மின்னம்பலம் மின்னம்பலம்
திங்கள், 20 ஜன 2020

’பெண்கள் சுதந்திரம் என்பது மில்லியன் டாலர் கேள்வி’: நீதிமன்றம்!

’பெண்கள் சுதந்திரம் என்பது மில்லியன் டாலர் கேள்வி’: நீதிமன்றம்!

பாலியல் குற்றங்களில் ஈடுபடுபவர்களுக்கு கடுமையான தண்டனையும் , அபராதமும் விதிக்காவிட்டால் பாதிக்கப்பட்டோருக்கு நீதி கிடைக்காது எனச் சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளை தெரிவித்துள்ளது.

நாகை மாவட்டம் கீழ்வேளூர் பகுதியைச் சேர்ந்த ஈஸ்வரன், 2012ல் மனநலம் பாதிக்கப்பட்ட பெண்ணை பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கி கொலை செய்த வழக்கில் கைது செய்யப்பட்டார்.இந்த வழக்கில் அவருக்கு இரட்டை ஆயுள் தண்டனை விதித்து தஞ்சாவூர் கூடுதல் மாவட்ட அமர்வு நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

இரட்டை ஆயுள் தண்டனையை எதிர்த்து ஈஸ்வரன் சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் மனு தாக்கல் செய்திருந்தார்.இந்த மனு நேற்று (நவம்பர் 22) நீதிபதி வைத்தியநாதன், நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது கொலைக்குற்றத்தை விட பாலியல் குற்றம் கொடூரமானது என்று தெரிவித்த நீதிபதிகள் மனநலம் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் காளான் போல பெருகி வருவதாகத் தெரிவித்துள்ளனர்.

மேலும் பாலியல் குற்றங்களில் ஈடுபடுபவர்களை இரும்புக்கரம் கொண்டு ஒடுக்க வேண்டும். ஆப்கானிஸ்தான், எகிப்து, அரபு நாடுகள், ஈரான் போன்ற நாடுகளில் பாலியல் குற்றத்திற்குத் தூக்குத் தண்டனை விதிக்கப்படுவதாகவும், சவுதியில் குற்றவாளிகளை பொது இடத்தில் நிறுத்திக் கல்லெறிந்து கொல்லப்படுவதாகவும் நீதிபதிகள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

”காந்தியின் கருத்துப்படி இந்தியாவில் பெண்கள் சுதந்திரத்தை அனுபவிக்கிறார்களா என்பது மில்லியன் டாலர் கேள்விகளை எழுப்புகிறது. குற்றவாளிகளுக்குக் கடுமையான தண்டனை மற்றும் அபராதம் விதிக்கா விட்டால் பாதிக்கப்பட்டோருக்கு நீதி கிடைக்காது.

இந்த வழக்கில் மனுதாரருக்குத் தூக்குத் தண்டனை விதிக்கப்பட்டிருக்க வேண்டும். நேரில் பார்த்த சாட்சிகள் இல்லாமல் சந்தர்ப்ப சாட்சியங்களின் அடிப்படையில் மனுதாரர் தண்டிக்கப்பட்டு உள்ளார்” என்று தெரிவித்த நீதிபதிகள் அவரது மனுவைத் தள்ளுபடி செய்து கீழமை நீதிமன்றம் விதித்த தண்டனையை உறுதி செய்து உத்தரவிட்டனர்.

பெண்களுக்கு எதிராக மட்டும் சுமார் 3.59 லட்சம் குற்றச்சம்பவங்கள் நடைபெற்றுள்ளதாக 2017 தேசிய குற்ற ஆவணக் காப்பக தரவுகள் தெரிவிக்கின்றன.

வெள்ளி, 22 நவ 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon