மின்னம்பலம் மின்னம்பலம்
வியாழன், 13 ஆக 2020

‘பேக்-அப்’ சொன்ன எம்.ஜி.ஆர் மகன்!

‘பேக்-அப்’ சொன்ன எம்.ஜி.ஆர் மகன்!

சசிகுமார், மிருணாளினி நடிப்பில் உருவாகி வந்த ‘எம்.ஜி.ஆர் மகன்’ படப்பிடிப்பு முடிவடைந்து, இறுதிக்கட்டப் பணிகள் தொடங்கப்பட்டுள்ளது.

சிவகார்த்திகேயன், சமந்தா, சிம்ரன் நடித்த சீமராஜா படத்தைத் தொடர்ந்து இயக்குநர் பொன்ராம், கதை-திரைக்கதை-வசனம் எழுதி இயக்கும் புதிய படம் எம்.ஜி.ஆர் மகன். இந்தப் படத்தில் சசிகுமார், சத்யராஜ், சரண்யா பொன்வண்ணன், சமுத்திரக்கனி, மிருணாளினி ரவி, சிங்கம் புலி ஆகியோர் நடிக்கின்றனர்.

கிராமத்துப் படங்கள் என்றாலே சசிகுமார்தான் என்னும் அளவுக்குத் தொடர்ந்து ‘வில்லேஜ் சப்ஜெட்டு’களைத் தேர்வு செய்து வரும் சசிகுமார், பொன்ராமுடன் இணைந்து மீண்டும் ஒரு கிராமத்துக் குடும்பக் கதையைத் தரவுள்ளார். பொன்ராம் இயக்கிய வருத்தப்படாத வாலிபர் சங்கம், ரஜினிமுருகன், சீமராஜா ஆகிய மூன்று படங்களும் இதே ஜானரில் உருவான படங்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

‘டிக் டாக்’ மூலம் பிரபலமான மிருணாளினி ரவி, சூப்பர் டீலக்ஸ் படத்தின் மூலம் அறிமுகமானார். அதைத் தொடர்ந்து, சமீபத்தில் தெலுங்கில் வெளியான ‘வால்மீகி’ படத்தில் நாயகியாகவும் நடித்துள்ளார். ஜிகர்தண்டா படத்தின் ரீமேக்கான அந்தப் படத்தில் மிருணாளினி பாத்திரம் பேசப்பட்டது.

ஸ்கிரீன் சீன் நிறுவனம் தயாரிக்கும் இந்தப் படத்தின் படப்பிடிப்பு செப்டம்பர் மாதம் தேனியில் தொடங்கப்பட்டது. ஒரே கட்டமாக நடத்தப்பட்ட படப்பிடிப்பில், 95 சதவிகிதக் காட்சிகளையும் தேனியிலேயே படமாக்கி முடித்துள்ளது படக்குழு. இந்த நிலையில், ‘எம்.ஜி.ஆர் மகன்’ படத்தின் படப்பிடிப்பு முழுமையாக முடிந்துவிட்டதாக, சசிகுமார் தனது ட்விட்டர் பதிவில் தெரிவித்துள்ளார்.

இந்தப் படத்துக்கு ஒளிப்பதிவாளராக வினோத் ரத்தினசாமியும், இசையமைப்பாளராக அந்தோணி தாசனும், விவேக் ஹர்ஷன் எடிட்டிங் பணிகளையும் மற்றும் துரைராஜ் கலை இயக்குநராகவும் பணிபுரிந்துள்ளனர். தற்போது இறுதிக்கட்டப் பணிகளில் கவனம் செலுத்தத் தொடங்கியுள்ள படக்குழு, விரைவில் படத்தின் ரிலீஸ் குறித்த அறிவிப்பைத் தெரிவிக்கவுள்ளது.

வெள்ளி, 22 நவ 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon