மின்னம்பலம் மின்னம்பலம்
மாலை 7, புதன், 23 செப் 2020

பெண் மருத்துவருக்கு நீதி கேட்டு போராட்டம்: போலீசார் தடியடி!

பெண் மருத்துவருக்கு நீதி கேட்டு போராட்டம்: போலீசார் தடியடி!

ஹைதராபாத்தில் பெண் மருத்துவர் ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு எரித்துக் கொல்லப்பட்ட வழக்கில், கைது செய்யப்பட்ட குற்றவாளிகள் இருந்த சாத்நகர் காவல் நிலையத்தை நேற்று பொதுமக்கள் முற்றுகையிட்டுள்ளனர். இதையடுத்து அவர்கள் மீது போலீசார் தடியடி நடத்தி அங்கிருந்து கலையச் செய்துள்ளனர்.

ஹைதராபாத் அருகே சம்ஷாதாபாத்தைச் சேர்ந்த கால்நடை பெண் மருத்துவர் கொடூரமாகக் கொலை செய்யப்பட்டார். இவ்வழக்கில் தேடுதல் வேட்டையைத் தீவிரப்படுத்திய போலீசார் நேற்று முன்தினம் முகமது பாஷா, சிவா, நவீன் மற்றும் சென்னகேசவலு ஆகிய நான்கு பேரை கைது செய்தனர். இந்த நிலையில், மகபூப்நகர் விரைவு நீதிமன்றத்தில் நீதிபதி யாரும் இல்லாத நிலையில், மண்டல் எக்ஸிகியூடிவ் மாஜிஸ்திரேட், கைது செய்யப்பட்ட நான்கு பேருக்கும் 14 நாட்கள் நீதிமன்றக் காவல் வழங்கி நேற்று உத்தரவு பிறப்பித்தார். இதையடுத்து நான்கு பேரும் மகபூப்நகர் சிறைக்குக் கொண்டு செல்லப்பட்டனர்.

இதற்கிடையே பெண் மருத்துவருக்கு நீதி கேட்டும், குற்றவாளிகளை பொது இடத்தில் தூக்கிலிட வலியுறுத்தியும் முழக்கமிட்டபடி சாத்நகர் காவல்நிலையத்துக்கு வெளியே நூற்றுக்கணக்கில் திரண்ட பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். தொடர்ந்து செருப்பு, கற்களை காவல் நிலையம் முன்பு வீசி எறிந்தனர். நிலைமை எல்லை மீறிய நிலையில் போலீசார் தடியடி நடத்தி பொது மக்களைக் கலைத்தனர். இதுகுறித்த வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகியுள்ளது.

இதற்கிடையே குற்றவாளியான சென்னகேசவலுவின் தாய், “தனது மகன் குற்றம் செய்திருந்தால், அவனை அப்பெண்ணை போலவே எரித்துக் கொன்று விடுங்கள். அவனின் செயலால் எனது கணவர் தற்கொலைக்கு முயற்சி செய்து தற்போது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். எங்களுக்கும் மகள்கள் இருக்கிறார்கள். மகனுக்கு எந்த தண்டனை கொடுத்தாலும் கவலை இல்லை” என்று தெரிவித்துள்ளார்.

பெண் மருத்துவரின் தாயும், பொதுமக்கள் முன்பு வைத்து குற்றவாளிகளை உயிரோடு எரிக்க வேண்டும் என்று ஆவேசமாகக் கூறியுள்ளார்.

ஞாயிறு, 1 டிச 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon