மின்னம்பலம் மின்னம்பலம்
மாலை 7, புதன், 23 செப் 2020

மார்க்கெட் ராஜா எம்.பி.பி.எஸ்: விமர்சனம்!

மார்க்கெட் ராஜா எம்.பி.பி.எஸ்: விமர்சனம்!

வசூல் தாதாவை டாக்டராக்க நினைத்த இயக்குநர் சரண், இந்தப் படத்தில் மாற்ற முடியாத ஒரு மார்க்கெட் தாதாவை மருத்துவக் கல்லூரிக்குக் கூட்டிச் சென்றுள்ளார்.

ஊரே பார்த்து பயப்படும் கெத்தான ரவுடி மார்க்கெட் ராஜா. சொந்த அம்மாவையே தூக்கிப் போட்டு மிதிக்கிற அளவுக்கு இரக்கமே இல்லாதவர். இந்த மார்க்கெட் ராஜா அமைச்சர் ஒருவருக்கு விசுவாசமாகச் செயல்பட்டு வருகிறார். அதே கட்சியின் மற்றொரு அமைச்சர் மார்க்கெட் ராஜாவைத் தீர்த்துக் கட்டினால் மட்டுமே தன்னால் முன்னேற முடியும் என்று நினைக்கிறார். மார்க்கெட் ராஜாவின் வீரத்தைப் பார்த்து மருத்துவக் கல்லூரி மாணவியான வாணிஸ்ரீ அவர் மீது காதல் வயப்படுகிறார். ஆனால் அதில் சற்றும் ஈடுபாடு ஏற்படாத மார்க்கெட் ராஜா அதை அலட்சியப்படுத்துகிறார். அதே சூழலில் அப்பாவியான ஏழை மாணவர் ஒருவர் வாணிஸ்ரீயை ஒருதலையாகக் காதலித்து வருகிறார். மார்க்கெட் ராஜாவை என்கவுன்டர் செய்யத் திட்டமிடும் போலீசார் அவருக்குப் பதில் தவறுதலாக அந்த அப்பாவி மாணவரைச் சுட்டுவிட அவரது ஆவி மார்க்கெட் ராஜா உடம்பிற்குள் புகுந்துவிடுகிறது. டெட் பாடியைப் பார்த்தாலே பயந்து மயக்கமடையும் அப்பாவி மாணவனின் ஆவி, கெத்தாகச் சுற்றி வந்த மார்க்கெட் ராஜாவுக்குள் புகுந்து எப்படிப் பாடாய்ப்படுத்துகிறது என்பதே மார்க்கெட் ராஜா எம்.பி.பி.எஸ் படத்தின் மீதிக் கதை.

அமர்க்களம் படத்தில் ஒரு ரவுடியைக் காதலிக்க வைத்து அஜித்துக்குப் புதிய பரிணாமத்தைத் தந்தவர். ஜெமினி படத்தில் விக்ரமின் நடிப்புக்குப் பாராட்டுகளைப் பெற்றுத் தந்தவர். ஒவ்வொரு காட்சியையும் ரசிக்க வைத்து இன்று வரை தேடிப் போய் பார்க்க வைக்கும் வசூல்ராஜா எம்.பி.பி.எஸ் படத்தை இயக்கியவர். இந்தப் பெருமைகளைப் பெற்ற இயக்குநர் சரண், மார்க்கெட் ராஜா எம்.பி.பி.எஸ் என்ற அவரது ஹிட் திரைப்படம் ஒன்றின் பெயர் சாயலில் ஒரு படத்தை இயக்குகிறார் எனும்போது இயல்பாகவே எதிர்பார்ப்பு ஏற்பட்டு விடுகிறது. ‘ஒரு அப்பாவியின் ஆவி, அனைவரையும் அலற விடுகிற அடிதடி தாதாவின் உடம்பிற்குள் புகுகிறது’. சுவாரஸ்யங்களை அள்ளித் தர அதிக வாய்ப்பிருக்கும் ஒரு கதை. ஆனால் அந்த ஒன்லைனில் இருக்கும் சுவாரஸ்யம் எந்த அளவுக்கு ரசிகர்களைச் சென்றடைந்தது என்பதில்தான் படத்தின் வெற்றி இருக்கிறது.

பிக்பாஸ் நிகழ்ச்சியில் முதல் பரிசை வென்று பல ரசிகர்களைப் பெற்ற ஆரவ் கதாநாயகனாக அறிமுகமாகியுள்ளார். ரொமான்டிக் ஹீரோவை விட ஒரு வில்லனாகத் தன்னால் நன்றாக நடிக்க முடியும் என உணர்த்துகிறார். அதிரடி தாதா என அவருக்கு பயங்கரமான பில்டப் கொடுக்கப்பட்டாலும், அதை உணர்த்தும் விதமான வலுவான காட்சிகள் படத்தில் இல்லை. ஆவி புகுந்த பின்னர் அப்பாவியாக மாறும் காட்சிகளில் நடித்து சிரிக்க வைக்காமல், சிரிப்பூட்டும் விதத்தில் நடித்துள்ளார். யாருக்கும், எப்படியும் காதல் வரலாம்தான். ஆனாலும், ஒருவர் கொலை செய்யப்படப் போகிறார் என்பதைப் பார்த்து கதறி அழும் ஒரு பெண், அடுத்த நொடி அதே ரவுடியின் வீரத்தால் கவரப்படுவது எப்படி எனப் புரியவில்லை. மெடிக்கல் காலேஜ் டீனாக, கதாநாயகியின் அப்பாவாக நடித்திருக்கும் நாசரைப் பார்க்கும்போது வசூல்ராஜா பட பிரகாஷ்ராஜ் நினைவுக்கு வருகிறார். அதிலும் கேள்வித்தாளை கஷ்டமாக செட் செய்யச் சொல்லும் காட்சிகள் அப்பட்டமாக அப்படியே எடுக்கப்பட்டுள்ளது.

மார்க்கெட் ராஜாவின் அம்மா, பட்டாளம் சுந்தரி பாயாக நடித்திருக்கும் ராதிகா தனக்குக் கொடுக்கப்பட்ட கதாபாத்திரத்தில் சிறப்பாக நடித்துள்ளார். அதிலும் சுருட்டு பிடித்த வண்ணம் புல்லட்டில் கெத்தாக வரும் காட்சிகளில் கைதட்ட வைக்கிறார். அப்பாவி மருத்துவ மாணவர் சந்திரபாபுவாக விஹான் நடித்துள்ளார். லிப் சிங்க் சரியாக ஒட்டவில்லை என்றாலும் படம் முடிந்தும் கூட அப்பாவியாகவே தெரிகிறார். சந்திரபாபுவின் அம்மா லதாவாக ரோகிணி வாழ்ந்துள்ளார். ‘அம்மா’ உணவகத்தில் வேலை செய்யும் வாய் பேச இயலாதவராக நெகிழ வைக்கிறார். உடன் வேலை பார்ப்பவர்களை அழைத்து மருத்துவம் படிக்கும் மகனிடம் பரிசோதிக்கச் சொல்லி அதில் பூரிப்படையும் காட்சிகளில் அறியாமல் அழவைத்து விடுகிறார். தாதா மார்க்கெட் ராஜாவின் கூடவே இருக்கும் தாஸ் (ஆதித்யா) மற்றும் வக்கீல் வர்தா (சாம்ஸ் விஸ்வநாதன்) ரசிக்க வைக்கின்றனர். அமைச்சர்களாக வரும் சாயாஜி ஷிண்டே, ஹாரிஷ் பிஷாரடி போன்றவர்களை இன்னும் மிரட்ட வைத்திருக்கலாம்.

நிகிஷா படேல் கவர்ச்சியால் மட்டுமின்றி தனது வசீகரப் புன்னகையாலும் ரசிக்க வைக்கிறார். அவரது கதாபாத்திரத்துக்கு நடிப்பதற்கு பெரிய வாய்ப்பில்லை. ஆரவ்வைப் பிடித்த ஆவியை விரட்ட திருமண மேடையில் இருந்து தூக்கிவரப்படும் தேவதர்ஷினியும் முனீஷ்காந்தும் கலகலப்பூட்டுகின்றனர். ஆனால் திடீரென்று காணாமல் போய்விடுகிறார்கள். மக்கள் ரசிக்கும் பல நடிகர்கள் இருந்தும்கூட பல காட்சிகளில் சோர்வு ஏற்படுகிறது. அவசியமே இல்லாமல் தன்பாலின ஈர்ப்பை வைத்து காமெடி செய்திருப்பது நியாயமாகப் படவில்லை. சைமன் கே சிங்கின் இசை பெரிதாக ஈர்க்கவில்லை. படத்தில் காமெடி காட்சிகள் சிரிக்க வைக்கவில்லை என்றாலும் தா தா பாடலில் நடனமாடி ஆரவ் உட்பட அனைவரும் சிரிக்க வைக்கின்றனர். திரைக்கதை பல இடங்களில் குழப்பத்தை ஏற்படுத்துகிறது. ஆரவ் உடம்பில் ஆவி புகுந்ததும், இனி கதை சுவாரஸ்யமாக இருக்கும் என்று எண்ணும் நமக்கு எதிர்பார்த்த ஆறுதல் கிடைக்கவில்லை.

கோபி கிருஷ்ணா தனது படத்தொகுப்பில் பல காட்சிகளை வெட்டியிருக்கலாம். ஒளிப்பதிவாளர் குகன் கேமராவை எங்கெங்கோ எடுத்துச் சென்று விசுவாசத்தைக் காட்டியிருக்கிறார். அதிலும் அகோரிகள் நடந்துவரும் காட்சியில் கேமராவைக் கீழே வைத்து ஒரு நொடியில் பயப்பட வைத்துவிட்டார். பல காட்சிகளின் ஒளிப்பதிவைப் பாராட்டாமல் இருக்க முடியவில்லை. மருத்துவ முத்தத்திற்கு எத்தனை பவர் இருக்கிறது என்பதை பிக் பாஸில் மட்டுமல்ல மார்க்கெட் ராஜா படத்திலும் ஆரவ் நிரூபித்துள்ளார். மார்க்கெட் ராஜா ஓர் அடிதடி திரைப்படமா? ரொமான்டிக் மூவியா? காமெடி த்ரில்லரா?

ரசிகர்கள் திரைப்படம் பார்த்து அவரவர் ரசனைக்கு ஏற்ப முடிவு செய்யலாம். சுரபி பிலிம்ஸின் சார்பில் எஸ்.மோகன் தயாரித்திருக்கும் இந்தப் படத்தை சரண் எழுதி இயக்கியுள்ளார்.

மார்க்கெட் ராஜா எம்.பி.பி.எஸ். ‘கண்டுபிடிக்க முடியாத ஜானர்’.

ஞாயிறு, 1 டிச 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon