மின்னம்பலம் மின்னம்பலம்
மாலை 7, வெள்ளி, 14 ஆக 2020

குண்டு: இசை வெளியீட்டு விழாவில் இயக்குநர் நெகிழ்ச்சி!

குண்டு: இசை வெளியீட்டு விழாவில் இயக்குநர் நெகிழ்ச்சி!

பா.ரஞ்சித் தயாரிப்பில் தினேஷ் நடித்துள்ள திரைப்படம் ‘இரண்டாம் உலகப்போரின் குண்டு’. இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா கடந்த நவம்பர் 20ஆம் தேதி நடைபெற்றது.

பரியேறும் பெருமாள் திரைப்படத்தைத் தொடர்ந்து நீலம் புரொடக்‌ஷன்ஸ் தயாரித்திருக்கும் இந்தப் படத்தை அதியன் ஆதிரை இயக்கியுள்ளார். இதன் இசை வெளியீட்டு விழாவில் பா.ரஞ்சித், இயக்குநர் அதியன் ஆதிரை, இயக்குநர் மாரி செல்வராஜ், படத்தின் கதாநாயகன் தினேஷ், கதாநாயகிகளான ஆனந்தி, ரித்விகா, பாடலாசிரியர் உமாதேவி, இசையமைப்பாளர் தென்மா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

ஏற்கனவே, இந்தப் படத்தின் நிலமெல்லாம், மாவுலியோ மாவுலி என்ற இரு பாடல்கள் வெளியிடப்பட்டிருந்த நிலையில் இருச்சி, இருள் வானம் மற்றும் தலைமுறை ஆகிய மூன்று பாடல்களும் தற்போது வெளியிடப்பட்டுள்ளது.

படத்தின் கதாநாயகன் தினேஷ் இந்த நிகழ்ச்சியில் உரையாற்றும் போது, “சக்ஸஸ் பிசினஸ் குறித்து எல்லாம் எனக்குத் தெரியாது. ஒரு படம் வெற்றி பெற்றதற்குப் பிறகு பேசும்போது எனர்ஜியாக இருக்கும். இந்தப் படத்துக்காக அனைவரும் கடினமாக உழைத்துள்ளோம். படப்பிடிப்பு முடிந்து வீட்டுக்குச் செல்லும்போது சில நாட்கள் எனது மூக்கில் இருந்து ரத்தம் வரும். ஓர் இரும்புக் கடையில் வேலை பார்ப்பவனுக்குள் எவ்வளவு கஷ்டம் இருக்கிறது என்பதை என்னால் உணர முடிந்தது. அவ்வாறு வேலை செய்யும் நபர்கள் ஏழு எட்டு வருடங்களில் மரணமடைந்து விடுவார்கள் என்று இயக்குநர் அதியன் கூறியது ஒரு வலியை எனக்குள் ஏற்படுத்தியது. இந்தப் படத்துக்காகப் பலருக்கும் நன்றி சொல்ல வேண்டும். அனைவருக்கும் நன்றி” என்று கூறினார்.

கதாநாயகி ஆனந்தி பேசும்போது, “ரொம்ப சந்தோஷமா இருக்கு. நீலம் புரொடக்‌ஷன்ஸ் என் சொந்த கம்பெனி மாதிரி. நீலம் புரொடக்‌ஷன்ஸ் தயாரிப்பில் நடிக்க அழைத்தால் கதையே கேட்காமல் நடிப்பேன். ஏன்னா.. கன்டென்ட் அந்த அளவுக்கு ஸ்ட்ராங்கா இருக்கும். இயக்குநர் அதியன் தோழர் ஒரு நல்ல இயக்குநர். அதைவிட மிகச் சிறந்த மனிதர். இந்தப் படத்துக்காகப் படத்தில் பணியாற்றிய அனைவரும் மிகப்பெரிய உழைப்பைப் போட்டிருக்கிறார்கள். நடிகர் தினேஷ் ஒரு மிகச்சிறந்த ஆர்ட்டிஸ்ட்” என்று தனது மகிழ்ச்சியைப் பகிர்ந்துகொண்டார்.

இயக்குநர் மாரி செல்வராஜ், “நீலம் புரொடக்‌ஷன்ஸ் இது போன்ற நிகழ்ச்சிகளைத் தொடர்ந்து நடத்த வேண்டும். இயக்குநர் பா.ரஞ்சித், எப்படி ஒரு மாடு மேய்க்கிறவனை கொண்டுவந்து பரியேறும் பெருமாள் படத்தை இயக்க வைத்தாரோ? அதேபோல் இரும்புக் கடையில் வேலை பார்க்கும் ஒருவரை இப்போது இரண்டாம் உலகப்போரின் கடைசி குண்டு படத்தை இயக்க வைத்துள்ளார். இயக்குநர் அதியன் அவர்களின் அரசியல் எனக்கு மிகவும் பிடிக்கும். இப்படியான ஒருவர் படமெடுத்தால் எப்படி இருக்கும் என்ற ஆசை எனக்குள் இருந்தது. எதைக்கொண்டு தடுத்தாலும் இந்தப் படம் அடைய வேண்டிய இலக்கை அடைந்தே தீரும்” என்று கூறினார்.

படத்தின் இயக்குநர் அதியன் ஆதிரை மிகவும் உணர்வுபூர்வமாகப் பேசினார். அவர் உரையாற்றும்போது, “தோழர் என்ற வார்த்தையை சொன்னதற்காக என்னை வேலையை விட்டு துரத்தி இருக்கிறார்கள். ஆனால் பா.ரஞ்சித் என்னை அதே அடையாளத்தோடு அறிமுகப்படுத்துகிறார். அது நெகிழ்ச்சியாக இருக்கிறது. இரும்புக் கடையில் வேலை செய்யும்போது சுவாசிக்கிற காற்று மிகவும் கொடியது. இரும்புக் கடையில் வேலை செய்கிறவர்கள் எத்தனையோ பேர் வாழ்க்கையை இழந்திருக்கிறார்கள். ஆர்ட் டைரக்டர் ராமலிங்கம் அண்ணன் எனக்கு அப்பாவாகவும் அம்மாவாகவும் இருந்துள்ளார். இரு குழந்தைகளுக்கு அப்பாவாக பா.ரஞ்சித் அண்ணனிடம் வந்து சேர்ந்தேன் அதன்பின் எனக்கு கஷ்டமே வந்ததில்லை. குண்டு படத்தில் ஒரு லாரி டிரைவரின் கதை இருக்கிறது. இரும்புக் கடையில் வேலை செய்கிறவர்களின் வலியை யாரும் கண்டுகொள்வதில்லை. இன்னொருத்தனின் உழைப்பைச் சுரண்டும் சமூகமாகத்தான் இந்தச் சமூகம் இருக்கிறது. இந்த சினிமா உன் யதார்த்தத்தை அழித்துவிடக் கூடாது என்று பா.ரஞ்சித் சொன்னார்.

இந்தப் படம் மிக முக்கியமான ஒரு விஷயத்தைப் பதிவு செய்யும். இந்தச் சமூகத்தில் நடக்கும் எல்லாவற்றின் மீதும் நாம் ஒரு கண் வைக்க வேண்டும் என்பதை இந்தப் படம் உணர்த்தும். இந்தப் படத்தைப் பார்த்துவிட்டு பா.ரஞ்சித், ‘நீலம் புரொடக்‌ஷன்ஸுக்குப் பெரிய வாசலைத் திறந்து வைத்துவிட்டாய்’ என்றார். மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது. இந்தக் கதைக்குள் தினேஷ் வந்ததும் எனக்கு ஒரு கர்வம் வந்தது. ஏன் என்றால் அட்டக்கத்தி படம் வந்தபிறகு எனக்கான கதைகளையும் படம் பண்ணமுடியும் என்ற நம்பிக்கை பிறந்தது.

தோழர் ஆனந்தி அவங்க மனசு போலவே படத்தில் அழகாக நடித்துள்ளார். ரித்விகா என் மனத்துக்கு நெருக்கமான தோழி. அவரும் மிகச்சிறப்பாக நடித்துள்ளார். படம் பார்த்த அனைவரும் முனிஷ்காந்த் நடிப்பைப் பாராட்டி இருக்கிறார்கள். படத்தில் அனைவருமே மிகச்சிறப்பான நடிப்பைக் கொடுத்திருக்கிறார்கள். கேமராமேன் கிஷோர் ரொம்ப நெருக்கமான மனிதர். எமோஷ்னலா நம்மோடு கனெக்ட் ஆகிறவர்களிடம் வொர்க் பண்ணும்போது அது சிறப்பாக வரும். இசை அமைப்பாளர் தென்மா சிறப்பாகப் பணியாற்றியுள்ளார்” என்று கூறி திரைப்படத்தில் பணியாற்றிய அனைவருக்கும் தனது நன்றிகளையும் தெரிவித்தார். இரும்புக் கடைகளில் வேலை செய்பவர்கள், லாரி ஓட்டுநர்கள் படும் அவலங்கள் குறித்து அவர் விளக்கிக் கூறியது அனைவரையும் நெகிழவைத்தது.

இரண்டாம் உலகப்போரின் கடைசி குண்டு திரைப்படம் டிசம்பர் 6ஆம் தேதி வெளியாக இருக்கிறது.

வெள்ளி, 22 நவ 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon