மின்னம்பலம் மின்னம்பலம்
மாலை 7, புதன், 23 செப் 2020

ஹைதராபாத் கொடூரம்: 3 போலீசார் சஸ்பெண்ட்!

ஹைதராபாத் கொடூரம்: 3 போலீசார் சஸ்பெண்ட்!

ஹைதராபாத்தைச் சேர்ந்த கால்நடை பெண் மருத்துவர் திவ்யா (பெயர் மாற்றப்பட்டுள்ளது) கடந்த 27ஆம் தேதி பாலியல் வன்கொடுமை செய்து எரித்துக் கொல்லப்பட்டார். இந்த விவகாரத்தில் லாரி டிரைவர் மற்றும் கிளீனர் என 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களுக்கு 14 நாட்கள் நீதிமன்ற காவல் விதிக்கப்பட்டுள்ளது.

திவ்யா கொலை செய்யப்பட்ட விவகாரத்தில் குற்றவாளிகளுக்குக் கடுமையான தண்டனையைப் பெற்றுத் தர வேண்டும் என்று வலியுறுத்தி வரும் அவர்களது குடும்பத்தினர் காவல் துறையினர் மீதும் குற்றம்சாட்டி வருகின்றனர்.

சம்பவத்தன்று திவ்யா போன் ஸ்விட்ச் ஆஃப் செய்யப்பட்டதைத் தொடர்ந்து சம்ஷதாபாத் காவல் நிலையத்தில் புகார் அளித்தும் காவல்துறையினர் உடனடியாக நடவடிக்கை எடுக்கவில்லை அப்படி எடுத்திருந்தால் தங்களது பிள்ளையைக் காப்பாற்றியிருக்கலாம் என்று கூறி வருகின்றனர். போலீசார் தகவலின் படி திவ்யா, அன்றைய தினம் 2 மணியளவில் எரித்து கொல்லப்பட்டதாகச் சொல்லப்படுகிறது.

ஆனால் மூன்று மணிக்கு மேல் தான் காவலர்கள் திவ்யாவைத் தேடுவதற்காகப் புறப்பட்டனர் என்று அவரது குடும்பத்தினர் குற்றம்சாட்டுகின்றனர். திவ்யாவை பற்றி தேவையில்லாத கேள்விகளைக் கேட்டே நேரத்தை வீணடித்ததாகவும், முதல் தகவல் அறிக்கை பதிவு செய்ய காலதாமதமானதாகவும் கூறுகின்றனர்.

இந்நிலையில் உடனடி நடவடிக்கை எடுக்காத போலீசாருக்கு எதிராகப் பிரபலங்களும் பொதுமக்களும் குரல் எழுப்பினர். தற்போது மூன்று காவலர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். சைபராபாத் காவல் ஆணை‌யர் சஜ்ஜனர் மேற்கொண்ட விசாரணையைத் தொடர்ந்து,‌ உதவி ஆய்வாளர் ரவிகு‌மார், தலைமைக் காவலர்கள் வேணு கோபால்‌ மற்றும் சத்யநாராயணன் கவுடா ஆகியோர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

மேலும் கடத்தல், கொலை, தாக்குதல், பாலியல் வன்முறை போன்ற புகார்கள் வந்தால், தங்களது வரம்பைப் பொருட்படுத்தாமல் போலீசார் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் ஆணையர் அறிவுறுத்தியுள்ளார்.

ஞாயிறு, 1 டிச 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon