சிறப்புக் கட்டுரை: மறக்கப்பட்டு விட்டாரா அந்த மாமனிதர்?

public

எஸ்.வி.ராஜதுரை

கடந்த 27ஆம் தேதி ஒரு முக்கிய மனிதரின் நினைவு நாள், அது தமிழகத்தில் சமூக நீதிக்காகப் போராடிக் கொண்டிருப்பவர்கள் பலருக்கும் மறந்து போய்விட்டது. என் வாழ்க்கையில் ஒருமுறையாவது சந்தித்துப் பேச நேரிட்ட அந்த மாமனிதர் 2008இல் இறந்த போது, அந்த மறைவுச் செய்திக்கான முக்கியத்துவத்தை மும்பையின் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதல் அபகரித்துக் கொண்டது.

1988இல், அப்போது ராஜிவ் காந்தி தலைமையிலிருந்த காங்கிரஸிலிருந்து விலகியிருந்த வி.பி.சிங், அவர் தொடங்கியிருந்த ‘ஜன் மொர்ச்சா’ சார்பில் சென்னைக்கு முதல் வருகை தந்திருந்தார். தமிழ்நாட்டில், குறிப்பாக சென்னையில் அவருக்கு ஆதரவாக இருந்தவர்கள், இளைஞர் காங்கிரஸிலிருந்து வெளியேறியிருந்த ஜெகவீரபாண்டியன் போன்று விரல் விட்டு எண்ணக்கூடியவர்கள்தான். அப்போது, இலங்கையிலிருந்து இந்திய அமைதிப்படை திரும்பப் பெறப்பட வேண்டும் என்று தமிழகத்தில் நடைபெற்று வந்த கிளர்ச்சிகளுக்கு ஆதரவளித்து வந்தார் ஜெகவீரபாண்டியன். ஈழத் தமிழர்களின் உரிமையை ஆதரித்து எங்களைப் போன்றவர்கள் நடத்தி வந்த கூட்டங்களுக்கு காலஞ்சென்ற நீதிநாயகம் வீ.ஆர்.கிருஷ்ண ஐயர், ‘மெயின்ஸ்ட்ரீம்’ ஆசிரியர் காலஞ்சென்ற நிகில் சக்ரவர்த்தி போன்றோரை அழைப்பதற்கு உறுதுணையாக இருந்தவர் ஜெகவீரபாண்டியன் என்பதால் எங்கள் இருவருக்குமிடையே நட்பு வளர்ந்தது. அவர் குடியிருந்த வீட்டுக்கு மிக அருகில், அரசாங்கக் குடியிருப்பு மனையொன்றில் வாழ்ந்து வந்த காலஞ்சென்ற பத்திரிகையாளரும் எழுத்தாளருமான ‘பரீக்ஷா’ ஞாநியை நான் அவருக்கு அறிமுகம் செய்து வைத்திருந்தேன்.

சென்னைக்கு வி.பி.சிங் வரப்போவதாக என்னிடம் ஜெகவீரபாண்டியன் முன்கூட்டியே சொல்லியிருந்த தகவலை ஞாநியுடன் பகிர்ந்து கொண்டதுடன், வி.பி.சிங் தங்கியிருந்த பாம் குரோவ் ஓட்டலுக்கு இருவரும் சென்று ஒரு பகல் முழுவதும் அவருடன் உரையாடிக் கொண்டிருந்தோம். அப்போது வி.பி.சிங்கிற்கு உடனடியாக ஒரு அரசியல் கட்சியைத் தொடங்கும் நோக்கம் இருக்கவில்லை. ‘ஜன் மொர்ச்சா’ ஓர் இயக்கமாக நீடித்து இலஞ்சம், ஊழல், சாதியக் கொடுமைகள், நிலப்பிரச்சினை முதலியவற்றைக் கையில் எடுத்துக் கொள்ள வேண்டும் என்றும் அதன் பொருட்டு இந்தியாவிலுள்ள பலதரப்பட்ட இயக்கங்களிடமும் கட்சிகளுடனும் கலந்தாலோசிக்க வேண்டும் என்றும் வி.பி.சிங் எங்களிடம் கூறினார். ‘நக்ஸலைட்டுகள்’ என்று பரவலாக அழைக்கப்படும் மார்க்ஸிஸ்ட்- லெனினிஸ்ட் கட்சியைச் சேர்ந்தவர்களும் நாட்டு நலன்களுக்காகப் போராடுபவர்கள் என்பதால் அவர்களிடமும் உரையாடல்களை நடத்த வேண்டும் என்றார். இலங்கைக்கு இந்திய அமைதிப் படைகள் அனுப்பப்பட்டதை விமர்சித்தார்.

இந்திய மக்களின் முக்கியப் பிரச்சினைகளைக் கோடிட்டுக் காட்டுவதும், அவர்களது நலன்களைக் காப்பாற்ற வழி செய்யக்கூடிய ஆலோசனைகளை உள்ளடக்கியதுமான ஒரு விரிவான அறிக்கையைத் தயாரித்து, அதைப் பற்றிய விவாதங்களை முதலில் இந்திய மாநிலத் தலைநகர்களிலும் பிறகு பிற பகுதிகளிலும் நடத்த வேண்டும் என்று நானும் ஞாநியும் கூறிய ஆலோசனையை அவர் ஏற்றுக்கொண்டார். ஆனால், அன்றிருந்த அரசியல் சூழலில் அந்த ஆண்டு இறுதியில் தோற்றுவிக்கப்பட்ட ஜனதா தளம் கட்சியின் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டு, அதன் தலைமையில் உருவாக்கப்பட்ட கூட்டணி சார்பில் அடுத்த நாடாளுமன்றத் தேர்தலைச் சந்திக்க வேண்டியவராகிவிட்டார். ஞாநி மட்டுமே பின்னர் அவருடன் தொடர்பு வைத்திருந்தார். பொதுக்கூட்டங்களில் அவர் ஆற்றிய உரைகளை மொழிபெயர்த்து வந்தார்.

மிக வசதி படைத்த, தாக்கூர் என்ற உயர்சாதிக் குடும்பத்தில் பிறந்த வி.பி.சிங்கின் பொது வாழ்க்கை அலகாபாத் பல்கலைக் கழக மாணவர் சங்கத்தின் துணைத் தலைவராக இருந்த நாளிலிருந்தே தொடங்கியது. காங்கிரஸ் கட்சியில் சேர்ந்த அவர் மூன்று முறை வெவ்வெறு தொகுதிகளிலிருந்து நாடாளுமன்றத்துக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார். ஒரு முறை மாநிலங்கள் அவை உறுப்பினராக பணியாற்றினார்; ஐந்தாண்டுக்காலம் உத்தரப் பிரதேசத்தின் முதலமைச்சராக இருந்து, அங்கிருந்த கொள்ளைக்கூட்டங்களை ஒழிப்பதில் பெரும் வெற்றி கண்டார். இந்திரா காந்தி அமைச்சரவையில் வணிகத் துறை அமைச்சராகவும் பின்னர் ராஜிவ் காந்தி அமைச்சரவையில் நிதி அமைச்சராகவும் பணியாற்றினார்.

ராஜிவ் காந்தி அமைச்சரவையில் நிதி அமைச்சராக இருந்த போதுதான், உயர் மட்டங்களில் இருந்த ஊழல்களைக் களையெடுக்க உறுதி பூண்டார். அம்பானி, அமிதாப் பச்சன், இன்னும் பல கார்ப்பரேட் நிறுவனங்களின் அலுவலகங்களிலும் வீடுகளிலும் சோதனை போடுவதற்கு அமலாக்கத் துறைக்கு அனுமதி வழங்கியவர் அவர்தான். காங்கிரஸ் கட்சிக்குப் பெரும் நிதி வழங்கி வந்த அவர்கள் மீது வி.பி.சிங் நடவடிக்கை எடுத்தது ராஜிவ் காந்திக்கும் அவரைச் சூழ்ந்திருந்தவர்களுக்கும் எரிச்சலூட்டியது. போதாதற்கு ஸ்வீடனிலிருந்தும் ஜெர்மனியிலிருந்தும் முறையே போஃபர்ஸ் பீரங்கிகளும் நீர்மூழ்கிக் கப்பல்களும் வாங்கியதில் இருந்த முறைகேடுகளையும் கையூட்டுகளையும் புலன் விசாரணை தொடங்க முயன்றதன் காரணமாக அமைச்சரவையிலிருந்து நீக்கப்பட்டார்.

1989ஆம் ஆண்டு நடந்த தேர்தலில் காங்கிரஸ் தோல்வியடைந்தது. எந்தக் கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்காத சூழலில் வி.பி.சிங் தலைமையிலான கூட்டணி, ஒருபுறம் வலதுசாரிக் கட்சியான பாஜக, மறுபுறம் இடதுசாரிகள் ஆகியோர் ‘வெளியே இருந்து கொடுத்த’ ஆதரவைக் கொண்டு ஆட்சி அமைத்தது.

’கூட்டணி தர்மம்’ என்று பேசுகிறார்களே, அதை உண்மையில் நடைமுறைப்படுத்தியவர் அவர்தான். அவரது கூட்டணியில் இருந்த திமுகவுக்கு 1989ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் ஒரு இடம்கூட கிடைக்கவில்லை.அப்படியிருந்தும் அவர் முரசொலி மாறனுக்கு அமைச்சர் பதவி வழங்கினார்.

அவரது ஆட்சிக்காலத்தில்தான் 1990இல் அண்ணல் அம்பேத்கருக்கு ‘பாரத ரத்னா’ விருது வழங்கப்பட்டது. அவரது பிறந்த நாள் அரசாங்க விடுமுறையாக அறிவிக்கப்பட்டது.

1990ஆம் ஆண்டு இந்திய சுதந்திர நாள் விழாக்கூட்டத்தில் பேசிய அவர், நாட்டிலுள்ள பிற்படுத்தப்பட்ட வகுப்பு மக்களுக்குக் பணம் கொடுத்து அவர்களைக் கைதூக்கி விட முடியாது, மாறாக இந்திய ஜனநாயக வாழ்வில் அவர்களுக்குரிய இடத்தை வழங்குவதன் மூலமே அவர்களை மேம்பாடடைய வைக்க முடியும் என்று கூறினார். அதனால்தான் இந்திரா காந்தியாலும் ராஜிவ் காந்தியாலும் ஆண்டுக்கணக்கில் கிடப்பில் போட்டு வைக்கப்பட்ட மண்டல் குழு பரிந்துரைகளை நடைமுறைப்படுத்தினார்.

பாகிஸ்தானில் பெனாஸீர் பூட்டோ ஆட்சியிலிருந்தபோது, இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இன்னொரு போர் நிகழும் அபாயம் உருவாகியிருந்தது. தனது இராஜதந்திர முயற்சிகளின் மூலம் அந்தப் போர் நிகழாமல் தடுத்து நிறுத்தினார் வி.பி.சிங்.

அப்போதுதான் இந்தியாவின் பல பகுதிகளில் –ஆந்திரா உட்பட – முன்னேறிய சாதிகளின், உயர் சாதிகளின் சாதி வெறி கட்டவிழ்த்துவிடப்பட்டது. மக்கள் நலன் கருதும் எந்தப் போராட்டத்திலும் கலந்து கொண்டிராத உயர்சாதி மாணவர்களும் இளைஞர்களும், மண்டல் குழு பரிந்துரைகளை நடைமுறைப்படுத்தியதால் ஏதோ நாட்டிற்கே பேரழிவு ஏற்படுத்திவிட்டதாகப் பொங்கி எழுந்தனர். பின்னோக்கிப் பார்க்கையில், மண்டல் குழு பரிந்துரையை எதிர்த்தவர்களில் இந்துத்துவவாதிகளிலிருந்து காந்தியவாதிகள் வரை, மார்க்ஸியவாதிகளிலிருந்து சமூகவியலாளர்கள் வரை பல்வேறு தரப்பட்டவர்கள் இருந்ததை அறிந்துகொள்ள முடியும். அந்த மனப்பான்மை இன்னும் சிபிஎம் கட்சிக்கு இருப்பதால்தான் பொருளாதாரரீதியாக பின்தங்கியவர்களுக்கு பத்து விழுக்காடு ஒதுக்கீட்டை இன்று ஆதரிக்கின்றது. மண்டல் குழு பரிந்துரைகளை நேரடியாக எதிர்க்காமல், மறைமுகமாக எதிர்ப்பதற்காக இரத யாத்திரையைத் தொடங்கினார் அத்வானி. அந்த ’இரதம்’ தமிழ்நாட்டினூடாகவும் சென்றது. பிகாரில் பொருளாதாரப் பிரச்சினைக்காக சில மணி நேரங்களில் ஆயிரக்கணக்கான ஏழை விவசாயிகளையும், தலித்துகளையும் திரட்டக்கூடிய செல்வாக்கும் பெற்றிருந்த மார்க்ஸிஸ்-லெனினிஸ்ட் கட்சியொன்று மண்டல், கமண்டல் ஆகிய இரண்டுமே மக்களை திசைதிருப்பும் வேலை என்று கணித்தது. அன்று பிகார் முதலமைச்சராக இருந்த லல்லுபிரசாத் யாதவ்தான் துணிச்சலோடு, அங்கு இரத யாத்திரை வந்த அத்வானியைக் கைது செய்து சிறையில் அடைத்தார்.

ஆத்திரமடைந்த பாஜக, வி.பி.சிங் அமைச்சரவைக்கு ‘வெளியே இருந்து’ தந்து வந்த ஆதரவை உடனடியாக விலக்கிக் கொண்டதாலும், ராஜிவ் காந்தியின் தலைமையிலான காங்கிரஸும் வி.பி.சிங்கின் ஆட்சியைக் கவிழ்க்கும் நோக்கம் கொண்டிருந்ததாலும், வி.பி.சிங் அமைச்சரவை பதவி விலகியது. பின்னர் 52 நாடாளுமன்ற உறுப்பினர்களைக் கொண்ட ஒரு ஆட்சி, சந்திரசேகர் தலைமையின் கீழ், சுப்பிரமணியசாமி முதலானோர் அமைச்சர்களாக இருக்க, ராஜிவ் காந்தி காங்கிரஸ் ‘வெளியே இருந்து வழங்கிய’ ஆதரவுடன் சில மாதங்கள் ஆட்சி நடத்தியது. பின்னர் அதுவும் கவிழ்க்கப்பட்டது வரலாறு.

காங்கிரஸுக்கு வி.பி.சிங் மேல் இருந்த கோபத்துக்கு இன்னொரு காரணம், பஞ்சாபில் சீக்கியர்களுக்கு விரோதமாக செயல்பட்டுக் கொண்டிருந்த ஆளுநர் சித்தார்த சங்கர் ரேவை (இந்தக் காங்கிரஸ்காரர், மேற்கு வங்க முதலமைச்சராக இருந்தபோது நக்ஸலைட் இளைஞர்கள், அவ்வாறு சந்தேகிக்கப்பட்ட இளைஞர்கள் நூற்றுக்கணக்கில் ‘என்கவுன்டரில்’ கொல்லப்பட்டனர்) அகற்றிவிட்டு ஒரு நேர்மையான முன்னாள் அரசாங்க அதிகாரியை புதிய ஆளுநராக நியமித்ததும், இந்திரா காந்தி கொலையை அடுத்து சீக்கியர்கள் மீது நடத்தப்பட்ட கொலைக்கு அரசாங்கத்தின் சார்பில் மன்னிப்புக் கேட்டுக் கொள்வதற்காக அவர் பொற்கோவிலுக்குச் சென்றதும்தான்.

பிரதம அமைச்சராக இருந்தபோது அவருக்கேற்பட்ட பெரும் சோதனை, இப்போது சிறையிலிருக்கும் காஷ்மீர் அரசியல் கட்சித் தலைவர் மெஹ்பூபா தீவிரவாதிகளால் கடத்திச் செல்லப்பட்ட விவகாரம். அவரை மீட்பதற்கான நடவடிக்கைகளின் தொடர்ச்சியாக ஜம்முகாஷ்மீர் ஆளுநராக, பாஜவின் நிர்ப்பந்தத்தின் பேரில் ஜக்மோகன் என்பவரை நியமித்தார் வி.பி.சிங். ஜக்மோகனின் பாரபட்சமான நடவடிக்கைகளின் காரணமாக, தீவிரவாதிகள் பண்டிட்டுகளைத் தாக்குவது அதிகரித்தது. காஷ்மீரிலுள்ள சாதாரண முஸ்லிம் மக்கள் இத்தகைய தாக்குதலுக்கு ஒரு போதும் ஆதரவளிக்கவில்லை என்றாலும் ‘ இந்து பிரச்சினையை’ கையில் எடுத்துக் கொள்ள பாஜகவுக்கு அது வாய்ப்பளித்தது.

ராஜிவ் காந்தி கொலையுண்ட பிறகு நரசிம்ம ராவின் தலைமையில் காங்கிரஸ் மீண்டும் ஆட்சி அமைத்த பிறகும்கூட அக்கட்சிக்கு வி.பி.சிங் மீது இருந்த ஆத்திரம் தணியவில்லை. இந்தியாவில் திருடிய செல்வத்தை செய்ண்ட் கிட்ஸ் என்னும் தீவில் அவர் வைத்திருந்ததாக ஒரு பொய் குற்றச்சாட்டு தொடுக்கப்பட்டது, பல ஆண்டுகள் நீடித்திருந்த அந்த குற்றச்சாட்டு அப்பட்டமான பொய் என்று நாளடைவில் நிரூபிக்கப்பட்டது.

மண்டல் குழு பரிந்துரைகளை நடைமுறைப்படுத்தி பிற்படுத்தப்பட்ட வகுப்பினரின் நலன் மேம்பட வழி செய்ததால் பிரதமர் பதவியை இழந்த வி.பி.சிங்கால், உத்திரப் பிரதேசத்திலோ, பிகாரிலோ பிற்படுத்தப்பட்ட வகுப்பினரின் அரசியல் ஆதரவைப் பெற முடியவில்லை, அந்தப் ’பேட்டை’களெல்லாம் அப்போது முலாயம் சிங் யாதவ், நிதிஷ் குமார், கல்யாண் சிங் , மாயாவதி போன்றவர்கள் வசம் இருந்தன,

போதாதற்கு வி.பி.சிங்கின் இரு சிறுநீரகங்களும் பழுதடைந்துவிட்டதால், அவர் ‘டயாலிஸிஸ்’ சிகிச்சை மூலமே சில ஆண்டுக் காலம் தன் வாழ்க்கையை நீட்டிக்க முடிந்தது. வி.பி.சிங்கிற்கு மாற்று சிறுநீரகம் தேவைப்படுகிறது என்ற சூழலில், திராவிடர் கழகத்தைச் சேர்ந்த இளைஞர்கள் ‘உங்களுக்காக எங்கள் சிறுநீரகங்களை தானமாக வழங்க முன்வருகிறோம்’ என்று அறிவித்தனர். ஓவியங்கள் தீட்டுவதிலும் கவிதைகள் எழுதுவதிலும் மட்டுமே அவர் நாட்களைக் கழித்துக் கொண்டிருக்கவில்லை.பாபர் மசூதி இடிப்பிற்குப் பின் நடந்த வகுப்புக் கலவரங்களைக் கண்டித்தும், டெல்லியில் குடிசைப் பகுதிகளிலிருந்து ஏழை மக்கள் வெளியேற்றப்படுவதை எதிர்த்தும் அவர் உண்ணாநோன்புப் போராட்டங்களில் ஈடுபட்டு வந்தார். இதன் காரணமாக, அவரது சிறு நீரகக் கோளாறு கடுமையாகி உயிர் நீத்தார்.

இவ்வாறு அரசியல், சமுதாயம், இயற்கை எல்லாவற்றாலும் உதாசீனம் செய்யப்பட்ட, அவற்றை அமைதியாக எதிர்கொண்ட அபூர்வமான மனிதராக வாழ்ந்திருக்கிறார் வி.பி.சிங்.

**கட்டுரையாளர் குறிப்பு**

கட்டுரையாளர் எஸ்.வி.ராஜதுரை மார்க்சியச் சிந்தனையாளரும், எழுத்தாளரும் ஆவார். மார்க்சியம், பெரியாரியம், அம்பேத்கரியம் தமிழக அரசியல் பற்றிய பல நூல்களையும் கட்டுரைகளையும் தமிழிலும் ஆங்கிலத்திலும் எழுதியுள்ளார். சிறுகதைகளையும் கவிதைகளையும் தமிழாக்கம் செய்துள்ளார். மனித உரிமை இயக்கத்தில் களப்பணி ஆற்றியவர். பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் பெரியார் உயர் ஆய்வு மையத்தின் தலைவராகப் பணிபுரிந்தவர். The Communist Manifesto என்னும் புகழ்பெற்ற நூலை ‘கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கை’ என்னும் தலைப்பில் தமிழாக்கம் செய்திருக்கிறார். வ.கீதாவுடன் இணைந்து மார்க்சியம், பெரியாரியம் சார்ந்த முக்கியமான நூல்களை எழுதியுள்ளார்

�,”

+1
0
+1
0
+1
0
+1
1
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *