியில், 250 பேருக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில் ஐடிசி நிறுவனத்துடனும், செல்போன் உதிரிப்பாகங்கள் உற்பத்தித் துறையில் ரூ.604 கோடியில் 11,000 பேருக்கு வேலைவாய்ப்பு வழங்கும் வகையில் பிஒய்டி இந்தியா நிறுவனத்துடனும் ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது.

இதுதவிர எரிசக்தித் துறையில் ரூ.635.4 கோடி மதிப்பில் 4,321 பேருக்கு வேலைவாய்ப்பு வழங்கும் வகையில் ஏதர் எனர்ஜி நிறுவனத்துடனும், எரிசக்தி உதிரிப்பாகங்கள் உற்பத்தித் துறையில் ரூ.250 கோடி மதிப்பில் 300 பேருக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில் ஸ்ரீவாரி எனர்ஜி நிறுவனத்துடனும், டிஆர்டிஓ மற்றும் சென்னை ஐஐடி இடையே, தமிழ்நாடு பாதுகாப்பு தொழில் பெருவழித் திட்டத்துக்காகப் புரிந்துணர்வு ஒப்பந்தங்களும் கையெழுத்தாகின.

இந்த நிகழ்ச்சியில் பேசிய முதல்வர் எடப்பாடி பழனிசாமி, “தொழில் வளர்ச்சியைத் தொடர்ந்து ஊக்குவித்து புதிய வேலைவாய்ப்புகளை ஏற்படுத்த வேண்டும் என்ற உயரிய நோக்கத்தில் பல தொடர் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகிறது. இந்த ஆண்டு நடைபெற்ற உலக முதலீட்டாளர் மாநாட்டில் ரூ.500 கோடி முதலீட்டில் 5,600 புதிய வேலைவாய்ப்புகளை அளிக்கும் வகையில் பின்லாந்து நாட்டைச் சேர்ந்த சால்காம்ப் நிறுவனத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டது.

தொழில் சிக்கல்கள் காரணமாக மூடப்பட்டுள்ள நோக்கியா நிறுவனத் தொழிற்சாலையை வாங்கி, மின்னணு சாதன உற்பத்தியை மேற்கொள்ளும் உடன்பாட்டை சால்காம்ப் நிறுவனம் எட்டியுள்ளது. இது தவிர, உலக முதலீட்டாளர் மாநாட்டில் கையெழுத்திடப்பட்ட ஒப்பந்தப்படி நோக்கியா சிறப்புப் பொருளாதார மண்டலத்தில் பாக்ஸ்கான் நிறுவனம் ரூ.2,500 கோடி முதலீட்டில் மின்னணு சாதன உற்பத்திக்கான பணிகளைத் தொடங்கியுள்ளது. இதன் மூலம் 20,000 நபர்களுக்கு புதிய வேலைவாய்ப்புகள் உருவாகும்.

இந்தியாவில் தொழிற்சாலைகள் நிறைந்த மாநிலமாகத் தமிழகம் விளங்குவதோடு, அதன் பொருளாதாரம் நாட்டிலேயே இரண்டாம் இடம் பிடிக்கிறது. கடந்த உலக முதலீட்டாளர் மாநாடு நடந்து 10 மாதங்களுக்குள் ரூ.19,000 கோடி முதலீடு ஈர்க்கப்பட்டதோடு, 83,000 புதிய வேலைவாய்ப்புகளும் உருவாகியுள்ளன. இதில் ஜப்பான், ஜெர்மனி, தென் கொரியா, அமெரிக்கா நிறுவனங்களின் முதலீடுகளும் அடங்கும்” என்று தெரிவித்துள்ளார்.

ஞாயிறு, 1 டிச 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon