மின்னம்பலம் மின்னம்பலம்
மாலை 7, புதன், 23 செப் 2020

கிச்சன் கீர்த்தனா: சண்டே ஸ்பெஷல் - கடைகளில் விற்கப்படும் தக்காளி சாஸ் - நல்லதா? கெட்டதா?

கிச்சன் கீர்த்தனா: சண்டே ஸ்பெஷல் - கடைகளில் விற்கப்படும் தக்காளி சாஸ் - நல்லதா? கெட்டதா?

சாலையோரக் கடைகள் தொடங்கி நட்சத்திர உணவகங்கள் வரை எல்லா இடங்களிலும் பயன்பாட்டில் இருக்கிறது தக்காளி சாஸ். பீட்சா, பர்கர், சாண்ட்விச், ஃபிரைடு ரைஸ் போன்ற உணவுகளுக்கு இதுவே சைடிஷாக இருக்கிறது. தக்காளியில் நன்மை தரும் சத்துகள் நிறைய உள்ளன. ஆனால், சாஸ் தயாரிக்க தக்காளியை அதிக நேரம் தண்ணீரில் வேகவைப்பார்கள். அதனால் பல சத்துகள் நீங்கிவிடும். சாஸில் சுவைகூட்டுவதற்காக அதிகளவில் சர்க்கரை, உப்பு சேர்ப்பார்கள். சர்க்கரை நோயாளிகள், ரத்த அழுத்தம் உள்ளவர்களுக்கு இது உதவாது. தக்காளியில் அதிகளவில் பொட்டாசியம் இருக்கிறது. இதை, பிற காய்கறிகளோடு சேர்த்துச் சாப்பிடுவதில் பிரச்சினையில்லை. சாஸாக சாப்பிடும்போது தக்காளி கன்டென்ட் மட்டுமே அதிகமிருக்கும். அதனால், சிறுநீரகத்தில் பிரச்சினை வரலாம். ஏற்கெனவே சிறுநீரகப் பிரச்சினை உள்ளவர்கள் கண்டிப்பாக தக்காளி சாஸைத் தவிர்க்க வேண்டும். மேலும், சாஸ் கெட்டுப்போகாமலிருக்க, சில ரசாயனங்கள் சேர்க்கப்படுகின்றன. அதுவும் உடல் ஆரோக்கியத்தை பாதிக்கலாம். எப்போதாவது தக்காளி சாஸ் சேர்த்துக்கொள்வதில் பிரச்சினையில்லை. ஆனால், அடிக்கடி சேர்த்துக்கொள்வது நல்லதல்ல.

சாஸை வீட்டிலேயே தயாரிக்க முடியுமா?

நிச்சயமாக. ஒரு கிலோ பழுத்த தக்காளியை அகலமான பாத்திரத்தில் தேவையான அளவு தண்ணீர்விட்டு, நன்கு வேகவிடவும். பிறகு, தோலை நீக்கி மத்து மூலம் தண்ணீருடனேயே நன்கு மசித்துக் கொள்ளவும் (மிக்ஸியில்கூட நான்கைந்து சுற்று சுற்றி எடுக்கலாம்).

இதை அடுப்பில் கொதிக்க வைத்து, பொடியாக நறுக்கிய ஒரு பெரிய வெங்காயம், இரண்டு பல் பூண்டு, தலா 2 டீஸ்பூன் மிளகுத்தூள், மிளகாய்த்தூள், சீரகத்தூள், 2 கிராம்பு, 2 ஏலக்காய், ஒரு துண்டு பட்டை ஆகியவற்றை ஒரு சுத்தமான மெல்லியப் பருத்தித் துணியில் பொட்டலமாகக் கட்டி, ஒரு குச்சி அல்லது கரண்டிக் காம்பில் ஒரு கயிற்றால் இணைத்து, அடுப்பில் கொதிக்கும் தக்காளிச் சாற்றில் மூழ்கி இருக்கும்படி தொங்க விடவும்.

சாஸ் பதத்துக்கு தக்காளிச் சாறு சுண்டியதும், அரை தேக்கரண்டி உப்பு, இரண்டு தேக்கரண்டி சர்க்கரை, நான்கு தேக்கரண்டி வினிகர் சேர்த்து, ஒன்றிரண்டு நிமிடங்கள் குறைந்த தீயில் கொதிக்க விட்டு இறக்கவும். மசாலாப் பொருட்கள் அடங்கிய பொட்டலத்தைப் பிழிந்துவிட்டு, சக்கையை எறிந்து விடவும். இறுதியாக இதில் ஒரு சிட்டிகை சோடியம் பென்சொயேட் என்ற பிரிசர்வேட்டிவை கலந்து விட்டால் தக்காளி சாஸ் ரெடி.

சாஸ் ஆறியதும் ஈரமில்லாத பாட்டிலில் நிரப்பி வைக்கவும். இது மூன்று மாதங்கள் வரை கெடாமல் இருக்கும்.

நேற்றைய ரெசிப்பி: பச்சைப் பட்டாணி மசாலா

ஞாயிறு, 1 டிச 2019

chevronLeft iconமுந்தையது