மின்னம்பலம் மின்னம்பலம்
மாலை 7, புதன், 23 செப் 2020

ஜெயலலிதா வாழ்க்கை வரலாற்றுத் தொடர் 'குயின்’ டீசர்!

ஜெயலலிதா வாழ்க்கை வரலாற்றுத் தொடர் 'குயின்’ டீசர்!

கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கும் ‘குயின்' எனும் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்று வெப் சீரிஸின் டீசர் இன்று (டிசம்பர் 1) வெளியானது.

கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் நடிகை ரம்யா கிருஷ்ணன் ஜெயலலிதாவின் கதாபாத்திரத்தை ஏற்று நடிக்கும் வெப் சீரிஸ் ‘குயின்'. ’தலைவி’ என்ற பெயரில் இயக்குநர் ஏ.எல்.விஜய்யும், ’தி அயர்ன் லேடி’ என்ற பெயரில் பிரியதர்ஷினியும் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றை திரைப்படமாக எடுத்து வருகின்றனர். தலைவி படத்தில் கங்கனா ரணாவத்தும், தி அயர்ன் லேடி படத்தில் நித்யா மேனனும் நடிக்கின்றனர். ஆனால் கௌதம் வாசுதேவ் மேனன், ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றை வெப் சீரிஸாக எடுத்து வருகிறார். இவருடன் பிரசாத் முருகேசனும் இயக்குநராக பணியாற்றி வருகிறார்

’குயின்’ ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் கடந்த செப்டம்பர் மாதம் வெளியிடப்பட்ட நிலையில் இன்று டீசர் வெளியிடப்பட்டது. இத்தொடரைத் தயாரித்து வரும் எம்எக்ஸ் பிளேயர் நிறுவனம் தனது ட்விட்டர் பக்கத்தில் டீசரை வெளியிட்டுள்ளது. அத்துடன்” மாநில அளவில் முதலிடம் பெற்ற மாணவி, சினிமாவின் சூப்பர் ஸ்டார் கதாநாயகி, இளம் முதலமைச்சர். ஒரு மகாராணியின் கதையின் பரபரப்பான பக்கங்கள் உங்களுக்காகவே” என ஜெயலலிதா குறித்த பல்வேறு தகவல்கள் இடம்பெற்றுள்ளன.

26 நொடிகள் மட்டுமே இருக்கும் இந்த டீசரில், ”சிறுவயதில் பள்ளியில் படிக்கும் போது மேடையில் பேசுவது போன்றும், ஜெயலலிதா நடனத்தில் சிறந்தவராக இருந்தார் என்பதைக் குறிக்கும் வகையில் நடனம் ஆடுவது போன்ற காட்சிகளும் இடம் பெற்றுள்ளன. இதில் எந்த இடத்திலும் அவரது முகம் காட்டப்படவில்லை. மேலும், கட்சிக் கரை கொண்ட சேலை அணிந்து ஒரு கூட்டத்தில் உரையாற்றுவது, குழந்தைக்குப் பெயர் வைப்பது, பொதுக்கூட்டத்தில் அவருக்கு மாலை அணிவிப்பது ஆகிய காட்சிகளும் இடம்பெற்றுள்ளன.

இதுமட்டுமின்றி டீசரில் இடம்பெற்றுள்ள போஸ்டர் ஒன்றில் ஜிஎம்ஆர் என்று எழுதப்பட்டுள்ளது. முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆரை குறிக்கும் வகையில் இவ்வாறு எழுதப்பட்டிருப்பதாகத் தெரிகிறது. தேசிய பேரறிஞர் முன்னேற்றக் கழகம். சமயநல்லூர் அலுவலகம் என்றும் இடம் பெற்றுள்ளது. டீசரில் இறுதியாக, ஒரு குளத்தின் படிக்கட்டில் ஜெயலலிதா நிற்பது போன்ற காட்சிகளும் இடம் பெற்றுள்ளன.

டிசம்பர் 5ஆம் தேதி ட்ரெய்லர் வெளியிடப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

ஞாயிறு, 1 டிச 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon