மின்னம்பலம் மின்னம்பலம்
மாலை 7, புதன், 23 செப் 2020

பொங்கல் பரிசு: ஸ்டாலின் சொன்ன வாட்ஸ் அப் கதை!

பொங்கல் பரிசு: ஸ்டாலின் சொன்ன வாட்ஸ் அப் கதை!

தமிழக அரசு பொங்கல் பரிசாக வழங்கும் ரூ.1,000 குறித்து வாட்ஸ் அப் கதை மூலம் ஸ்டாலின் விமர்சித்தார்.

புதுக்கோட்டையில் திமுக சட்டமன்ற உறுப்பினர் பெரியண்ணன் அரசு இல்லத் திருமண நிகழ்ச்சி இன்று (டிசம்பர் 1) நடைபெற்றது. அதில், திமுக தலைவர் ஸ்டாலின் கலந்துகொண்டு, திருமணத்தை நடத்திவைத்தார். விழாவில் பேசிய பாஜக மாநிலத் துணைத் தலைவர் பி.டி.அரசகுமார், ‘உண்மையைச் சொல்வதென்றால் எம்ஜிஆருக்கு அடுத்து நான் ரசிக்கும் தலைவர் ஸ்டாலின். ஸ்டாலின் விரைவில் அரியணை ஏறுவார்’ என்று குறிப்பிட்டார்.

இறுதியாக சிறப்புரையாற்றிய ஸ்டாலின், “1989ஆம் ஆண்டு சட்டமன்ற உறுப்பினராக தான் நுழையும்போதுதான் ஸ்டாலினும் சட்டமன்ற உறுப்பினர் ஆனார் என முதல்வர் எடப்பாடி பழனிசாமி கூறுகிறார். அது உண்மைதான். ‘1989ல் சட்டமன்ற உறுப்பினரான நான் முதல்வராகி விட்டேன், ஆனால் ஸ்டாலின் இன்னும் முதல்வராகவில்லை’ என்றும் எடப்பாடி பழனிசாமி சொல்லியிருக்கிறார். எனக்கு மண்புழு போல ஊர்ந்து சென்று முதல்வராக விருப்பமில்லை. நான் கலைஞருடைய மகன்.

1989ஆம் ஆண்டுதான் இருவரும் சட்டமன்ற உறுப்பினராக ஆனோம். ஆனால், 1989க்கு முன்னால் வரலாற்றைப் பார்த்தால் எடப்பாடி எங்கே இருந்தார், நான் எங்கே இருந்தேன் எனத் தெரியும். 1965-66ஆம் ஆண்டில் பள்ளிக்கூட பாலக மாணவனாக இருந்தபோதே, அரசியலுக்குள் நுழைந்தவன் நான். எடப்பாடி பழனிசாமி அப்போது எங்கே இருந்தார். புதுக்கோட்டை மட்டுமல்லாமல் தமிழ்நாடு முழுவதும் எல்லா கிராமங்களிலும் காலடி எடுத்து வைத்திருக்கிறேன். சேலம் மாவட்டம், ஏன் எடப்பாடியை தவிர முதல்வருக்கு வேறு ஊர் தெரியுமா?” என்று கேள்வி எழுப்பினார்.

40 ஆண்டுகால அரசியலில் மிசா சட்டத்தில் கைதாகி, திமுக இளைஞரணிச் செயலாளர் உள்பட பல்வேறு பொறுப்புகளை வகித்து தற்போது திமுக தலைவராக உள்ள நான் முதல்வர் பதவிக்கு ஆசைப்படுகிறேன் என்ற தவறான தகவலை பரப்புகிறார்கள் என்றும் ஸ்டாலின் குற்றம்சாட்டினார்.

தொடர்ந்து, “ தமிழக அரசு வழங்கும் பொங்கல் பரிசு விநியோகம் ஜனவரி 1ஆம் தேதியில் இருந்துதான் ஆரம்பிக்கும். ஆனால், இப்பொழுதே அதை ஆரம்பித்து விட்டார்கள். அதனை தவறு என்று சொல்லவில்லை. மக்கள் அதனை விரும்புகிறார்கள், மக்களுக்கு அதனால் பயன் உள்ளது என்றால் சரிதான். சர்க்கரை அட்டை வைத்திருப்பவர்கள் 10,19,493 பேர். அந்த அட்டைதாரர்கள் மாற்றப்படுகிறார்கள். மாற்றுவதற்கான கால அவகாசம் முடிந்து விட்டது. பொங்கல் பரிசு அனைவருக்கும் கொடுக்கப்பட வேண்டும். ஆனால் அதில் ஏன் இந்த பாரபட்சம்?” என்று குறிப்பிட்ட ஸ்டாலின்,

“திமுக ஆட்சியில் இலவச வண்ண தொலைக்காட்சிப் பெட்டிகள் வழங்கப்பட்டன. ரேஷன் கார்டு இருந்தாலே அனைவருக்கும் இலவச தொலைக்காட்சிப் பெட்டி வழங்கிய ஆட்சி கலைஞர் தலைமையிலான திமுக ஆட்சி. இப்போது, பொங்கல் பரிசாக ரூ.1000 வழங்குகிறார்கள்.

இரண்டு நாட்களுக்கு முன்பு வாட்ஸ் ஆப்பில் ஒரு வேடிக்கையான துணுக்கு ஒன்றை படித்தேன். மனதைக் கவர்ந்த திருடன் என்ற ஒரு செய்தி. ஒரு திருடன் தன்னுடைய தொழிலிலும் தர்மத்தைக் கடைப்பிடிப்பவன். ஒருநாள் ஒரு வீட்டுக்குப் போய் அண்டாவில் இருந்து அடுப்பு வரை திருடி விட்டான். எல்லாவற்றையும் மூட்டை கட்டி எடுத்துக் கொண்டு போகும் பொழுது, 500 ரூபாய் நோட்டுகளை எடுத்து ஒரு கவரில் வைத்து, ‘நான் எல்லாவற்றையும் திருடிக்கொண்டு போகிறேன். இரண்டுநாள் சாப்பாட்டுக்கு வைத்துக்கொள்ளுங்கள்’என்று எழுதி வைத்துவிட்டுப் போனான். வீட்டுக்காரர் வந்து பார்த்துவிட்டு அழுதுபுலம்பினார். அப்போது அந்த கவரை பார்த்ததும் கொஞ்சம் சந்தோசம். இதுபோலவே எல்லா வீட்டிலும் திருடிவிட்டு இரண்டு 500 ரூபாய் நோட்டுகளை வைத்துவிட்டுச் சென்றிருக்கிறான். அந்த ஆயிரம் ரூபாய் எதற்கு என்று கேட்காதீர்கள். பொங்கலுக்கு கொடுக்கப்படும் ஆயிரம் ரூபாயையும் எதற்கென்று கேட்காதீர்கள்” என்று பொங்கல் பரிசு வழங்குவது குறித்து குற்றம்சாட்டினார்.

ஞாயிறு, 1 டிச 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon