மின்னம்பலம் மின்னம்பலம்
மாலை 7, வெள்ளி, 14 ஆக 2020

விமர்சனம்: ஆதித்ய வர்மா!

விமர்சனம்: ஆதித்ய வர்மா!

பல மொழிகளிலும் ரிலீஸாகி வெற்றிபெற்றாலும், முழுக்க முழுக்க தமிழ் ரசிகர்களுக்காக உருவாக்கப்பட்டிருக்கும் கதை தான் ஆதித்ய வர்மா.

படத்தின் முக்கிய விஷயம் விக்ரமின் மகன் த்ருவ். அறிமுகமாகும் படத்திலேயே ‘A’ சர்டிஃபிகேட்டுடன் வந்திருக்கிறார். படத்தில் அவர் எப்படி நடித்திருக்கிறார் என்பதே ஆதித்ய வர்மாவின் முக்கியமான எதிர்பார்ப்பு.

கோபத்தைக் கட்டுப்படுத்த முடியாமல், அதற்கு ஒரு நியாயம் கற்பித்துக்கொண்டு தான் செய்வது அனைத்தும் சரி என்ற எண்ணத்துடன் வாழ்ந்து வரும் மருத்துவக் கல்லூரி மாணவர் ஆதித்யா. எல்லா படங்களையும் போலவே, ஒரு ஹீரோயின் வருகிறார். ஆனால், அந்த ஹீரோயின் ஏற்படுத்தும் அலை, ஆதித்யாவின் நீரோட்டத்தை எந்த விதத்திலும் தடுக்கவில்லை. மேலும், அதிகரிக்கிறது என்று சொல்லலாம்.

வீட்டிற்கு நல்ல பையனாக வாழும் ஆதித்யாவின் சிகரெட், மது, போதை மருந்துகள் என எல்லா கெட்ட பழக்கங்களும் ஆதித்யாவின் வீட்டுக்குத் தெரிகிறது. எல்லாவற்றையும் மீறி என் காதலி எனக்கு முக்கியம் என ஓடிச் செல்லும் ஆதித்யாவின் பொறுப்புக்கு காதலியின் வீட்டில் மரியாதை கிடைக்காததால் இருவரும் பிரிய நேர்கிறது. மீண்டும் அவர்கள் எப்போது சேர்கிறார்கள் என்பது தான் கதை.

தெலுங்கில் விஜய் தேவரகொண்டா, இந்தியில் ஷாஹித் கபூர் போன்ற அனுபவம் மிக்க நடிகர்கள் சிறப்பாகக் கையாண்ட கதையை த்ருவ் எப்படி கையாண்டிருக்கிறார் என்ற ஒப்பீடு, இந்தப் படம் அறிவிக்கப்பட்டபோதே தொடங்கியது. ஆனால், அந்த ஒப்பீட்டுக்குள் செல்லவேண்டிய அவசியமே இல்லை.

மற்ற மொழி படங்களைப் பார்க்காமல், ஆதித்ய வர்மா படத்தைப் பார்க்கும் ரசிகர்களுக்கான முழு திருப்தியை த்ருவ் கொடுக்கிறார். படத்தின் ஒவ்வொரு காட்சியிலும் இடம்பெற்றுவிடுவதால், ஹீரோ கதாபாத்திரத்துக்கான கனம் அதிகம். அந்த கனத்தை கைதேர்ந்த நடிகரைப் போல கையாண்டிருக்கிறார்.

த்ருவ் நடித்த சிறந்த காட்சிகள் என சில வருடங்களுக்குச் சொல்லும் வகையில் பல காட்சிகளில் அசத்தியிருக்கிறார். முக்கியமாக பாட்டியிடம் சந்தேகம் கேட்பது, ஒரு கட்டத்தில் அப்பாவுடன் பேசுவது, அண்ணனிடம் சண்டை பிடிப்பது மற்றும் உதவி கேட்பது என படத்தின் முக்கிய காட்சிகளில் முத்திரை பதித்திருக்கிறார்.

காதலிக்காக சண்டையிடும்போது அவள் எவ்வளவு முக்கியம் என்று சொல்லும் காட்சியிலும், காதலியிடமே நீ எனக்கு எவ்வளவு முக்கியம் என விளக்கும் காட்சியிலும் த்ருவ் வெளிப்படுத்தியிருக்கும் நடிப்பு பிரகாசமான எதிர்காலத்தைக் காட்டுகிறது.

த்ருவ் என்ற கேரக்டர் விளையாடுவதற்கான எல்லா இடங்களும் படத்தில் இருப்பதால், மற்ற கேரக்டர்கள் அவரவர் வேலையை மட்டுமே செய்யவேண்டிய நிலை ஏற்பட்டது. எனவே, ஒவ்வொரு காட்சியையும் சலிப்படையச் செய்யாமல் நகர்த்திச் செல்லவேண்டிய பொறுப்பை த்ருவ் சிறப்பாக செய்திருக்கிறார்.

பாட்டி கேரக்டரில் லீலா சாம்சனும், ஹீரோவின் அப்பா கேரக்டரில் ராஜாவும் நிறைவாக நடித்திருக்கிறார்கள்.

ஆதித்ய வர்மா திரைப்படம் தற்கால இளைஞர்கள் எப்படி வாழக்கூடாது என்பதற்கும், எப்படியெல்லாம் தங்கள் வாழ்க்கையை இழந்துவிடக்கூடாது என்பதற்கும் ஒரு உதாரணம். ஆனால், லிப்-லாக் காட்சிக்கும், கொகைன் உறிஞ்சும் காட்சிக்கும், கெட்டவார்த்தைகள் வரும் காட்சிக்கும் கைதட்டி ஆரவாரம் செய்வதைப் பார்த்தால் ‘மாடர்ன்’ உலகம் எப்படி போய்க்கொண்டிருக்கிறது என்பது தெரிகிறது.

வெள்ளி, 22 நவ 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon