மின்னம்பலம் மின்னம்பலம்
மாலை 7, புதன், 23 செப் 2020

ஜார்க்கண்ட் தேர்தல்: வன்முறைக்கு நடுவில் அமைதியான வாக்குப்பதிவு!

ஜார்க்கண்ட் தேர்தல்: வன்முறைக்கு நடுவில் அமைதியான வாக்குப்பதிவு!

ஜார்க்கண்ட் சட்டமன்றத் தேர்தலின் முதல் கட்ட வாக்குப்பதிவு எந்தவொரு பெரிய அசம்பாவிதமும் இல்லாமல் அமைதியாக நடைபெற்றது. இருப்பினும், ஒரு சில வன்முறை சம்பவங்கள் பதிவாகியுள்ளன.

பாஜக ஆட்சியில் உள்ள ஜார்க்கண்ட் மாநிலத்தில் 82 தொகுதிகள் உள்ளன. நேற்று (நவம்பர் 30) முதல் டிசம்பா் 20ஆம் தேதி வரை ஐந்து கட்டங்களாகத் தோ்தல் நடைபெறவுள்ளது. முதல் கட்டமாக சதாரா, கும்லா, பிஷுன்பூர், லோஹர்தாகா, மணிகா, ரேட்கர், பங்கி, தால்தோகாஞ்ச், பிஷ்ரம்பூர், சதார்பூர், ஹூசைன்பாத், கார்வா, பவாந்த்பூர் ஆகிய தொகுதிகளுக்கு நேற்று வாக்குப்பதிவு நடந்தது.

மொத்தம் 13 தொகுதிகளில், 15 பெண் வேட்பாளர்கள் உட்பட 189 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். பவாந்த்பூர் தொகுதியில் அதிகபட்சம் 28 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். சதாராவில் தொகுதியில் குறைந்தபட்சம் ஒன்பது வேட்பாளர்கள் உள்ளனர்.

நேற்று மாலை 3 மணிக்கு வாக்குப்பதிவு முடிவடைந்தபோது 62.87 சதவிகித வாக்குகள் பதிவாகியுள்ளன. தேர்தல் நடந்த பகுதிகள் நக்சலைட் தாக்குதல் அதிக அளவில் நடக்கும் பகுதி என்பதாலும் குளிர்காலம், போக்குவரத்து உள்ளிட்ட காரணங்களாலும் வாக்குப்பதிவு 3 மணிக்கே நிறுத்தப்பட்டது.

நிகழ்ந்த வன்முறை சம்பவங்கள்

கும்லா தொகுதிக்கு உட்பட்ட காக்ரா-காத்கோத்வா நகரங்களுக்கு இடையே விஷ்ணுபூர் எனும் இடத்தில் உள்ள தரைப்பாலத்தை நக்சலைட்டுகள் நேற்று காலை வெடிகுண்டு மூலம் தகர்த்தனர். இதில் யாருக்கும் எந்தவிதமான காயமும் ஏற்படவில்லை என கூடுதல் காவல் துறை இயக்குநர் முராரி லால் மீனா தெரிவித்தார். அதே நேரம், 13 சட்டமன்றத் தொகுதிகளிலும் அமைதியான முறையில் வாக்குப்பதிவு நடைபெற்றது என்றார்.

டாலம்கஞ்ச் சட்டமன்றத் தொகுதியில் உள்ள கோசியாரா வாக்குச்சாவடி அருகே இரு குழுக்களிடையே சிறு மோதல் ஏற்பட்டதாக பலமாவ் துணை ஆணையர் மற்றும் அதிகாரி சாந்தனு அக்ராஹரி தெரிவித்தார்.

காங்கிரஸ் வேட்பாளர் கே.என். திரிபாதி வாக்குச் சாவடிக்குள் ஆயுதங்களுடன் நுழைய முயன்றதாகக் கூறப்பட்டதைத் தொடர்ந்து ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்தின் போது, போலீஸ் வாகனத்தின் கண்ணாடி ஜன்னல்கள் உடைக்கப்பட்டன. அதன் பின்னர், நிலைமை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டது.

திரிபாதி வசம் இருந்ததாகக் கூறப்படும் ஒரு கைத்துப்பாக்கி மற்றும் மூன்று தோட்டாக்களை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர்.

ஜார்க்கண்ட் தேர்தலில், பாஜக முதன் முறையாகத் தனித்துப் போட்டியிடுகிறது. காங்கிரஸ், ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா, ராஷ்டிரீய ஜனதா தளம் ஆகிய கட்சிகள் கூட்டணி அமைத்துள்ளன.

முக்கிய வேட்பாளர்களாக பாஜக சார்பில் சுகாதாரத் துறை அமைச்சர் ராமச்சந்திர சந்திரவான்சி பிஷ்ராம்பூர் தொகுதியில் போட்டியிடுகிறார். காங்கிரஸ் தலைவர் ராமேஷ்வர் ஓரான், லோகர்தாகா தொகுதியில் போட்டியிடுகிறார்.

ஞாயிறு, 1 டிச 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon