மின்னம்பலம் மின்னம்பலம்
மாலை 7, புதன், 23 செப் 2020

ஸ்டாலின் விரைவில் முதல்வராவார்: பாஜக துணைத் தலைவர்!

ஸ்டாலின் விரைவில் முதல்வராவார்: பாஜக துணைத் தலைவர்!

ஸ்டாலின் விரைவில் முதல்வராவார் என பாஜக மாநிலத் துணைத் தலைவர் பி.டி.அரச குமார் பேசியுள்ளார்.

புதுக்கோட்டை மாவட்ட திமுக செயலாளர் பெரியண்ணன் அரசு மகள் அபிநயா-பிரபு ஆகியோரின் திருமண விழா இன்று (டிசம்பர் 1) புதுக்கோட்டையில் நடைபெற்றது. விழாவில் திமுக தலைவர் ஸ்டாலின் கலந்துகொண்டு திருமணத்தை நடத்தி வைத்தார்.

முன்னதாக பேசிய பாஜக மாநிலத் துணைத் தலைவர் பி.டி.அரசகுமார், திமுக தலைவர் ஸ்டாலினை வெகுவாகப் புகழ்ந்தார்.

அவர் உரையாற்றும்போது, “அரசியலுக்காக சொல்லவில்லை. இறைவன் மீது ஆணையிட்டுச் சொல்கிறேன். எம்.ஜி.ஆருக்குப் பிறகு நான் ரசித்த தலைவர் தளபதி ஸ்டாலின் தான். நாம் வாழும் காலத்தில் அவர் வாழ்வது நமக்கு கிடைத்த பெருமை. முதல்வர் இருக்கையை தட்டிப் பறிக்க வேண்டும் என்று நினைத்திருந்தால் ஒரே இரவுக்குள் கூவத்தூர் சென்று முதல்வர் ஆகியிருப்பார். ஆனால், ஜனநாயக ரீதியாக ஆட்சியதிகாரம் கிடைக்க வேண்டும் என்பதற்காக காத்துக்கொண்டிருக்கிறார். பொறுத்தவர் பூமி ஆள்வார் என்பது போல நிரந்தரமாக ஆள வேண்டிய திருநாள் வரும் என்பதற்காக அவர் காத்திருக்கிறார்” என்று குறிப்பிட்டார்.

வருங்கால முதல்வர், வருங்கால முதல்வர் என்று கண்டவர்களெல்லாம் சொல்லிக்கொள்ளும் வார்த்தையை தளபதிக்கு சொல்லாதீர்கள் என திமுக தொண்டர்களுக்கு வேண்டுகோள் வைத்தவர்,

“ 2011ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 31ஆம் தேதி நான் நெஞ்சில் வணங்கிக்கொண்டிருக்கும் எனது தலைவர் கலைஞர் இல்லையென்றால், இந்த பி.டி.அரசகுமார் கொலைக்குற்றவாளியாக சிறைச்சாலை சென்றிருப்பேன். அதனால்தான் அவரது இறுதிப் பயணத்தின்போது கோபாலபுரம், சிஐடி காலணி இல்லம் என இரண்டு, மூன்று முறை காவலர்களின் கட்டுப்பாட்டை கடந்து இறுதியாகப் பார்த்தேன். கரை வேட்டியை கட்டு என்று என்னிடம் நேரு சொன்னார். நான் கட்டிய வேட்டிதான் அது. எப்போது வேண்டுமானாலும் அது எனக்கு சொந்தமான வேட்டிதான். யாரும் அதனை கொடுத்து கட்ட வேண்டிய அவசியமில்லை” என்றும் கூறினார்.

மேலும், “காலம் கனியும், காரியங்கள் நடக்கும். தளபதி அரியணை ஏறுவார். அதைப் பார்த்து நாமெல்லாம் அகமகிழ்வு கொள்வோம்” என்றும் குறிப்பிட்டுள்ளார்.

பாஜகவின் மாநிலத் துணைத் தலைவராக இருக்கும் பி.டி.அரசகுமார், திமுக தலைவர் ஸ்டாலின் முதல்வராவார் என்று பேசியுள்ளது பாஜகவினரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஞாயிறு, 1 டிச 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon