மின்னம்பலம் மின்னம்பலம்
மாலை 7, புதன், 23 செப் 2020

சியாச்சினில் பனிச்சரிவு: இரண்டு ராணுவ வீரர்கள் பலி!

சியாச்சினில் பனிச்சரிவு: இரண்டு ராணுவ வீரர்கள் பலி!

அதீத குளிரும் உலகின் மிக உயர்ந்த போர்க்களமாகவும் கருதப்படும் சியாச்சினில் ஏற்பட்ட பனிச்சரிவில் சிக்கி இரண்டு ராணுவ வீரர்கள் உயிரிழந்தனர்.

உலகிலேயே மிக அதிகமான உயரத்தில் அமைந்துள்ள ராணுவப் பகுதியாக இந்தியாவின் வடக்குப் பகுதியில் உள்ள காரக்கோரம் பகுதியில் அமைந்துள்ள சியாச்சின் மலைப்பகுதி கருதப்படுகிறது. 20,000 அடி உயரத்தில் இருக்கும் இந்தப் பகுதியில், மிக அதிகமான குளிர்காற்றில் ராணுவ வீரர்கள் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இது அடிக்கடி நிலச்சரிவும் பனிச்சரிவும் ஏற்படும் பகுதியாகும்.

இந்நிலையில், நேற்று (நவம்பர் 30) சியாச்சின் பகுதியில் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தபோது ஏற்பட்ட பனிச்சரிவில் இரண்டு ராணுவ வீரர்கள் சிக்கினர். ரோந்துப் பணியைத் தொடர்ந்து வந்த ஒரு பனிச்சரிவு மீட்புக் குழு (ஏஆர்டி) உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்தது. அதேசமயம், ராணுவ ஹெலிகாப்டர்களும் மீட்புப்பணிக்குச் செலுத்தப்பட்டன. ராணுவத்தின் மருத்துவக் குழு பனிச்சரிவில் சிக்கிய ராணுவ வீரர்களுக்குத் தீவிர சிகிச்சையளித்தது. ஆனால், சிகிச்சை பலனின்றி பலத்த காயமடைந்திருந்த வீரர்கள் இருவரும் இறந்தனர்.

கடந்த இரண்டு வாரங்களில் சியாச்சினில் ஏற்பட்ட இரண்டாவது பனிச்சரிவு விபத்து இது. நவம்பர் 18ஆம் தேதி, மாலை 3 மணியளவில் 19,000 அடி உயரத்தில் ஏற்பட்ட பனிச்சரிவில் ஆறு ராணுவ வீரர்கள் உட்பட எட்டு பேர் அடங்கிய குழு ஒன்று தாக்கப்பட்டது. இதையடுத்து உடனடியாக பனிப்பகுதியில் மீட்புப் பணியில் ஈடுபடும் திறன் பெற்ற மீட்புப் படையினர் வந்து பனிச்சரிவில் சிக்கி இருப்பவர்களை மீட்டனர். ஆனால், தீவிர சிகிச்சை அளித்தும் ஆறு பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். அதில் நான்கு பேர் ராணுவ வீரர்கள் என்றும், இரண்டு பேர் சுமை தூக்குபவர்கள் ஆவர்.

குளிர்காலத்தில் பனிச்சரிவுகள் மற்றும் நிலச்சரிவுகள் அதிகம் நடக்கும். வெப்பநிலை பெரும்பாலும் மைனஸ் 60 டிகிரி செல்சியஸ் வரை குறைந்து காணப்படும். 1984ஆம் ஆண்டு முதல், இந்தியாவும் பாகிஸ்தானும் சியாச்சினில் நடத்தப்பட்ட ராணுவத் தாக்குதல்களை விட, அங்கு நிலவும் வானிலைக்கு அதிகமான வீரர்களை இழந்துள்ளன.

ஞாயிறு, 1 டிச 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon