மின்னம்பலம் மின்னம்பலம்
மாலை 7, புதன், 23 செப் 2020

தமிழகத்துக்கு ரெட் அலர்ட்!

தமிழகத்துக்கு ரெட் அலர்ட்!

கடந்த இரு நாட்களாகத் தமிழகத்தில் பல்வேறு இடங்களில் கன மழை பெய்து வரும் நிலையில் தமிழகத்துக்கு இந்திய வானிலை ஆய்வு மையம் ரெட் அலர்ட் விடுத்துள்ளது.

சென்னை, தூத்துக்குடி, திருநெல்வேலி, புதுக்கோட்டை, கடலூர் என தமிழகம் முழுவதும் பல மாவட்டங்களில் மழை கொட்டித் தீர்த்து வருகிறது. வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்து வருவதால், தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு அனுப்பப்படுகின்றனர்.

சென்னையில், சைதாப்பேட்டை, ராயப்பேட்டை, எழும்பூர், கிண்டி, ஈக்காட்டுதாங்கல், திருவல்லிக்கேணி, ராயபுரம், காசிமேடு, பெரம்பூர், சாந்தோம், மயிலாப்பூர்,தாம்பரம், பெருங்களத்தூர் ஆகிய பகுதிகளில் விட்டு விட்டு மழை கொட்டித் தீர்த்துள்ளது.

தாம்பரத்தை அடுத்த சேலையூர், கேம்ப்ரோடு உள்ளிட்ட இடங்களில், தாழ்வான பகுதிகளில், மழைநீர் தேங்கியுள்ளது. பீர்க்கங்கரணை, பெருங்களத்தூர் பகுதிகள் வெள்ளக்காடாக காட்சியளிக்கின்றன. அப்பகுதியில் தாழ்வான இடங்களில் உள்ள வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்துள்ளது.

இந்நிலையில், சென்னையில், மழையை எதிர்கொள்ள மாநில பேரிடர் மீட்புக் குழுவினரும், காவல் துறையினரும் தயார் நிலையில் உள்ளனர் என்று காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் தெரிவித்துள்ளார். சேத்துபட்டு, கெங்குரெட்டி, ஓட்டேரி, பெரம்பூர் ஆகிய சுரங்கப் பாதைகளில் உள்ள மழை நீர் அகற்றும் பணிகளை மாநகராட்சி ஊழியர்களிடம் கேட்டறிந்த அவர், பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த போது இவ்வாறு தெரிவித்தார்.

இந்நிலையில் இன்று மாலை 5 மணிக்கு, இந்திய வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் தமிழகத்துக்கு ரெட் அலர்ட் விடுக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இன்று ரெட் அலர்ட்டும் அதேபோல், நாளை ஆரஞ்சு அலர்ட்டும் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பு நிர்வாக ரீதியாக அதிகாரிகளுக்கு விடுக்கப்பட்டுள்ளதால், மக்கள் அச்சம் கொள்ள வேண்டாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாடு, காரைக்கால், புதுச்சேரிக்கு அலர்ட் விடுக்கப்பட்டுள்ள நிலையில் இது தமிழகம் முழுவதற்கும் பொருந்தாது எனவும் ஒரு சில மாவட்டங்களில், குறிப்பிட்ட இடங்களில் அதிகனமழை பெய்யும் என்றும் கூறப்பட்டுள்ளது. முன்னதாக சென்னை, காஞ்சிபுரம், விழுப்புரம் உள்ளிட்ட 10 மாவட்டங்களில் மிகக் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாகச் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

மழை எச்சரிக்கையைத் தொடர்ந்து தூத்துக்குடி பள்ளி, கல்லூரிகளுக்கு மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி விடுமுறை அறிவித்துள்ளார். சென்னை, கடலூர் மாவட்டங்களில் மழையின் காரணமாகப் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. புதுச்சேரியில் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் நாளை (டிசம்பர் 2) சென்னை தலைமைச் செயலகத்தில் முதல்வர் பழனிசாமி தலைமையில், தொடர் மழையால் ஏற்படும் பாதிப்புகளிலிருந்து பாதுகாக்க எடுக்க வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து ஆலோசனைக் கூட்டம் நடைபெற உள்ளது. நோய்த்தொற்று ஏற்படாமல் பாதுகாப்பது, தற்காலிக மருத்துவ முகாம்களை அமைப்பது, தடையில்லா மின்சாரம் வழங்குவது போன்ற பல்வேறு முக்கிய விஷயங்கள் குறித்து ஆலோசிக்கப்படவுள்ளது. இதில் அரசு உயரதிகாரிகள், அமைச்சர்கள் கலந்துகொள்ளவுள்ளனர்.

ஞாயிறு, 1 டிச 2019

அடுத்ததுchevronRight icon