மின்னம்பலம் மின்னம்பலம்
மாலை 7, புதன், 23 செப் 2020

மோடி அரசை விமர்சிக்க பயம்: அமித்ஷா முன்பு ராகுல் பஜாஜ்

மோடி அரசை விமர்சிக்க பயம்: அமித்ஷா முன்பு ராகுல் பஜாஜ்

மத்திய அரசை விமர்சிக்க பயமாக இருப்பதாக பிரபல தொழிலதிபர் ராகுல் பஜாஜ் தெரிவித்துள்ளார்.

எக்னாமிக் டைம்ஸ் நாளிதழ் ஒருங்கிணைத்த விருது வழங்கும் விழா நேற்று (நவம்பர் 30) மும்பையில் நடந்தது. இந்த நிகழ்ச்சியில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், ரயில்வே அமைச்சர் பியூஷ் கோயல் மற்றும் தொழிலதிபர்கள் உள்பட முக்கிய பிரமுகர்கள் கலந்துகொண்டனர்.

விழாவில் பேசிய பிரபல தொழிலதிபரும், பஜாஜ் குழுமத்தின் தலைவருமான ராகுல் பஜாஜ், “இந்தியாவில் தற்போது பயமான சூழல் நிலவிவருகிறது. அது நம் மனதில் இருக்கிறது. ஆனால், யாரும் சொல்லமாட்டார்கள். என்னுடைய தொழிலதிபர் நண்பர்கள் கூட அதைப்பற்றி பேசமாட்டார்கள். ஆனால், நான் அதனை வெளிப்படையாக சொல்வேன். பயமற்ற ஒரு சூழலை உருவாக்க வேண்டும். ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சிகாலத்தில் அரசில் உள்ள எவரை வேண்டுமானாலும் விமர்சிக்க முடியும்.

தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசாங்கமானது நன்றாகப் பணியாற்றுகிறது. எனினும், நாங்கள் உங்களை விமர்சித்தால் அதனை நீங்கள் பாராட்டுவீர்களா என்பதில் எந்த நம்பிக்கையும் இல்லை. மத்திய அரசு வெளிப்படையாக செயல்பட்டு மற்றவர்கள் கூறும் விமர்சனத்தில் உண்மைத் தன்மையை அறிந்து அதனை மேம்படுத்திக்கொள்ள வேண்டும்” என்று தெரிவித்திருந்தார்.

அமித் ஷாவை மேடையில் வைத்துக்கொண்டே இவ்வாறு பேசிய ராகுல் பஜாஜ், கோட்சேவை தேசபக்தர் என பாஜக எம்.பி பிரக்யா தாகூர் அழைத்ததையும் விமர்சித்தார்.

இதனைத் தொடர்ந்து பேசும்போது, ராகுல் பஜாஜுக்கு பதிலளித்த உள் துறை அமைச்சர் அமித் ஷா, “எதைப்பற்றியும் யாரும் கவலைப்படத் தேவையில்லை. நரேந்திர மோடி அரசாங்கமானது ஊடகங்களில் தொடர்ந்து விமர்சிக்கப்படுகிறது. ஆனால், அதுபோன்ற சூழ்நிலைகள் இருப்பதாக நீங்கள் கூறினால், அதனை மேம்படுத்த நாங்கள் பணியாற்ற வேண்டும்” என்று தெரிவித்தார்.

ஞாயிறு, 1 டிச 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon