மின்னம்பலம் மின்னம்பலம்
மாலை 7, புதன், 23 செப் 2020

இலங்கைக்கு நிதி அளிப்பதா? வைகோ  

இலங்கைக்கு நிதி அளிப்பதா? வைகோ  

இலங்கைக்கு இந்திய அரசு நிதி அளிப்பதற்கு மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

இலங்கை அதிபர் தேர்தலில் வெற்றி பெற்ற கோத்தபய ராஜபக்சே முதல் வெளிநாட்டுப் பயணமாகக் கடந்த 28ஆம் தேதி டெல்லி வந்தார். குடியரசுத் தலைவர் மற்றும் பிரதமர் ஆகியோரைச் சந்தித்து பேசினார். இந்தப் பயணத்தைக் குறிக்கும் வகையில் இலங்கையில் வளர்ச்சித் திட்டங்களுக்காக 400 மில்லியன் டாலர் கடனாகவும், பயங்கரவாதத்தை எதிர்த்துப் போராடுவதற்கான 50 மில்லியன் டாலர் நிதியை இலவசமாகவும் இந்தியா அளித்திருக்கிறது.

இதுதொடர்பாக கோவை விமான நிலையத்தில் நேற்று (நவம்பர் 30) செய்தியாளர்களிடம் பேசிய மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, “இலங்கையில் தமிழர்களுக்கு இடிமேல் இடியாக அடி விழுகிறது. லட்சக்கணக்கான மக்களைக் கொன்று குவித்த கோத்தபய ராஜபக்சேவின் அரசுக்கு பயங்கரவாதிகளை எதிர்கொள்ள 350 கோடி ரூபாயும், பொருளாதார வளர்ச்சிக்கு 2,800 கோடி ரூபாயும் தர போகிறோம் என்று மோடி சொல்லியிருக்கிறார். கொலைகார பாவிக்குப் பட்டம் கொடுத்து, இவ்வளவையும் அள்ளிக்கொடுத்திருக்கிறார். எது கேட்டாலும் தருகிறேன் என்றும் தெரிவித்துள்ளார்.

கொலைகார கோத்தபய ராஜபக்சேவுடன் கை குலுக்குவதற்காக, ஈழத் தமிழர்களின் உணர்வுகளைக் காவு கொடுத்திருக்கிறார் மோடி. இது தாங்கமுடியாத அதிர்ச்சியை ஏற்படுத்துகிறது. இரக்கமற்றவரும், இதயமில்லாதவருமான மோடிக்கு மதிமுக சார்பில் கண்டத்தைக் தெரிவித்து கொள்கிறேன்” என்று கடுமையாக விமர்சித்தார்.

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி வெளியிட்ட அறிக்கையில், “இலங்கையில் நடந்த உள்நாட்டு போரில் பல்லாயிரக்கணக்கான தமிழர்கள் ஈவு இரக்கமற்ற முறையில் கொல்லப்படுவதற்குக் காரணமாக இருந்தவர் இன்றைக்கு அதிபராகத் தேர்வு பெற்றிருப்பதனால் தமிழ் மக்களிடையே அச்சமும், பீதியும் ஏற்பட்டுள்ளது” என்று தெரிவித்துள்ளார்.

இலங்கையில் வாழ்கிற தமிழர்களின் உரிமைகளைப் பாதுகாக்கிற பொறுப்பை புவிசார் அரசியலைக் காரணம் காட்டி மோடி அரசு தட்டிக் கழிக்கக் கூடாது என்று குறிப்பிட்ட கே.எஸ்.அழகிரி, “இலங்கைத் தமிழர்களுக்கு முழுமையான அதிகாரப் பகிர்வு என்கிற ஒற்றை லட்சியத்தைத் தவிர வேறு எதுவும் இருக்க முடியாது. அதை நோக்கித் தான் அவர்களது வழிமுறையும் இருந்து வருகிறது. இந்தியாவுக்குள் தமிழகம் இருப்பதைப் போல, அதிக அதிகாரங்களுடன் ஒரு மாநிலம் அமைவதே இலங்கை தமிழர்களுக்கு நிரந்தரத் தீர்வாக இருக்க முடியும். இதைத் தான் இலங்கை தமிழர்களும் விரும்புகிறார்கள். மாறாக, தமிழ் ஈழம் என்பது தீர்வாக இருக்க முடியாது” என்று தெரிவித்தார்.

மேலும், “தமிழர்களுக்கான உரிமைகளை இலங்கை அரசிடமிருந்து பெற்றுத் தருகிற மிகப்பெரிய பொறுப்பு இந்திய அரசுக்கு இருக்கிறது. குறிப்பாக, பிரதமர் நரேந்திர மோடி தமிழர்களின் வாழ்வுரிமையைக் காப்பாற்றுகிற வகையில் அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்க வேண்டும்” என்றும் வலியுறுத்தியுள்ளார்.

ஞாயிறு, 1 டிச 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon