மின்னம்பலம் மின்னம்பலம்
மாலை 7, புதன், 23 செப் 2020

பாராட்டி கடிதம் எழுதிய திமுக முன்னாள் எம்.எல்.ஏ: வெளியிட்ட ராமதாஸ்

  பாராட்டி கடிதம் எழுதிய திமுக முன்னாள் எம்.எல்.ஏ: வெளியிட்ட ராமதாஸ்

திமுக முன்னாள் எம்.எல்.ஏ தனக்கு எழுதிய கடிதத்தை பாமக நிறுவனர் ராமதாஸ் தனது முகநூல் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

மக்களவைத் தேர்தலில் அதிமுக கூட்டணியில் இணைந்து பாமக தேர்தலை சந்தித்தது. அப்போதிருந்தே திமுகவும், பாமகவுக்கு ஒன்றுக்கொன்று கடுமையான விமர்சனத்தை முன்வைத்து வருகின்றன. முரசொலி அலுவலகம் பஞ்சமி நிலத்தில் அமைந்துள்ளதாக பாமக நிறுவனர் ராமதாஸ் அண்மையில் கருத்து தெரிவிக்க அது சர்ச்சையானது. இதனை முன்வைத்து மீண்டும் இரு கட்சிகளுக்கும் இடையே கருத்து மோதல் உண்டானது. முரசொலி விவகாரம் தொடர்பாக நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்க வேண்டுமென ராமதாஸுக்கு திமுக நோட்டீஸ் அனுப்ப, அதற்கு பாமக வழக்கறிஞர் பதில் அனுப்பியுள்ளார்.

இந்த நிலையில் திமுக முன்னாள் எம்.எல்.ஏ தன்னை பாராட்டியதாக ஒரு கடிதத்தை பாமக நிறுவனர் ராமதாஸ் தனது ட்விட்டர் பக்கத்தில் இன்று (டிசம்பர் 1) வெளியிட்டுள்ளார். அந்தக் கடிதத்தில், “ஐயா. இன்று தங்களது ட்விட்டர் பக்கத்தில் தமிழில் தகவல் தொடர்பு இருக்க வேண்டும் என உத்தரவிட்ட டிஜிபிக்கு பாராட்டு தெரிவித்துள்ளீர்கள். மற்றவர்கள் இதனை பார்த்திருப்பார்களா என்பது சந்தேகம்தான். ஆனால், தாங்கள் ‘காவல் துறையில் இனி தமிழ் தழைக்கட்டும். கனிவு பெருகட்டும்’ என பாராட்டியிருப்பது ரசிக்கத்தக்கது.

ஐயா தாங்கள் கட்சியா நடத்துகிறீர்கள், ஒரு பல்கலைக் கழகத்தை அல்லவா நடத்துகிறீர்கள்.தமிழகம் மட்டுமல்லாது இந்திய அளவில் மக்கள் பிரச்சினைகள் எதுவென்றாலும் உடனடியாக ரியாக்‌ஷன் செய்கிறீர்கள்” என்று அவர் தெரிவிப்பதாக இருக்கிறது. ஆனால், அந்த எம்.எல்.ஏ யார் என்பதை அவர் குறிப்பிடவில்லை. இந்த நிலையில் யார் அந்த எம்.எல்.ஏ என்ற விவாதம் திமுகவினர் மத்தியில் எழுந்துள்ளது.

ஞாயிறு, 1 டிச 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon