மின்னம்பலம் மின்னம்பலம்
மாலை 7, வெள்ளி, 14 ஆக 2020

ரஜினி-கமல்-ஸ்டாலின்: ஜெயக்குமார் சொல்லும் கணக்கு!

ரஜினி-கமல்-ஸ்டாலின்: ஜெயக்குமார் சொல்லும் கணக்கு!

ரஜினி, கமலுடன் கூட்டணி அமைக்க திமுக முயற்சிப்பதாக அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

ரஜினியும் கமலும் அரசியலில் இணைய வேண்டும் என்று இயக்குனர் எஸ்.ஏ.சந்திரசேகர் பேசியது விவாதத்தை உண்டாக்கிய நிலையில், “மக்கள் நலனுக்காகத் தேவைப்பட்டால் கண்டிப்பாக இணைவோம்” என்று ரஜினிகாந்தும், கமல்ஹாசனும் ஒருமித்த குரலில் தெரிவித்தது அதனை அடுத்த கட்டத்திற்கு நகர்த்தியது.

இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய ரஜினிகாந்த், “தேர்தல் வரும்போது முதல்வர் வேட்பாளர் குறித்து முடிவு செய்வோம்” என்றார். மேலும், 2021ஆம் ஆண்டு தமிழக மக்கள் அற்புதத்தை, அதிசயத்தை நிகழ்த்துவார்கள் எனவும் குறிப்பிட்டிருந்தார்.

இந்த நிலையில் அறுவை சிகிச்சை மேற்கொண்டு ஓய்வெடுத்து வரும் மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசனை திமுக தலைவர் ஸ்டாலின் நேற்று சந்தித்து நலம் விசாரித்தார். அதுதொடர்பாக தனது ட்விட்டர் பக்கத்திலும், ‘நண்பர் 'கலைஞானி' கமல்ஹாசன் அவர்களை மருத்துவமனையில் சந்தித்து நலம் விசாரித்தேன். விரைவில் அவர் முழுநலம் பெற வேண்டுமென என் விருப்பத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன்” என்று குறிப்பிட்டிருந்தார்.

இந்த நிலையில் டெல்லியில் நேற்று (நவம்பர் 22) ஊடகத்திடம் பேசிய அமைச்சர் ஜெயக்குமாரிடம், "உள்ளாட்சி அமைப்பில் மறைமுகத் தேர்தல் குறித்து ஸ்டாலின் விமர்சித்து வருகிறார். தற்போது அவர் கமல்ஹாசனை சந்தித்துள்ளார். சந்திப்பில் அரசியல் பேசப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. இதனை எப்படி பார்க்கிறீர்கள்" என்று கேள்வி எழுப்பப்பட்டது.

அதற்கு அமைச்சர் ஜெயக்குமார், "உள்ளாட்சித் தேர்தல் நடைபெற வேண்டும் என்பதுதான் அனைவரின் எண்ணமும். உச்சநீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளதால் உள்ளாட்சித் தேர்தல் நடந்தே தீரும். ஆனால், நடந்து முடிந்த இடைத்தேர்தலில் திமுகவின் செல்வாக்கு தெரிந்துவிட்டது. திமுகவின் செல்வாக்கு என்பது 18 சதவீதம் தான்.ஆனால் அதிமுகவின் செல்வாக்கு 58 சதவிகிதம் உள்ளது. ஆகவே, உள்ளாட்சித் தேர்தலை நிறுத்த திமுக முயற்சித்து வருகிறது.

அரசியலுக்கு அப்பாற்பட்டு நடிகர் கமல்ஹாசன் நலம் பெற்று வர வேண்டும் என்று வேண்டுகிறேன். தற்போது கமல்ஹாசனும் ரஜினிகாந்தும் இணைந்தால் நல்லது என்று துரைமுருகன் கூறுகிறார். கமல்ஹாசனும் ரஜினிகாந்தும் இணைந்து ஒரு பத்து சதவீத வாக்குகளை வாங்குவார். அதனுடன் திமுகவின் 18 சதவிகிதத்தை சேர்த்தால் 28 சதவிகிதம் தேறும். ஆகவே அதற்கான வேலைகள் தான் தற்போது நடந்து வருகிறது. ரஜினி கமலுடன் கூட்டணி வைப்பதற்கான முயற்சிகளில் திமுக ஈடுபட்டிருக்கிறது"என்று தெரிவித்தார்.

ரஜினி படத்தின் தலைப்பு

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி, “அதிசயம் நிகழ்த்துவார்கள் என்பது ரஜினிகாந்தின் புதிய திரைப்படத்தின் தலைப்பாக இருக்கலாம். மக்களுக்கு பணி செய்வது என்பதும், அரசியலுக்கு வருவது என்பதும் வேறு வேறு. ரசிகர் மன்றங்கள் மூலமாகவும் மக்களுக்கு பணி செய்யலாம். அரசியலுக்கு வந்து பணி செய்வார் என்பதில் எனக்கு நம்பிக்கை இல்லை. எம்.ஜி.ஆருக்குப் பிறகு அரசியலில் திரை நட்சத்திரங்கள் ஜொலிப்பது சிரமம். அது இயலாது காரியம்” என்று தெரிவித்தார்.

சொந்தப் பிரச்சினைக்காக இணைவு

சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய திருமாவளவன், “ரஜினிகாந்தும், கமல்ஹாசனும் இணைவது நாட்டுப் பிரச்சினையல்ல. அது அவர்களின் சொந்த பிரச்சினை. தனிப்பட்ட பிரச்சினைக்காகவே அவர்கள் சேர்கிறார்கள்” என்று தெரிவித்தார்.

2021ஆம் ஆண்டு அதிசயம், அற்புதம் நிகழும் என்று ரஜினிகாந்த் சொல்லியிருக்கிறாரே என்ற கேள்விக்கு, “ரஜினிகாந்த் இமயமலைக்குச் சென்று திரும்பியிருக்கிறார் என்று கருதுகிறேன். இமயமலையில் அவருக்கு யாராவது சொல்லியிருப்பார்கள்” என்று பதிலளித்தார்.

வெள்ளி, 22 நவ 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon