மின்னம்பலம் மின்னம்பலம்
மாலை 7, புதன், 23 செப் 2020

தமிழகம் முழுவதும் கனமழை: இயல்பு வாழ்க்கை பாதிப்பு!

தமிழகம் முழுவதும் கனமழை: இயல்பு வாழ்க்கை பாதிப்பு!

தமிழகத்தில் கடந்த அக்டோபர் மாதம் வட கிழக்கு பருவ மழை தொடங்கியது. கடலோர மாவட்டங்களிலும், உள் மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை பெய்து வந்தது. இந்நிலையில் கடந்த இரு நாட்களாகத் தமிழகம் முழுவதும் பல இடங்களில் தொடர் மழை பெய்து வருகிறது. தமிழகத்துக்கு ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டது.

சென்னை, காஞ்சிபுரம், மதுரை, சேலம், தூத்துக்குடி, கோவை, கடலூர் எனப் பல இடங்களிலும் மழை பெய்து வருகிறது. குறிப்பாக நேற்று இரவு முதல் விடிய விடிய மழை பெய்துள்ளது. இன்று காலை முதல் லேசான தூறலுடன் அவ்வப்போது மழை பெய்து வருகிறது.

சென்னை

சென்னையைப் பொறுத்தவரை அதிகபட்சமாக சோழிங்கநல்லூரில் 112மிமீ மழை பெய்திருக்கிறது. பல்வேறு இடங்களிலும் பெய்த கன மழையின் காரணமாகச் சாலைகளில் நீர் தேங்கி ஆங்காங்கே போக்குவரத்தும் பாதிக்கப்பட்டுள்ளது. போக்குவரத்து பாதிப்பு, மின்சாரம் துண்டிப்பு ஆகியவற்றால் மக்கள் பாதிக்கப்பட்டனர். இந்நிலையில் சென்னையில் மழை பாதிப்பு ஏற்பட்டால் உதவிக்கு அழைக்கச் சென்னை மாநகராட்சி உதவி எண்களை அறிவித்துள்ளது. 044-25384520, 044-25384530, 044-25384540 என்ற எண்களிலும், 9445477205 என்ற வாட்ஸ் அப் எண்ணிலும் தொடர்பு கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

சென்னைக்கு நீர் வழங்கக் கூடிய ஏரிகளும் விரைவாக நிரம்பி வருகின்றன. 3500 மில்லியன் கனஅடி கொண்ட செம்பரம்பாக்கம் ஏரிக்கு 1,182 கன அடி நீர் வந்து கொண்டிருக்கிறது. 1081 மில்லியன் கன அடி கொண்ட சோழவரம் ஏரிக்கும் 35 கன அடி வந்து கொண்டிருக்கிறது. 3231 மில்லியன் கன அடிகொண்ட பூண்டி ஏரிக்கு 470 கன அடி நீர் வந்து கொண்டிருக்கிறது.

காஞ்சிபுரம்

காஞ்சிபுரத்தில் தொடர்ந்து கனமழை பெய்து வருவதால் மாவட்டத்தில் உள்ள 75 ஏரிகள் முழுமையாக நிரம்பியுள்ளன. காந்தி சாலை மண்டபம், ஊஞ்சல் மண்டபம், மாவட்ட ஆட்சியர் வளாகம் உள்ளிட்ட பகுதிகளில் நீர் தேங்கியிருப்பதால் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.

வீடுகளுக்குள் புகுந்த வெள்ளம்

கடலூரில் கன மழையால் பாதிக்கப்பட்ட 1000த்துக்கும் மேற்பட்டோர் நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். பல பகுதிகளில் உள்ள வீடுகளில் நீர் புகுந்துள்ளதால் இரவு முழுவதும் தூங்க முடியாமல் மக்கள் அவதிக்கு ஆளாகியுள்ளனர். இம்மாவட்டத்தில் மட்டும் 8000 வீடுகளில் தண்ணீர் புகுந்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்நிலையில் விடுமுறையில் இருக்கும் அனைத்து அரசு ஊழியர்களும் பணிக்குத் திரும்ப வேண்டும் என்று அம்மாவட்ட ஆட்சியர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

தமிழகம் முழுவதும் மழை பெய்து வருவதால் முக்கிய அணைகள், ஏரிகள் நிரம்பி வருகின்றன. 143 அடி உயரம் கொண்ட பாபநாசம் அணை நிரம்பிய நிலையில், அணைக்கு விநாடிக்கு 5,590 கன அடி தண்ணீர் வருகிறது. அணையில் இருந்து தாமிரபரணி ஆற்றில் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. இதனால் தாமிரபரணி பாலம் மூழ்கியதால் போக்குவரத்துக்குத் தடை விதிக்கப்பட்டது. கரையோர மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு அனுப்பப்பட்டு வருகின்றனர்.

அடுத்த இரண்டு நாட்களுக்கு மழை

சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் புவியரசன், புதுச்சேரி, சென்னை காஞ்சிபுரம், கோவை, நீலகிரி, தேனி, திண்டுக்கல் மாவட்டங்களில் அடுத்த 2 நாட்களுக்கு ஒரு சில இடங்களில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக குறிப்பிட்டுள்ளார். குமரிக் கடல், மாலத்தீவு, லட்சத் தீவு பகுதிகளுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம் எனவும் அறிவுறுத்தியுள்ளார்.

இந்நிலையில் போர்க்கால அடிப்படையில் அரசும், மாவட்ட நிர்வாகங்களும் செயல்பட வேண்டும் என்று திமுக தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

பெங்களூருவுக்குத் திருப்பிவிடப்பட்ட விமானம்

இயந்திர கோளாறு காரணமாகச் சென்னை விமான நிலையத்தில் தரையிறங்க அனுமதி கேட்ட விமானம் பெங்களூருவுக்குத் திருப்பி விடப்பட்டது. மலேசியாவுக்கு செல்லும் சவூதி ஏர்லைன்ஸ் விமானம் சென்னை வான் பகுதியில் சென்று கொண்டிருந்த போது இயந்திரத்தில் கோளாறு இருப்பதை விமானி கண்டறிந்தார். உடனடியாக சென்னை விமான நிலையத்தைத் தொடர்பு கொண்டு தரையிறங்க விமானி அனுமதி கேட்டார். சென்னையில் பலத்த மழையுடன், பனி மூட்டமும் உள்ளதால் பெங்களூரு செல்லுமாறு விமானிக்கு அறிவுறுத்தப்பட்டது. இதையடுத்து விமானம் பெங்களூருவுக்கு திருப்பி அனுப்பப்பட்டது.

ஞாயிறு, 1 டிச 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon