மின்னம்பலம் மின்னம்பலம்
மாலை 7, செவ்வாய், 14 ஜூலை 2020

கூடங்குளம் - 9,000 வழக்குகள்: ஸ்டாலின் வைக்கும் கோரிக்கை!

கூடங்குளம் - 9,000 வழக்குகள்: ஸ்டாலின் வைக்கும் கோரிக்கை!

கூடங்குளம் போராட்டக்காரர்கள் மீதான வழக்கைத் திரும்பப் பெற வேண்டுமென தமிழக அரசுக்கு திமுக தலைவர் ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.

கூடங்குளம் அணுமின் நிலையத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து அப்பகுதியைச் சுற்றியுள்ள பொதுமக்கள் 2011ஆம் ஆண்டு முதல் 2013ஆம் ஆண்டு வரை தொடர்ச்சியாகப் போராட்டங்களை முன்னெடுத்தனர். இந்தப் போராட்டங்கள் இடிந்தகரை என்னும் கிராமத்தில் நடைபெற்றது. அப்போதிருந்த ஜெயலலிதா தலைமையிலான அதிமுக அரசு, போராட்டங்களில் ஈடுபட்ட சுமார் 9,000 பேர் மீது தேசத் துரோகம் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்தது.

ஏழு ஆண்டுகள் ஆகிவிட்ட நிலையிலும் இதுவரை அவர்கள் மீதான வழக்குகள் திரும்பப் பெறப்படவில்லை. தேசத் துரோக வழக்கு பதிவு செய்யப்பட்டவர்கள் தொடர்ச்சியாக நீதிமன்றத்துக்குச் செல்ல வேண்டியுள்ளது. வழக்கு பதிவு செய்யப்பட்டவர்களின் பாஸ்போர்ட்டை அதிகாரிகள் வாங்கிவைத்துள்ளதால் பலரும் பணிக்காக வெளிநாடு செல்ல முடியாமல் அவதிப்பட்டு வருகின்றனர் என்று தி நியூஸ் மினிட் ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.

இந்த நிலையில் கூடங்குளம் அணு உலைக்கு எதிராகப் போராடியவர்கள் மீதான வழக்குகளைத் திரும்பப் பெற வேண்டுமென திமுக தலைவர் ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார். இதுதொடர்பாக அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், “அமைதியான முறையில் கூடங்குளத்தில் போராடியவர்களுக்கு எதிராக அரசியல் ரீதியாகப் போடப்பட்ட வழக்குகளை அரசாங்கம் இன்னும் ரத்து செய்யவில்லை என்பது அதிர்ச்சியளிக்கிறது” என்று தெரிவித்துள்ளார்.

மேலும், “நிலுவையில் உள்ள வழக்குகள் ஆயிரக்கணக்கான மக்களின் வாழ்க்கையையும் வாழ்வாதாரத்தையும் பாதித்துள்ளது. ஆகவே, இந்த வழக்குகள் உடனடியாக திரும்பப் பெறப்பட வேண்டும்” என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

வெள்ளி, 22 நவ 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon