மின்னம்பலம் மின்னம்பலம்
காலை 7, வெள்ளி, 14 ஆக 2020

கோத்தபயாவுக்கு மோடி அனுப்பிய செய்தி!

கோத்தபயாவுக்கு மோடி அனுப்பிய செய்தி!

புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட இலங்கை அதிபர் கோத்தபயவை சில நாட்கள் முன்பு கொழும்பில் சந்தித்துப் பேசினார் இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெயசங்கர். விரைவில் கோத்தபய ராஜபக்‌ஷே இந்தியாவுக்கு வர இருக்கும் நிலையில், பிரதமரின் மோடியின் செய்திகளை சுமந்தே ராஜபக்‌ஷேவை ஜெயசங்கர் சந்தித்திருக்கிறார்.

இதுகுறித்து நேற்று மத்திய அரசு அளித்த விளக்கத்தில்,“இலங்கையின் புதிய அதிபர் தேசிய நல்லிணக்க செயல்முறையை முன்னெடுத்துச் சென்று தமிழ் சமூகத்தின் அபிலாஷைகளை பூர்த்தி செய்ய வேண்டும் என்ற எதிர்பார்ப்பை டெல்லி அடிக்கோடிட்டுக் காட்டியது. சமத்துவம், நீதி, அமைதி மற்றும் கண்ணியம் ஆகியவற்றை தமிழ் சிறுபான்மையினரின் முக்கிய அபிலாஷைகளாக மத்திய அரசு கோடிட்டுக் காட்டியது”என்று மத்திய அரசு தரப்பில் சொல்லப்பட்டிருக்கிறது.

கோத்தபய ராஜபக்‌ஷேவுடனான ஜெய்சங்கரின் சந்திப்பு குறித்து நேற்று (நவம்பர் 21) கருத்து வெளியிட்டுள்ள வெளியுறவுத் துறை அமைச்சக செய்தித் தொடர்பாளர் ரவீஷ் குமார் , “இந்த சந்திப்பின் போது, அமைச்சர் இலங்கையுடனான நெருங்கிய மற்றும் இருதரப்பு உறவுகள் குறித்தும், வரும் ஆண்டுகளில் இதை மேலும் வலுப்படுத்தும் வழிகளைப் பற்றியும் விவாதித்தார். சமத்துவம், நீதி, அமைதி மற்றும் கௌரவத்துக்கான தமிழ் சமூகத்தின் அபிலாஷைகளை பூர்த்தி செய்யும் ஒரு தீர்வை எட்டுவதற்கு இலங்கை அரசாங்கம் தேசிய நல்லிணக்க செயல்முறையை முன்னெடுக்க வேண்டும் என்ற இந்தியாவின் எதிர்பார்ப்பையும் ஜெயசங்கர் கோத்தபயாவிடம் தெரிவித்தார்”என்றார்.

இலங்கையில் இப்போது அமைந்திருக்கும் ராஜபக்‌ஷே சகோதரர்களின் அரசாங்கம் இந்தியாவை விட சீனாவுக்கு மிகவும் நெருக்கம் காட்டுகிறது என்ற கருத்து பற்றி பேசிய ரவீஷ்குமார்,

"இலங்கையுடனான நமது உறவு என்பது , எந்தவொரு அண்டை நாடுகளுடனும், மூன்றாம் நாடுகளுடனான உறவுகளிலிருந்து வேறுபட்டது. இலங்கையுடனான பன்முக உறவு அதன் சொந்த நிலைப்பாட்டில் நிற்கிறது, மேலும் இது நமது புவியியல் அருகாமை மற்றும் வரலாற்று தொடர்புகளில் வேரூன்றியுள்ளது, ”என்று குமார் கூறினார்.

வெள்ளி, 22 நவ 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon