மின்னம்பலம் மின்னம்பலம்
பகல் 1, திங்கள், 10 ஆக 2020

ஈழத்தமிழர்களுக்கு அதிகாரப் பகிர்வு கிடையாது: கோத்தபய ராஜபக்‌ஷே

ஈழத்தமிழர்களுக்கு அதிகாரப் பகிர்வு கிடையாது: கோத்தபய ராஜபக்‌ஷே

பெரும்பான்மை சிங்கள மக்களின் விருப்பத்திற்கு எதிராக ஈழத்தமிழர்களுக்கு அதிகாரம் அளிக்க இயலவில்லை என்று கோத்தபய ராஜபக்‌ஷே தெரிவித்துள்ளார்.

இலங்கை அதிபராக பொறுப்பேற்றுள்ள கோத்தபய ராஜபக்‌ஷே முதல் வெளிநாட்டுப் பயணமாக கடந்த 28ஆம் தேதி இந்தியா வந்தடைந்தார். அவருக்கு குடியரசுத் தலைவர் மாளிகையில் சிறப்பாக வரவேற்பு அளிக்கப்பட்டது. பின்னர், பிரதமர் நரேந்திர மோடி மற்றும் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் ஆகியோரையும் கோத்தபய சந்தித்துப் பேசினார். இரண்டு நாள் இந்திய பயணத்தை முடித்துக்கொண்டு நேற்று இலங்கை திரும்பினார்.

இந்த நிலையில் தி இந்து நாளேட்டுக்கு கோத்தபய ராஜபக்‌ஷே அளித்துள்ள சிறப்புப் பேட்டி இன்று (டிசம்பர் 1) வெளியாகியுள்ளது. அதில் தமிழர்கள் பகுதி தொடர்பான கேள்விக்கு, “தமிழர்களுக்கு வளர்ச்சியையும், சிறந்த வாழ்க்கையையும் கொடுப்பது மிகவும் முக்கியமானது. சுதந்திரம் மற்றும் அரசியல் உரிமைகளைப் பொறுத்தவரை அரசியலமைப்பில் ஏற்கனவே விதிகள் உள்ளன. ஆனால் வேலைகள் மூலமாகவும், மீன்வளம் மற்றும் விவசாயத்தை மேம்படுத்துவதன் மூலமாகவும் அங்குள்ள மக்களுக்கு நேரடியாக பயனளிப்பதற்கான வழிகளை நாம் கண்டுபிடிக்க வேண்டும் என்பது எனக்குத் தெளிவாகத் தெரிகிறது” என்று தெரிவித்தார்.

அதிகாரப்பகிர்வுக்கான முந்தையை உந்துதல்கள் தமிழர் பகுதிகளின் நிலைமையை மாற்றவில்லை என்று குறிப்பிட்ட ராஜபக்‌ஷே, 1987ஆம் ஆண்டு ஏற்படுத்தப்பட்ட 13-வது திருத்தத்தின்படி தமிழர்களுக்கு வழங்க வேண்டிய அதிகாரப்பகிர்வு தொடர்பாக “பெரும்பான்மை சிங்கள சமூகத்தின் விருப்பங்களுக்கும் உணர்விற்கும் எதிராக எங்களால் அதிகாரங்களை முழுமையாக பகிர்ந்தளிக்க முடியவில்லை” என்று தெரிவித்தார்.

மேலும், “பெரும்பான்மை சமூகத்தின் விருப்பங்களுக்கும் உணர்விற்கும் எதிராக எதுவும் செய்ய முடியாது என்றும் நான் நம்புகிறேன். பெரும்பான்மையினரின் விருப்பத்திற்கு எதிராக எதையாவது உறுதியளிக்கும் எவரும் பொய்யானவர். தமிழர் பகுதிகளுக்கு வளர்ச்சிப் பணிகள் செய்யாதீர்கள் என்றும், வேலை வழங்காதீர்கள் என்றும் எந்த சிங்களரும் சொல்லமாட்டார். ஆனால் அரசியல் பிரச்சினைகள் வேறு” என்று என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதற்கு கண்டனம் தெரிவித்துள்ள திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், “ஈழத் தமிழர்களுக்கு அதிகாரப்பகிர்வு செய்வது எனது முன்னுரிமை இல்லை" என்றும், "பெரும்பான்மை சிங்கள மக்களின் விருப்பத்திற்கு எதிராக, ஈழத்தமிழர்களுக்கு அதிகாரம் அளிக்க இயலவில்லை" என்றும் இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்சே இன்றைய "தி இந்து" ஆங்கில பத்திரிகையில் பேட்டி அளித்திருப்பது அதிர்ச்சியளிக்கிறது. இலங்கையில் வாழும் மக்கள் அனைவரையும் சமமாகக் கருதுகிறேன் என்று கூறிய இலங்கை அதிபர், இந்திய பிரதமரைச் சந்தித்த பிறகு, இப்படி பேட்டி அளித்திருப்பது மிகவும் கவலையளிக்கிறது” என்று கண்டனம் தெரிவித்துள்ளார்.

மேலும், “பெரும்பான்மை, சிறுபான்மை என்று பிளவுபடுத்தி பிரித்துப் பேசுவது, அவர் மனதை எது ஆட்கொண்டுள்ளது என்பதற்கான அறிகுறியே தவிர, ஜனநாயகத்தைப் போற்றுவதாகாது. பிரதமர் மோடி அவர்கள் உடனடியாகத் தலையிட்டு, இலங்கையில் தமிழர்கள் விரும்பும் அரசியல் தீர்வு கிடைத்து, அவர்கள் கண்ணியத்துடனும் சுயமரியாதையுடனும் வாழ்வதற்குத் தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்ள வேண்டும்” என்றும் வலியுறுத்தியுள்ளார்.

ஞாயிறு, 1 டிச 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon