மின்னம்பலம் மின்னம்பலம்

வெள்ளி 22 நவ 2019

கிரிக்கெட் வீரர்களை மிரட்டும் பிங்க் பால்!

கிரிக்கெட் வீரர்களை மிரட்டும் பிங்க் பால்!

இந்தியா-வங்க தேசம் அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி கொல்கத்தாவில் உள்ள ஈடன் கார்டன் மைதானத்தில் இன்று (நவம்பர் 22) துவங்கவுள்ளது.

சாதாரண டெஸ்ட் போட்டிகளின் மீது ரசிகர்களின் ஆர்வம் குறைந்து வருவதையடுத்து இம்முறை ரசிகர்களை ஈர்க்கும் விதமான பகலிரவு போட்டியை நடத்த திட்டமிட்டுள்ளனர். இந்தியா விளையாடப்போகும் முதல் பகலிரவு போட்டி இதுதான். இதுமட்டுமின்றி இந்த மேட்ச் மேலும் சில சிறப்பம்சங்களைக் கொண்டுள்ளது. பிசிசிஐ தலைவராக கங்குலி பொறுப்பேற்பதற்கு முன்பு வரை ரெட்பால் போட்டியாக இருந்த ஈடன் கார்டன் டெஸ்ட் போட்டி, தற்போது பிங்க் பால் போட்டியாக மாறியுள்ளது.

போட்டி குறித்து விராட் கோலி

சிவப்பு நிற பந்துகளுடன் ஒப்பிடும்போது இந்த பிங்க் நிற பந்துகள் வித்தியாசமானவை. மேட்சில் பயன்படுத்தப்பட இருக்கும் பிங்க் நிற பந்துகளைப் பயன்படுத்தி இரு அணிகளும் பயிற்சிகளில் ஈடுபட்டனர். இந்த பந்துகளுடன் விளையாடுவது குறித்து இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி பேசும்போது, “பிங்க் நிற பந்துகளில் விளையாடுவது சவாலானதாக இருக்கிறது. வெள்ளை மற்றும் சிவப்பு பந்துகளுடன் ஒப்பிடும்போது இவை சற்று கனமானதாக இருக்கிறது. பிங்க் பந்து எடை அதிகமானதாக இருக்கிறது. அதனால் ஸ்லிப் கேட்சுகளைப் பிடிப்பது சற்று கடினமாக இருக்கிறது. இவை கைகளைக் கனமாகத் தாக்குகிறது. அதன் வலி ஹாக்கி பந்துகளில் அடிவாங்குவது போன்று உள்ளது. வெள்ளை மற்றும் சிவப்பு நிற பந்துகள் எவ்வளவு வேகத்தில் கீழே வரும் என நமக்குத் தெரிந்துவிடும் கேட்ச் பிடிக்கும்போது அதைக் கணித்துவிடலாம். ஆனால் பிங்க் நிற பந்துகள் ஃபீல்டர்களுக்கு சிரமத்தைத் தரும். உயரமாக வரும் கேட்சுகளைப் பிடிப்பதும் சவாலாக இருக்கும். இவற்றைப் பயன்படுத்தி விளையாட அதிக ஆற்றல் தேவைப்படுகிறது.” என்று கூறினார்.

பிங்க் நிற பந்துகளின் உருவாக்கம்

பேட்ஸ்மேன்களுக்கும், பந்து வீச்சாளர்களுக்கும் சவாலாக இருக்கப்போகும் இந்த பிங்க் நிற பந்துகள் உருவாக்கப்படும் முறையும் வித்தியாசமானது. இந்த பிங்க் நிற பந்துகளைத் தயாரிக்க முதலில் பந்து செய்வதற்கான லெதர், பிங்க் நிற சாயத்தில் ஊறவைக்கப்படுகிறது. பின்னர் அது சிறு துண்டுகளாக வெட்டப்படுகிறது. வெட்டப்பட்ட இந்த துண்டுகள் ஒன்றிணைக்கப்பட்டு பந்திற்கான கோள வடிவில் தைக்கப்படுகிறது. அதற்குப் பின்னர் இந்த லெதர் பந்துகளின் மேல் இரு அரைக்கோள வடிவ மேல் அமைப்பு வைத்து ஒன்றாகத் தைக்கப்படுகிறது. 155 கிராம் முதல் 163 கிராம் வரை எடை கொண்டதாக இந்தப் பிங்க் நிற பந்துகள் உருவாக்கப்படுகிறது. சிவப்பு மற்றும் வெள்ளை நிற பந்துகளைப் போன்று அல்லாமல் இந்த பிங்க் பாலில் கறுப்பு நிறத்தில் தையல் இடப்படுகிறது. இவ்வாறு செய்யப்பட்ட பந்துகளின் மேற்பரப்பில் பிங்க் நிற அரக்குபோன்ற திரவம் பூசப்பட்டு அவை உறுதிபடுத்தப்படுகிறது. இறுதியாக உற்பத்தியாளரின் முத்திரை பதிக்கப்பட்டு விற்பனைக்கு வருகிறது.

பிங்க்காக ஜொலிக்கும் கொல்கத்தா

இன்று நடைபெறவிருக்கும் இந்த போட்டியை முன்னிட்டு கொல்கத்தா நகர் முழுவதும் பிங்க் நிறத்தில் ஜொலிக்கிறது. கட்டிடங்கள் பிங்க் வண்ண விளக்குகளால் அலங்காரம் செய்யப்பட்டுள்ளது. கடைகளில் பிங்க் நிறத்தில் இனிப்பு வகைகள் விற்பனை செய்யப்படுகிறது. இது தொடர்பான புகைப்படங்களை கங்குலி தனது டிவிட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

பிசிசிஐ தலைவர் கங்குலி உரை

ஸ்டார் ஸ்போர்ட்ஸ் நிறுவனத்துக்கு கங்குலி பேட்டியளிக்கும்போது, “பல முன்னாள் கேப்டன்கள் இந்த மைதானத்தை அலங்கரிக்க உள்ளனர். வங்கதேச பிரதமரும் மேற்கு வங்க முதல்வரும் இந்த போட்டியைக்காண கலந்துகொள்ள உள்ளனர். விளையாட்டுத்துறையில் சாதித்த மேரி கோம், பி.வி. சிந்து, அபினவ் பிந்த்ரா, சானியா மிர்சா, கோபிசந்த், பஜ்ரங் பூனியா உள்ளிட்டோரும் டெஸ்ட் போட்டியைக் காண வருகை தர இருக்கின்றனர். ஒட்டுமொத்த கொல்கத்தா நகரமே பிங்க் நிறத்தில் ஜொலிக்கிறது. மைதானத்தைச் சுற்றி இருக்கும் பெரும்பாலான கட்டடங்கள் பிங்க் மயமாக உள்ளன. மகிழ்ச்சியாக இருக்கிறது” என்று தெரிவித்தார்.

பகலிரவு போட்டி நல்லதா? சச்சின் கருத்து

பிங்க் பந்துகள் பயன்படுத்தப்படும் இந்த பகலிரவு போட்டி குறித்து சச்சின் பேசும்போது, “பகலிரவு டெஸ்ட் போட்டிகள், அரங்கு நிறைய ரசிகர்களைக் கொண்டு வருவதையும், டெஸ்ட் கிரிக்கெட்டுக்கு புதிய அம்சத்தைச் சேர்ப்பதையும் முக்கியமாகக் கொண்டுள்ளது. இவை நல்லது தான் என்றாலும், போட்டி முடிந்தபின் எவ்வளவு பனி மைதானத்தில் விழுந்திருக்கிறது, தரமான விளையாட்டு சமரசம் செய்யப்படுகிறதா என ஒவ்வொரு விஷயத்தையும் குறித்து ஆலோசிக்க வேண்டும். இந்திய வேகப்பந்துவீச்சாளர்கள் சிறப்பாக செயல்பட்டு வருகிறார்கள். அதற்கு உடற்தகுதி மிகவும் முக்கியம். உடற்தகுதியுடன் இருந்தால் தான் நீண்ட ஓவர்கள் வீச முடியும்” என்று தெரிவித்துள்ளார்.

பகலிரவுப் போட்டிகளில் ரசிகர்களின் கவனத்தை ஈர்க்கும் விதமாக உள்ளது. இது குறித்த ஆர்வம் ரசிகர்கள் மத்தியில் அதிகமாகியுள்ளது. பிசிசிஐ தலைவராக பொறுப்பேற்றதற்குப் பின்னர் கங்குலி இந்த மாற்றங்களைக் கொண்டு வந்துள்ளார். இவற்றின் காரணமாக அதிக மக்கள் கலந்து கொண்டு வருமானமும் அதிகரிக்க வாய்ப்புள்ளது. ஆனால் இந்த போட்டிகள் விளையாட்டு வீரர்களுக்கு அதிக அழுத்தத்தைத் தருவதாக அமைய வாய்ப்புள்ளது. அத்துடன் பிங்க் நிற பந்துகளில் விளையாடுவது இன்னும் அதிக சிரமத்தைத் தரலாம். எனினும் ரசிகர்கள் அனைவரும் இந்த போட்டியைக்காண மிகுந்த எதிர்பார்ப்புடன் காத்திருக்கின்றனர்.

கிச்சன் கீர்த்தனா: வீட்டிலேயே ஹோட்டல் சுவை: வத்தக்குழம்பு

3 நிமிட வாசிப்பு

கிச்சன் கீர்த்தனா: வீட்டிலேயே ஹோட்டல் சுவை: வத்தக்குழம்பு

கிச்சன் கீர்த்தனா: வீட்டிலேயே ஹோட்டல் சுவை: வடகறி

4 நிமிட வாசிப்பு

கிச்சன் கீர்த்தனா: வீட்டிலேயே ஹோட்டல் சுவை: வடகறி

காவலருடன் வாக்குவாதம்: வழக்கறிஞர் விரைவில் கைது!

4 நிமிட வாசிப்பு

காவலருடன் வாக்குவாதம்: வழக்கறிஞர் விரைவில் கைது!

வெள்ளி 22 நவ 2019