மின்னம்பலம் மின்னம்பலம்
பகல் 1, வியாழன், 6 ஆக 2020

புதிய தமிழகத்திற்கு சின்னம்: உயர் நீதிமன்றம்!

புதிய தமிழகத்திற்கு சின்னம்: உயர் நீதிமன்றம்!

புதிய தமிழகம் கட்சிக்கு சின்னம் வழங்குவது தொடர்பாக மாநில தேர்தல் ஆணையத்திற்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

புதிய தமிழகம் கட்சியின் தலைவர் கிருஷ்ணசாமி சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில், “புதிய தமிழகம் கட்சி பதிவு செய்யப்பட்டு அங்கீகாரம் பெறாத கட்சியாக தேர்தல்களில் போட்டியிட்டு வருகிறது. அங்கீகாரம் பெறாத அரசியல் கட்சிகள் தேர்தலில் போட்டியிடும்போது ஒவ்வொரு தொகுதியிலும் ஒவ்வொரு சின்னம் ஒதுக்கப்படுகிறது.

வெவ்வேறு சின்னங்களில் போட்டியிடுவதால் மக்களிடம் இருந்து உரிய அங்கீகாரம் கிடைக்காத நிலை உள்ளது. கடந்த 2016 சட்டமன்றத் தேர்தலின்போது எங்களுக்கு தொலைக்காட்சிப் பெட்டி சின்னம் ஒதுக்கப்பட்டிருந்தது. ஆகவே, வரும் உள்ளாட்சித் தேர்தலில் எங்கள் கட்சி போட்டியிடும் அனைத்து இடங்களிலும் அதே சின்னத்தை ஒதுக்க உத்தரவிட வேண்டும்” என்று கோரிக்கை விடுத்திருந்தார்.

இவ்வழக்கை விசாரித்த நீதிபதி ஜெயச்சந்திரன், இன்று (நவம்பர் 23) அளித்த தீர்ப்பில், “புதிய தமிழகம் கட்சிக்கு ஒரே சின்னத்தை ஒதுக்கக் கோரி அக்கட்சியின் தலைவர் மாநில தேர்தல் ஆணையத்துக்கு அளித்த மனுவை பரிசீலிக்க வேண்டும்” என்று மாநில தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட்டார். மேலும், முடிவை மனுதாரருக்கு தெரிவிக்க வேண்டும் என்று குறிப்பிட்ட நீதிபதி வழக்கினையும் முடித்துவைத்தார்.

1997ஆம் ஆண்டு புதிய தமிழகம் கட்சியைத் தொடங்கிய கிருஷ்ணசாமி அதன்பிறகு நடந்த தேர்தல்களை திமுக, அதிமுக கட்சிகளுடன் கூட்டணியில் இருந்து சந்தித்துள்ளார். கடந்த நாடாளுமன்றத் தேர்தலின்போது அதிமுக கூட்டணியில் அங்கம் வகித்த புதிய தமிழகம் கட்சிக்கு தென்காசி தொகுதி ஒதுக்கப்பட்டது. முதலில் தனி சின்னத்தில் போட்டியிடுவோம் எனத் தெரிவித்த கிருஷ்ணசாமி, பின்னர் முடிவை மாற்றிக்கொண்டு அதிமுகவின் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட்டார்.

நடந்துமுடிந்த இடைத் தேர்தலில் பட்டியலின வெளியேற்றம் என்கிற தங்களது கோரிக்கை நிறைவேற்றப்படவில்லை எனக் கூறி அதிமுகவுக்கு புதிய தமிழகம் ஆதரவளிக்கவில்லை. இந்த நிலையில்தான் உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிடத் தனி சின்னம் கேட்டுள்ளது.

சனி, 23 நவ 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon